நோபல் பரிசை பெற்ற அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார். அவருக்கு வயது 100.
கார்டரின் இறப்பை அவரது அறக்கட்டளையான கார்டர் சென்டர் உறுதிப்படுத்தியுள்ளது.
”ஜார்ஜியாவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க கார்டர் அமைதியாகக் காலமானார்” என கார்டர் சென்டர் தெரிவித்துள்ளது.
”எனது தந்தை ஒரு ஹீரோ. எனக்கு மட்டுமல்ல அமைதி, மனித உரிமை, தன்னலமற்ற அன்பு ஆகியவற்றை நம்புவர்களுக்கு அவர் ஒரு ஹீரோ” என ஜிம்மி கார்டரின் மகன் சிப் கார்டர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் 39ஆவது அதிபராக 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்டர் பதவி வகித்தார். 100 வயதான அவர், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த முன்னாள் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார்.
அவரது பதவி காலத்தில் வெளியுறவுக் கொள்கை தொடர்பாகப் பல பிரச்னைகளை எதிர்கொண்டார்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், மீண்டும் அதிபராகும் முயற்சியில் ரொனால்ட் ரீகனிடம் தோல்வியடைந்தார்.
மெலனொமா எனும் தோல் புற்றுநோய் அவருக்கு இருந்தது. மெலனோமா அவரது கல்லீரல் மற்றும் மூளைக்குப் பரவியது. கடந்த ஆண்டு அவரது மருத்துவச் சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து, அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டது.
தனது மனிதாபிமான செயல்களால் நோபல் பரிசை ஜிம்மி கார்டர் பெற்றார். அமெரிக்க அதிபராக அவரது பதவி காலம் முடிந்தபிறகு நோபல் பரிசை பெற்றார்.
100 வயதில் காலமான முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரை “கொள்கை, நம்பிக்கை மற்றும் பணிவு கொண்டவர்” என்று கூறி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
சக ஜனநாயக கட்சி உறுப்பினரான கார்டரை “அன்புள்ள நண்பர்” என்று அழைத்த பைடன், வாஷிங்டன் டிசியில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், ஜிம்மி கார்டருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
”நம் நாட்டிற்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்த சவால்களை ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி எதிர்கொண்டர். மேலும் அவர் அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். அதற்காக, நாம் அனைவரும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.” என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.