தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

தென் கொரிய விமான விபத்துக்கு பறவைகள் மோதியது தான் காரணமா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்த விமான விபத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
  • எழுதியவர், கிரேஸ் டீன்
  • பதவி, பிபிசி நியூஸ்

தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலை விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

‘ஜேஜூ ஏர்’ விமானம், தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் இருந்து வெளியேறி சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

தாய்லாந்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த விமானத்தில் 181 பேர் இருந்தனர். அவர்களில் 179 பேர் இறந்துள்ளனர், அதே நேரத்தில் இரண்டு பணியாளர்கள் விமானத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், பறவைகள் விமானம் மீது மோதியிருக்கலாம் அல்லது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இந்த விபத்து பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

விபத்துக்கு பறவை மோதியது ஒரு காரணமா?

7C2216 என்ற விமானம், கொரியாவின் மிகவும் பிரபலமான பட்ஜெட் விமான நிறுவனமான ‘ஜேஜூ ஏர்’ மூலம் இயக்கப்படும் போயிங் 737-800 ரக விமானமாகும்.

விமானம் உள்ளூர் நேரப்படி சுமார் 09:00 மணிக்கு முவான் விமான நிலையத்தை வந்தடைந்தது.

தென் கொரிய போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூற்றுப்படி, “விமானம் தரையிறங்க முயற்சித்தது, ஆனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் ‘பறவைகள் விமானத்தில் மோதுவதற்கான வாய்ப்பு உள்ளது’ என்ற எச்சரிக்கையை வழங்கியதைத் தொடர்ந்து, அந்த முயற்சியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”.

சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, விமானி ‘மேடே’ (Mayday- ஒரு அவசரகால செயல்முறை வார்த்தை) அறிவித்தார் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் விமானத்தை எதிர் திசையில் இருந்து தரையிறக்க அனுமதி அளித்ததாக அதிகாரி கூறினார்.

விமானம், அதன் சக்கரங்கள் அல்லது வேறு எந்த தரையிறங்கும் கியரையும் பயன்படுத்தாமல், ஓடுதளத்தின் தரையைத் தொடுவதைப் போல் ஒரு காணொளி வெளியாகியுள்ளது.

ஓடுபாதையில் சறுக்கியவாறு செல்லும் அந்த விமானம், சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதையும் அதில் காண முடிகிறது.

தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப்பிடம் பேசிய ஒருவர், “ஒரு பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து தொடர் வெடிப்புகளின் சத்தம் கேட்டதாகவும்” கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளில், வானை நோக்கி எழும்பும் புகை மூட்டத்துடன் விமானம் எரிவதைக் காண முடிகிறது. அதைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

தென் கொரிய விமான விபத்துக்கு பறவைகள் மோதியது தான் காரணமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விமானத்தின் வால் பகுதி தவிர, மற்ற பகுதிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மோசமாக இருந்தன என்று முவான் தீயணைப்புத் தலைவர் கூறுகிறார்

முவான் தீயணைப்புத் துறையின் தலைவரான லீ ஜியோங்-ஹியூன் ஊடகங்களிடம் பேசியபோது, “விமானத்தின் வால் பகுதியை அடையாளம் காண முடிந்தது, ஆனால் விமானத்தின் மற்ற பகுதிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மோசமாக இருந்தன” என்று கூறினார்.

பறவை மோதியதும் மோசமான வானிலையும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அவர் கூறினார்.

விமானத்தில் இருந்து அதன் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த கருப்புப் பெட்டி சேதமடைந்துள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் ஊடக முகமையின் செய்தியின்படி, விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது உறவினருக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ‘விமானத்தின் இறக்கையில் ஒரு பறவை சிக்கிக்கொண்டது என்றும் விமானம் தரையிறங்க முடியவில்லை’ என்றும் கூறியுள்ளார்.

ஆனால், உண்மையில் விமானத்தின் மீது பறவைகள் ஏதேனும் மோதியதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

‘ஜேஜூ ஏர்’இன் நிர்வாகத்தின் தலைவர், “இந்த விபத்திற்கு பின்னால், விமானத்தின் பராமரிப்பு தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லை” என்று கூறியதாக யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

விமானத்தின் தலைமை விமானி 2019-ஆம் ஆண்டு முதல் இந்த பணியில் உள்ளவர் என்றும், 6,800 மணி நேரத்திற்கும் அதிகமான விமான அனுபவம் பெற்றவர் என்று தென் கொரிய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பிபிசியிடம் பேசிய விமானப் போக்குவரத்து நிபுணரும், ஏர்லைன் நியூஸின் ஆசிரியருமான ஜெஃப்ரி தாமஸ், “தென் கொரியாவும் அதன் விமான நிறுவனங்களும் விமான தொழில்துறையின் நடைமுறைகளை சிறப்பாக பின்பற்றுவதற்கு பெயர்போனவை. அந்த விமானம் மற்றும் விமான நிறுவனம், இரண்டுமே கடந்த காலங்களில் சிறந்த மற்றும் பாதுகாப்பான பயணங்களை வழங்கியுள்ளன” என்று கூறினார்.

“ஆனால் இந்த துயரமான சம்பவம் குறித்த பல விஷயங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.” என்றும் அவர் தெரிவித்தார்.

அதிகாரிகள் இதுவரை குறைந்தது 88 உடல்களை அடையாளம் கண்டுள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகாரிகள் இதுவரை குறைந்தது 88 உடல்களை அடையாளம் கண்டுள்ளனர்

விமானத்தில் பறவைகள் மோதுவதால் ஏற்படும் விபத்து

வானில் பறக்கும் விமானமும் பறவையும் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் மிகவும் பொதுவானவை. 2022இல் பிரிட்டனில் 1,400க்கும் மேற்பட்ட இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 100 மட்டுமே விமானத்தை பாதித்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில் மிகவும் பிரபலமான சம்பவம், 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏர்பஸ் விமானம் ஒன்றின் மீது பறவைகள் மோதியதால், அது நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஏவியேஷன் (Aviation) துறை பேராசிரியர் டக் ட்ரூரி, ‘The Conversation’ இணையதளத்திற்கு எழுதிய கட்டுரையில் , “போயிங் விமானங்களில் டர்போஃபன் இயந்திரங்கள் உள்ளன, அவை பறவைகள் மோதினால் கடுமையாக சேதமடையக்கூடும்” என்று கூறியுள்ளார்.

அதிகாலை அல்லது சூரிய அஸ்தமனத்தின் போது பறவைகள் அதிக சுறுசுறுப்புடன் பறக்கும். அத்தகைய சமயங்களில் விழிப்புடன் இருக்க விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

ஆனால் சில விமானப் போக்குவரத்து நிபுணர்கள், பறவைகள் மோதியதால் முவான் விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருக்குமா என கேள்வி எழுப்புகின்றனர்

“பொதுவாக பறவைகள் மோதுவதால் மட்டுமே, ஒரு விமானம் தனது கட்டுப்பாட்டை முழுமையாக இழக்காது” என்று தாமஸ் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய ஆஸ்திரேலிய விமான பாதுகாப்பு நிபுணர் ஜெஃப்ரி டெல், “பறவைகள் மோதுவதால் ‘லேண்டிங் கியர்’ செயல்படாமல் போவதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை.” என்று கூறியுள்ளார்.

ஓடுபாதையை சுற்றியுள்ள பகுதியில் விமானத்தின் பாகங்கள் மற்றும் அதில் பயணித்தவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஓடுபாதையை சுற்றியுள்ள பகுதியில் விமானத்தின் பாகங்கள் மற்றும் அதில் பயணித்தவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர்

விமானத்தில் பயணித்தவர்கள் குறித்த விவரம்

விமானத்தில் 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். பயணிகளில் இருவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் எஞ்சியவர்கள் தென் கொரியர்கள் என்று நம்பப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில் பலர் தாய்லாந்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழித்துவிட்டு திரும்பி வந்தவர்கள் என்று கருதப்படுகிறது.

அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 179 ஆக உள்ளது. தென் கொரிய வரலாற்றில் மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.

விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் நான்கு பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

அதிகாரிகள் இதுவரை குறைந்தது 88 உடல்களை அடையாளம் கண்டுள்ளனர்.

இறந்தவர்களில் ஐந்து பேர் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள். ‘பயணிகளில் மிகவும் இளையவர் ஒரு மூன்று வயது ஆண் குழந்தை மற்றும் மூத்தவர் ஒரு 78 வயது முதியவர்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“விமான பணியாளர் குழுவில் இருந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இந்த விபத்தில் உயிர் தப்பினர். விபத்துக்குப் பிறகு, விமானத்தின் வால் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று தென் கொரியாவின் தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகளின் ஒரு பகுதியாக 490 தீயணைப்பு ஊழியர்கள் மற்றும் 455 காவல்துறை அதிகாரிகள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓடுபாதையை சுற்றியுள்ள பகுதியில் விமானத்தின் பாகங்கள் மற்றும் அதில் பயணித்தவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமானத்தில் 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விமானத்தில் 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர்

விபத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

தென் கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக், முவானில் ஒரு சிறப்பு பேரழிவு மண்டலத்தை அறிவித்துள்ளார்.

முவான் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தங்கள் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் நம்பிக்கையில் விமான நிலையத்தில் குவிந்தனர்.

விமான நிலைய அதிகாரிகளும் செஞ்சிலுவைச் சங்கமும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிப்பதற்காக, விமான நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட கூடாரங்களை அமைத்துள்ளன.

அழுகைச் சத்தம் விமான நிலைய டெர்மினல் முழுவதும் எதிரொலித்தது. உடல்களை அடையாளம் காண எவ்வளவு நேரம் ஆகுமோ என்று சிலர் விரக்தியடைந்துள்ளனர்.

தற்காலிக அதிபர் சோய் சாங்-மோக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தென் கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் சாங்-மோக்

‘ஜேஜூ ஏர்’ நிறுவனம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதன் தலைமை நிர்வாகி, “எங்கள் விமான நிறுவனத்தின் வரலாற்றில் விபத்துகளே ஏற்பட்டது இல்லை” என்று கூறினார்.

‘ஜேஜூ ஏர்’ 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது தான் அதன் ஒரே அபாயகரமான விபத்து என்று நம்பப்படுகிறது.

விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் கூறுகையில், “இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்றார்.

தென் கொரியாவில் அடுத்த ஏழு நாட்களுக்கு ‘தேசிய அளவில் துக்க அனுசரிக்கப்படும்’ என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஏழு நாட்களுக்கு அரசு அலுவலகங்களில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.