தமிழ் சினிமா-2024

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

இந்த வருடத்தின் தொடக்கத்தில் பிரமயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் என அடுத்தடுத்து வெளியான மலையாள திரைப்படங்கள் தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதிலும் தமிழ்நாட்டின் பல இடங்களில், அந்த திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்படாமல் மலையாளத்திலேயே வெளியிடப்பட்டது.

அதேபோல, தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் கில்லி, வேட்டையாடு விளையாடு, தீனா போன்ற திரைப்படங்கள் மீண்டும் (Re-release) வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றன.

இதனால், “மலையாளத்தைப் போல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் தமிழில் குறைவு, பாக்ஸ் ஆபிஸ் வசூலை மட்டுமே குறிவைக்காத தரமான படங்கள் தமிழில் அதிகம் வெளியாக வேண்டும், ரீ-ரிலீஸ் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு கூட புதிய தமிழ் படங்களுக்கு இல்லை, பெரிய நட்சத்திரங்கள் அதிக படங்கள் நடிக்கவேண்டும்” போன்ற விமர்சனங்கள் எழுந்தன.

தமிழ் சினிமா-2024

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால் இப்போது வருடத்தின் இறுதியில் பார்க்கும்போது, ‘லப்பர் பந்து’, ‘லவ்வர்’, ‘வாழை’, ‘மகாராஜா’, ‘கருடன்’, ‘மெய்யழகன்’, ‘போகுமிடம் வெகுதூரமில்லை’, ‘ஜமா’, ‘நந்தன்’, ‘பிளாக்’ போன்ற கதை- திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்கள், 2024-ஆம் ஆண்டில் அதிகம் வெளியாகிருப்பதைக் காண முடிகிறது.

மறுபுறம், அதிக பட்ஜெட்டில், நட்சத்திரப் பட்டாளத்தோடு வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை மக்களிடம் பெறவில்லை.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திரைப்படங்கள்

தமிழ் சினிமா-2024

பட மூலாதாரம், Lyca/X

படக்குறிப்பு, லால் சலாம் திரைப்படம் முதலில் அறிவிக்கப்பட்டபோது, ரஜினிக்கு இதில் கௌரவ வேடம் என்று சொல்லப்பட்டது

ஒரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது முதலில் அதில் நடிப்பது யார் என்பதைப் பொறுத்தே தொடங்குகிறது. அதுமட்டுமல்லாது இயக்குநர், இசையமைப்பாளர் யார் என்பதைப் பொருத்தும் சில படங்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகலாம்.

லால் சலாம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரது நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’.

இந்தத் திரைப்படம் முதலில் அறிவிக்கப்பட்டபோது, ரஜினிக்கு இதில் கௌரவ வேடம் என்று சொல்லப்பட்டதும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனதும் ஒருவித எதிர்பார்ப்பு உருவாக காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் இது ஒரு ‘ரஜினிகாந்த் படம்’ என்றே விளம்பரப்படுத்தப்பட்டது.

திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் (ஜனவரி 26), “என் அப்பா சங்கி இல்லை” என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதும், சில நாட்கள் கழித்து அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் ரஜினிகாந்த், “சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை” என்று செய்தியாளர்களிடம் கூறியதும் திரைப்படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

ஆனால், பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான அந்தத் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

“ரஜினிகாந்த் மட்டும் இல்லையென்றால் இப்படம் இன்னும் சுமாராகவே இருந்திருக்கும், இந்தப் படம் பலமுறை பார்த்துச் சலித்த பழைய முறையையே பின்பற்றுகிறது, படத்தின் முதல் எதிரி, அதன் நீளம்தான்” என ஊடக விமர்சனங்கள் தெரிவித்தன.

தமிழ் சினிமா-2024

பட மூலாதாரம், IndianTheMovie/X

படக்குறிப்பு, இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியானது

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன் – 2: Zero Tolerance’ கடந்த ஜூலை மாதம் பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியானது.

லைகா தயாரிப்பில், கமலுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் போன்ற நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

‘பான் இந்தியா’ என்ற சொல் பிரபலம் அடைவதற்கு முன்னரே, 1996இல் வெளியான இந்தியன் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது இந்தி மற்றும் தெலுங்கு, மலையாள மொழிகளிலும் வெற்றிபெற்றது.

ஆனால், ‘பான் இந்தியா’ என்ற அடையாளத்துடன், இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வெளியான ‘இந்தியன்-2’ எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

“முதல் பாகத்தில் அமைதியாக அதிரடி காட்டிய இந்தியன் தாத்தா இதில் அதிகம் பேசுகிறார், ஆனால் அவை மனதில் நிற்கவில்லை; முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது திரைக்கதையில் தடுமாற்றம் உள்ளது; பார்வையாளர்கள் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான அம்சங்கள் எதுவும் இல்லை” என இந்தியன்-2 ஊடங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

முதல் படம் வெளியானபோது இருந்த ரசிகர்களின் மனநிலை, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதேபோல இருக்காது என்பதை ‘இந்தியன்-2’ நிரூபித்தது.

தி கோட்

தமிழ் சினிமா-2024

பட மூலாதாரம், Twitter : Aishwarya Kalpathi

படக்குறிப்பு, விஜயின் 68வது திரைப்படமாக வெளியான ‘தி கோட்’

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் துவங்குவதாக அறிவித்தார். அந்தக் கட்சி 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமென்று தெரிவித்த நடிகர் விஜய், ஒப்புக்கொண்டுள்ள இரண்டு படங்களை மட்டும் முடித்துக்கொடுத்துவிட்டு அரசியல் பணிகளுக்காக சினிமாவில் நடிப்பதைக் நிறுத்தப்போவதாகவும் அறிவித்தார்.

இதனால் அவரது 68வது திரைப்படமான ‘தி கோட்’ மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

அஜீத் ரசிகர்களுக்கு இன்றும் விருப்பமான, மறக்க முடியாத திரைப்படமாக இருப்பது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மங்காத்தா’. எனவே வெங்கட் பிரபுவுடன் விஜய் கூட்டணி சேர்வதால், தங்களுக்கும் ‘மங்காத்தா’ போன்ற ஒரு திரைப்படம் கிடைக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

திரைப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார், அதில் ஒரு வேடத்திற்கு டி-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும், படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜயகாந்த் தோன்றுகிறார் என்பதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தன.

ஆனால், பெரும் பொருட்செலவில், விஜயுடன் பிரஷாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, என பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான ‘தி கோட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

கங்குவா

தமிழ் சினிமா-2024

பட மூலாதாரம், StudioGreen/FB

படக்குறிப்பு, கங்குவா திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மிகக் கடுமையான விமர்சனங்கள் வெளியாகின

சிறுத்தை சிவா இயக்கத்தில், பெரும் பொருட்செலவில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் சூர்யா நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்தபோதே, அது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

காரணம், சிறுத்தை சிவாவின் முந்தைய திரைப்படமான ‘அண்ணாத்தே’. தமிழ் சினிமாவில் அண்ணன் – தங்கை சென்டிமென்டிற்கு அழிவேயில்லை என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

‘கங்குவா’ திரைப்பட வெளியீட்டிற்கு முன், படக்குழு அதன் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் பேசியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன. குறிப்பாக சூர்யா, ‘கங்குவா திரைப்படம் நெருப்பு போல இருக்கும்’ என்றும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ‘கங்குவா 2000 கோடி வரை வசூல் செய்யும்’ மற்றும் ‘திரைப்படத்தின் வெற்றி விழா நிச்சயம் நடத்தப்படும்’ என்று கூறியதும் வைரலானது.

ஆனால், திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மிகக் கடுமையான விமர்சனங்கள் வெளியாகின. “படத்தின் முதல் பகுதி முடிவதற்குள் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகியுள்ளன, ஆனால் திரைப்படத்தின் நேர்மறையான அம்சங்கள் யாரும் பேசவில்லை” என நடிகை ஜோதிகா கவலை தெரிவித்திருந்தார்.

இதனால், ‘ஒரு திரைப்படத்திற்கு கிடைக்கும் எதிர்மறையான விமர்சனம், அதன் வசூலைப் பாதிக்கிறதா’ என்ற கோணத்தில் விவாதங்கள் எழுந்தன.

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, திரையரங்க வாயிலில் இருந்தபடி பார்வையாளர்களின் கருத்துகளைப் பதிவுசெய்து வெளியிட கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென தயாரிப்பாளர்கள் கோரினர்.

‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியான பிறகு, எதிர்மறையான விமர்சனங்கள் மேலும் அதிகரித்தன. திரைப்படத்தின் சிறு குறைகள் கூட ரசிகர்களால் இணையத்தில் விவாதிக்கப்பட்டன.

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள்

தமிழ் சினிமா-2024

பட மூலாதாரம், @Dir_Nithilan

படக்குறிப்பு, 2024இல் வெளியான மகாராஜா, லப்பர் பந்து, வாழை, கருடன் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன

“கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்தால், அதை ‘ஆர்ட் சினிமா’, இவையெல்லாம் திரைப்பட விழாக்களுக்கு தான் சரிப்பட்டு வரும் என்று விமர்சிப்பார்கள். ஆனால் இந்த வருடம் ‘கொட்டுக்காளி’ போன்ற சோதனை முயற்சி படங்களுக்கு கூட வரவேற்பு கிடைத்துள்ளது ஆரோக்கியமான ஒன்று” என்கிறார் குட் நைட் திரைப்படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.

‘லப்பர் பந்து’ திரைப்படத்தைக் குறிப்பிடும் அவர், “மக்களுக்கான அரசியலை மிகவும் ஜனரஞ்சகமான முறையில் பேசிய திரைப்படம் அது. நட்சத்திரங்கள் இல்லாத ஒரு திரைப்படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் சென்று பார்த்தது, ஓடிடியில் வெளியான பிறகும் கூட திரையரங்குகளில் தொடர்ந்து ஓடியது என அந்த திரைப்படம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது” என்கிறார்.

மெய்யழகன் படத்தைப் பற்றி பேசும் விநாயக், “ஏதேதோ காரணங்களுக்காக சொந்த ஊரை விட்டு நகரத்திற்கு வந்து வாழும் பலரும் அரவிந்த்சாமி நடித்த ‘அருள்மொழி வர்மன்’ கதாபாத்திரத்தோடு தங்களை பொருத்திப்பார்க்க முடிந்தது.” என்கிறார்.

அதேபோல ஜமா திரைப்படத்தில் பார்த்த கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை இதற்கு முன் நாம் பார்த்ததில்லை என்கிறார் அவர்.

ஆனால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த சில திரைப்படங்கள் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடாமல், ஓடிடியில் வெளியான பிறகு பெரும் வரவேற்பு பெற்றதைக் ஒப்புக்கொள்ளும் விநாயக், “இந்த வருடம் இத்தனை திரைப்படங்கள் கவனம் பெற்றதே மாற்றத்தை நோக்கிய படிதான்.” என்கிறார்.

1000 கோடி, 500 கோடி இலக்கு என்பதைத் தாண்டி, மக்களுக்கான அரசியலை மக்களுக்கு புரியும் விதத்தில் பேசினால் வெற்றி பெறலாம் என்பதை படைப்பாளிகளுக்கு இந்த வருட தமிழ் சினிமா உணர்த்தியுள்ளது என்று கூறுகிறார் விநாயக்.

தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தமிழ் சினிமா-2024

பட மூலாதாரம், Prince Pictures

படக்குறிப்பு, மக்களுக்கான அரசியலை மிகவும் ஜனரஞ்சகமான முறையில் பேசிய திரைப்படம் லப்பர் பந்து என்கிறார் இயக்குநர் விநாயக்

“அமரன், மகாராஜா, லப்பர் பந்து, வாழை, கருடன் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. ‘பான் இந்தியா’ என்ற மாய பிம்பத்தை விலக்கி வைத்துவிட்டு பார்த்தால், இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு வெற்றிகரமான வருடமே” என்கிறார் பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகருமான அவினாஷ் ராமச்சந்திரன்.

கடந்த வருடம் (2023) டாடா, குட்நைட், பார்க்கிங், சித்தா போன்ற சில திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், லியோ, ஜெயிலர், பொன்னியின் செல்வன்-2 போன்ற பெரிய திரைப்படங்களே தமிழ் சினிமாவின் முகமாக இருந்தன எனக் கூறும் அவினாஷ், “இந்த வருடம் அந்த நிலை மாறியுள்ளது” என்கிறார்.

“பெரிய நட்சத்திரங்கள், பட்ஜெட், இதையெல்லாம் தாண்டி, நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களை நோக்கி ரசிகர்கள் திரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். நடிகர்களைக் கடந்த ஒரு திரைப்பட ரசனை இங்கு உருவாகி வருகிறது.”

“தெலுங்கு சினிமா போல அதீத கமர்ஷியல் பக்கம் செல்லாமல், மலையாள சினிமா போலவும் அல்லாமல், நல்ல கதைகளை ஜனரஞ்சமாக சொன்ன விதத்தில், 2024இல் தனித்து நிற்கிறது தமிழ் சினிமா” என்கிறார் அவினாஷ்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.