மன்னாரில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

by wp_fhdn

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை இன்று (30) காலை மன்னார் பொலிஸார் மீட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன சாந்திபுரம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய கூலித் தொழிலாளி என அவரின் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு (வயது-59) என்ற குடும்பஸ்தர் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் அவரை குடும்ப உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கூலித்தொழிலாளியான குறித்த நபர் இன்று (30) மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் சடலமாக மிதந்த நிலையில், மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத் பார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு (வயது-59) என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டார்.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்