இந்தியா வந்த ஜிம்மி கார்ட்டர் இந்த கிராமத்தை தேடிச் சென்றது ஏன்? என்ன நடந்தது?
- எழுதியவர், ஓம்கார் கரம்பெல்கர்
- பதவி, பிபிசி மராத்தி
“கார்ட்டர் எங்கள் கிராமத்திற்கு வந்த போது, அவருக்கு ஹரியான்வி தலைப்பாகை (ஹரியாணா மக்களின் பாரம்பரிய மிக்க தலைப்பாகை) அணிவிக்கப்பட்டது. அவரது மனைவிக்கு முக்காடு மற்றும் பர்தா வழங்கப்பட்டது.”
குருகிராமில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ட்டர்புரி கிராமத்தில் வசிப்பவர்கள், இதுபோன்ற நினைவுகளை உங்களிடம் மீண்டும் மீண்டும் சொல்ல முடியும்.
சாணக்யபுரி, சாரதாபுரி, விகாஸ்புரி மற்றும் கல்யாண்புரி.
டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளின் இதுபோன்ற ஊர் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியும். ஆனால், இந்தியாவில் எந்த ஒரு கிராமத்துக்கும் அமெரிக்க அதிபரின் பெயர் சூட்டப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இன்று குருகிராம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகிவிட்ட அந்த கிராமத்தின் பெயர் கார்ட்டர்புரி.
அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டருக்கும் இந்த கிராமத்திற்கும் பழைய உறவு உள்ளது. இந்த உறவின் காரணமாக, இந்த கிராமத்தின் பெயர் கார்ட்டர்புரி என மாற்றப்பட்டுள்ளது.
ஜனவரி 3, 1978 அன்று, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் தனது மனைவி ரோசலின் கார்டருடன் இந்த கிராமத்துக்கு வருகை தந்தார். இன்று இந்த கிராமத்தின் சூழல் மாறிவிட்டது. அந்த கிராம பஞ்சாயத்து தற்போது குருகிராம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ‘கார்ட்டர்’ மற்றும் அவரது புகழ்பெற்ற பயணத்தின் நினைவுகள் கிராம மக்களின் மனதில் இன்னும் உள்ளன.
ஜிம்மி கார்டரின் தாய் லில்லியன் கார்ட்டர் இந்தியாவில் செவிலியராகப் பணிபுரிந்தார். இவர் மும்பையில் உள்ள விக்ரோலியில் பணியாற்றி வந்தார். இந்த கிராமத்திற்கு லில்லியன் கார்ட்டர் வந்துள்ளார் என்று பலர் நம்புகிறார்கள். அப்போது இந்த கிராமத்தின் பெயர் தௌலத்பூர் நசிராபாத்.
1978 ஜனவரியில் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்த போது, இந்தக் கிராமத்துக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜிம்மி கார்டரின் தாய் லில்லியன் கார்ட்டர் இந்தியாவில் செவிலியராகப் பணிபுரிந்தார். இவர் மும்பையில் உள்ள விக்ரோலியில் பணியாற்றி வந்தார். இந்த கிராமத்திற்கு லில்லியன் கார்ட்டர் வந்துள்ளார் என்று பலர் நம்புகிறார்கள். அப்போது இந்த கிராமத்தின் பெயர் தௌலத்பூர் நசிராபாத்.
1978 ஜனவரியில் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்தபோது, இந்தக் கிராமத்துக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.
“ஜிம்மி கார்ட்டர் எங்கள் ஊருக்கு கடிதம் எழுதுவார்”
இன்று கார்ட்டர்புரிக்கு சென்றால் பழைய வீடுகள் இருந்த இடங்களில் புதிய வீடுகள் கட்டப்பட்டிருப்பது தெரியும்.
பெரிய சௌபால் பஞ்சாயத்து கட்டடம் கிராமத்தில் உள்ளது.
32 ஆண்டுகளுக்கு முன்பு, அக்கிராமத்திற்கு கார்ட்டர் வருகை தந்தபோது அங்கு இருந்தவர்களில் மிகச் சிலரே இன்று உயிருடன் வாழ்கின்றனர்.
வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான மக்கள் கிராமத்தை சுற்றி குடியேறியுள்ளனர். கிராமத்தில் அனைத்து வகையான கடைகளும் மற்றும் ஏடிஎம் வசதிகளும் உள்ளன.
பஞ்சாயத்து கட்டடத்திற்கு எதிரில் மோதிராம் என்ற நபர் டீக்கடை நடத்தி வருகிறார். கார்ட்டர் கிராமத்திற்கு வந்த போது, மோதிராமும் அங்கு இருந்தார்.
“அந்த நாளை எங்களால் மறக்க முடியாது. கார்ட்டர் கிராமத்திற்கு வருவதற்கு பல வாரங்களுக்கு முன்பு கிராமத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது சுற்றிலும் வயல்வெளிகள் இருந்தன, ஆனால் இப்போது வயல்வெளி இல்லாமல் போய்விட்டது. இப்போது எங்கு பார்த்தாலும் வீடுகள் மட்டுமே காணப்படுகின்றன. கிராமத்தில் ஜாட், ஹரிஜன், யாதவ் மற்றும் பஞ்சாபி மக்கள் வாழ்கின்றனர்” என்று மோதிராம் கூறுகின்றார்.
அமர் சிங் பாகேல் என்பவர் மோதிராம் கடைக்கு அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். கிராமத்தின் பெரியவர்களில் ஒருவரான அமர் சிங் பாகேல், கார்ட்டரின் வருகையைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவர்.
கார்ட்டர் வருகை புரிந்த போது பாகேலும் அங்கு இருந்தார்.
பாகேல், பஞ்சாயத்து உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரது தந்தை பூர்ணா சிங்கும் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்துள்ளார்.
அமர் சிங் பாகேல் கூறுகையில், “ஜிம்மி கார்டரை எங்கள் கிராமத்தின் உறுப்பினராக நாங்கள் கருதுகிறோம். அவருடைய பல கடிதங்கள் பஞ்சாயத்துக்கு வந்துள்ளது. பஞ்சாயத்தும் அவருக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளது. ஆனால் எங்கள் கிராமம் நகராட்சியுடன் இணைந்த பிறகு, இந்தக் கடிதப் போக்கு நின்றுவிட்டது”என்கிறார்.
ஜனவரி 3-ஆம் தேதி நடந்தது என்ன?
கார்ட்டர் தௌலத்பூர் நசிராபாத்துக்கு வந்தபோது, அன்றைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் கிட்டத்தட்ட ஹரியாணா அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் இந்தக் கிராமத்துக்கு வந்திருந்தனர், என்று அமர் சிங் பாகேல் தெரிவித்தார்.
“அவர் கிராம பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்துக் கட்டடத்துக்கு அருகே இருந்த பெரிய கட்டடத்தை பார்த்தார். கார்ட்டர் தலைமையில் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. பின்னர் கார்ட்டரே இந்த கிராமத்தை தத்தெடுத்து இதனை மேம்படுத்த விருப்பம் தெரிவித்தார். ஆனால் நாங்கள் இந்த கிராமத்தை மேம்படுத்துவோம்” என்று மொரார்ஜி தேசாய் கூறியதாக பாகேல் தெரிவித்தார்.
மேலும் “ரோசலின் மற்றும் ஜிம்மி கார்ட்டர் எங்கள் கிராமத்திற்கு வந்த போது அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். எங்கள் கிராமத்தின் வரலாற்றில் அது ஒரு உன்னதமான தருணம், அதை நாங்கள் ஒருபோதும் மறக்க முடியாது.அதனால் கிராம மக்கள், கிராமத்தின் பெயரையும் கார்ட்டர்புரி என்று மாற்றினர்”என்றும் அவர் தெரிவித்தார்.
“ரோசலினுக்கு முக்காடு போடுவது எப்படி என்று கிராமத்து பெண்களால் கற்றுக் கொடுக்கப்பட்டது. கார்ட்டர் ரோசலினின் முக்காடுகளை அவ்வப்போது உயர்த்தி, அவரது முகத்தை பார்ப்பார். மேலும் கிராமத்தில் உள்ள ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி அவருக்கு மென்மையான மற்றும் லேசான காலணிகளை பரிசாக வழங்கினார்”என்றும் அந்நாளை பாகேல் நினைவு கூர்ந்தார்.
இன்றைய கார்ட்டர்புரி
அமெரிக்க அதிபர் கார்ட்டர், பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் அனைத்து அமைச்சர்களின் வருகைக்கு பிறகு கிராமத்தின் சூழலே மாறும் என கிராம மக்கள் கருதினர்.
ஆனால் கிராமத்தின் நிலையில் பெரிய வித்தியாசம் ஏற்படவில்லை என இன்றும் மக்கள் கருதுகின்றனர்.
குருகிராமின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது, இந்தப் பகுதி பின் தங்கியுள்ளதாகத் தெரிகிறது. மாநகராட்சியில் இணைந்த பிறகும் கிராமத்தின் வளர்ச்சியில் பெரிய மாற்றம் இல்லை.
“தொடக்கத்திலிருந்தே எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எங்கள் கிராமத்தில் விவசாயம் மறைந்து, இப்போது எங்களைச் சுற்றிலும் பிற துறைகள் வளர்ந்துள்ளன. குடிநீர் மிகவும் அசுத்தமாக உள்ளது. குடிநீர் மாசுபாட்டால் கிராம மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். எங்கள் ஊர் பெண்களுக்கென தனி பள்ளியை அரசு உருவாக்க வேண்டும். தொடக்கப் பள்ளியிலிருந்தே, எங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில வழி பள்ளிகள் தேவை. கிராமத்திற்கு ‘சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்’கிடைக்க வேண்டும்” என்று அமர் சிங் கூறுகின்றார்.
விவசாயம் முடிவுக்கு வந்த பிறகு, கிராம மக்கள் தற்போது சிறு தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஒருவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார், ஒருவர் கூலி வேலை செய்கிறார்.
குருகிராம் போன்ற பெரிய நகரத்தில் தொலைந்துபோன இந்த கிராமம், பழைய நினைவுகளை மனதில் புதைத்துக்கொண்டு தனது வளர்ச்சிக்காகக் காத்திருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.