கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டஹிடி தீவில் அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர்
  • எழுதியவர், கெல்லி குரோவர்
  • பதவி, பிபிசி நியூஸ்

டஹிடி தீவில், அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர் ஒருவரின் வியத்தகு புகைப்படத்தில் இருந்து, புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர், தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த படுகொலை முயற்சியில் உயிர் பிழைத்த சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்ட புகைப்படம் வரை கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க 12 படங்களின் தொகுப்பு இது.

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்காவில் சூரிய கிரகணம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ப்ளூமிங்டனில் ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணத்தின் ஊடாக ஒரு விமானம் பறந்தது. முழு சூரிய கிரகணத்தின் ஊடாகப் பறக்கும் போது, விமானத்தின் வெளிப்புற அமைப்பு சூரியனின் (கொரோனா) பிரகாசமான வெளிப்புற விளிம்புக்கு இணையாக இருண்ட கோடுகளாகத் தெரியும்.

நிச்சயமாக, ஒரு விமானம், சந்திரன், சூரியன் மற்றும் பூமிக்கு குறுக்காகச் செல்வது இது முதல் முறை அல்ல.

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ப்ளூமிங்டனில் ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணத்தின் ஊடாக ஒரு விமானம் பறந்தது.

கடந்த 1925-ஆம் ஆண்டு ஜனவரியில்,அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். லாஸ் ஏஞ்சலஸ் கப்பலில் இருந்து தொலைநோக்கிகள் மற்றும் ஏழு விஞ்ஞானிகளுடன் வானூர்தி ஒன்று சூரிய கிரகணத்தை நெருக்கமாகப் பார்க்கும் நோக்குடன் பறந்தது. இந்த நிகழ்வு வரலாற்றில் மிகவும் பரவலாக பார்க்கப்பட்ட கிரகணங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.

நிலத்தில் இருந்து அமெரிக்க ஓவியர் ஹோவர்ட் ரஸ்ஸல் பட்லர் அந்தத் தருணத்தை, கலைஞர்களுக்கு ஓவியம் வரைய பயன்படுத்தும் ஈசல்(Easel) எனும் பொருளுடன் உன்னிப்பாகக் கவனித்தார். அவர் மூன்று குறிப்பிடத்தக்க கிரகணங்களை (1918, 1923, மற்றும் 1925) வரைந்து பின்னர் அவற்றை ஒன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

பாரிஸ் 2024 தொடக்கத்தில் டியோனிசியோ

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், Thomas Jolly

படக்குறிப்பு, பாரிஸ் 2024 தொடக்க விழாவில் நடந்த காட்சியை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதால் பல சர்ச்சைகள் கிளம்பின.

கலையின் வரலாற்றை அறிந்துகொள்வது உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் தவிர்க்கும். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் அதுவும் ஒன்று.

சில கிறிஸ்தவர்கள் மற்றும் பழமைவாதிகள் இந்த புகைப்படம் ‘தி லாஸ்ட் சப்பர்’-ஐ சித்தரிக்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்டு, மத நம்பிக்கைக்கு அவமரியாதை ஏற்படுத்துவதாகவும், புண்படுத்தும் படமாகவும் அதனை கருதினர்.

இந்தக் குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்ட ஏற்பாட்டுக் குழு, இது லியோனார்டோ டாவின்சியின் தலைசிறந்த படைப்பை நினைவுபடுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை என்றும், மாறாக 1635ஆம் ஆண்டு ஜான் வான் பிஜ்லெர்ட்டின் ஓவியமான “தி ஃபீஸ்ட் ஆஃப் தி காட்ஸ்” (“The Feast of the Gods”) என்ற கிரேக்கக் கடவுளான டியோனிசஸை நினைவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்டது எனவும் தெளிவுபடுத்தியது.

தெற்கு சூடானின் போக்குவரத்து மையம்

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வண்ணமயமான அச்சுகளுடன் கூடிய ஆடை தெற்கு சூடானில் பாரம்பரியமானது.

பிப்ரவரியில் தெற்கு சூடானின் ரெங்க் பகுதியில் உள்ள போக்குவரத்து மையத்தில் நெரிசலான வரிசையில் சூடான் அகதிகள் உதவிக்காகக் காத்திருந்தார்கள்.

சூடானிய ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையிலான சண்டையில், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தெற்கு சூடானில் கடுமையான நெருக்கடியை உருவாக்கியது. பலருக்கு அவசர உதவி மற்றும் ஆதாரங்கள் தேவைப்பட்டன.

புலம்பெயர்ந்தோர் அணிந்துள்ள பிரகாசமான வண்ணத் துணிகள் அவர்களின் நிலைமையின் தீவிரத்தன்மை மற்றும் கஷ்டங்களுக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாட்டை காட்டுகின்றன.

இந்தப் புகைப்படம், புகழ்பெற்ற சூடானிய கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஹுசைன் ஷெரிஃபின் படைப்புகளை நினைவூட்டுகிறது. அவரது ஓவியங்கள் அவற்றின் வடிவங்கள் மற்றும் செழுமையான அமைப்புகளுக்காக அறியப்பட்டவை. அவை காட்சி மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையிலான எல்லைகளை மங்க வைக்கும் கவிதை உணர்வை உருவாக்குகின்றன.

இந்தோனீசிய எரிமலை

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, மவுண்ட் ருவாங், ஏப்ரலில் பலமுறை வெடித்து, சூடான எரிமலைக் குழம்புகளையும், சாம்பலையும் உமிழ்ந்தது.

இந்தோனீசிய எரிமலையான மவுண்ட் ருவாங், ஏப்ரலில் பலமுறை வெடித்து, சூடான எரிமலைக் குழம்புகளையும், சாம்பலையும் உமிழ்ந்தது. இது அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் பார்வையாளர்களையும் ஈர்ப்பதாக அமைந்தது.

எரிமலை அதன் சக்தி வாய்ந்த வெடிப்புகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களைக் கவர்ந்து வந்துள்ளது. சூடான எரிமலைப் பொருட்கள் மற்றும் சாம்பல், வானத்தில் தூக்கி எறியப்படுவதைக் காட்டும் சமீபத்திய புகைப்படம் பிரிட்டிஷ் கலைஞரான ஜான் மார்ட்டின் வரைந்த வியத்தகு மற்றும் தீவிரமான காட்சிகளைப் போலவே உள்ளது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, மார்ட்டின் தனது அபோகாலிப்டிக் ஓவியமான “தி டிஸ்ட்ரக்ஷன் ஆஃப் பாம்பீ அண்ட் ஹெர்குலேனியம்” எனும் ஓவியத்துக்காக கி.பி. 79இல் வெசூவியஸ் எரிமலை வெடிப்பதைப் போலக் கற்பனை செய்தார்.

டிரம்ப் மீதான தாக்குதல்

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, பென்சில்வேனியாவில் நடைபெற்ற பேரணியில் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

சில புகைப்படங்கள், குறிப்பிடத்தகுந்த நினைவுச் சின்னங்களாக மாறும் என்ற கணிப்பில் இயற்கையாகவே தங்களை வடிவமைத்துக் கொள்கின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய தீவான ஐவோ ஜிமாவில் அமெரிக்க கொடி உயர்த்தப்பட்டது அல்லது 1968ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்க விளையாட்டு வீரர்கள் வெற்றிக் களிப்பில் கைகளை உயர்த்தியது ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்.

அந்த இரண்டு படங்களையும் நினைவூட்டும் வகையில், ஜூலை மாதம், அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில், தனது வலது காதில் தோட்டா துளைத்ததைத் தொடர்ந்து, ரத்தக்கறை படிந்த முகத்துடன் தனது கரத்தை உயர்த்தியபடி தோன்றும் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் பதிவுசெய்யப்பட்டது.

அந்த நேரத்தில் அவருக்குப் பின்னால் இருந்த கொடி, அவர் தேர்தலில் வெற்றி பெற்ற தருணமோ என்று பலரையும் வியக்க வைத்தது.

காஸாவில் உள்ள பாலத்தீன அகதிகள் முகாம்

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2023இன் பிற்பகுதியில் இருந்து, காஸாவில் பாலத்தீனர்களின் இடப்பெயர்வு பெரிய அளவில் உள்ளது.

பிப்ரவரி 29 அன்று தெற்கு காஸாவில் நெரிசலான அகதிகளின் கூடாரங்களை அலங்கரிக்கும் விதமாக இரண்டு பாலத்தீன சிறுமிகள், ரமலான் பண்டிகைக்குத் தயாராகி, விளக்குகளை ஏற்றினர்.

அந்த விளக்குகளின் பிரகாசம், தொலைதூரத்தில் மறையும் சூரியனின் அமைதியற்ற இருளுக்கு எதிராக நின்றது.

கோடையில் காஸாவின் 90% மக்கள் (சுமார் 20 லட்சம் மக்கள்) போரினால் இடம்பெயர்ந்தனர்.

சிறுமிகள் விளக்கு ஏற்றும் இந்தக் காட்சி ஜான் சிங்கர் சார்ஜென்ட்டின் புகழ்பெற்ற ஓவியமான “கார்னேஷன், லில்லி, லில்லி, ரோஸை”(Carnation, Lily, Lily, Rose) நினைவுபடுத்துகிறது. தென்மேற்கு பிரிட்டனில் அந்தி நேரத்தில் தென்படும் ஒரு நண்பரின் மகள்களை அந்த ஓவியம் சித்தரிக்கிறது.

அவர் 1885ஆம் ஆண்டின் இலையுதிர்க் காலத்தில் பல மாதங்களாக அதை வரைந்தார், ஒவ்வொரு மாலையும் சூரியன் மறையும் வேளையில் அதன் ஒளியைச் சரியாகக் கவனித்து அதை வரைந்தார். அந்த ஓவியத்தில் விளக்குகளை ஏற்றும் இரண்டு இளம் பெண்கள் பசுமையான பகுதியில் மலர்களால் சூழப்பட்டுள்ளனர். அந்த ஓவியத்தில் இருப்பது போன்ற பச்சைப் புல், காட்டுப் பூக்கள் மற்றும் அமைதி மட்டும் இந்தப் புகைப்படத்தில் இல்லை.

டஹிடி தீவில் ஒலிம்பிக் சர்ஃபிங்

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எதிர்பாராத விதமாக, மதீனாவின் புகைப்படம் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் சிறந்த ஒன்றாக மாறியது.

ஜூலை 29 அன்று பிரெஞ்சு பாலினேசியாவில் உள்ள டஹிடி தீவில் பிரேசிலியன் கேப்ரியல் மதீனா என்பவர் ஒரு பெரிய அலையில் சர்ஃபிங் செய்த பிறகு உயர எழும்பி வானத்தில் மிதப்பது போன்று செய்தார். அப்போது எடுக்கப்பட்ட படம் உடனடியாக வைரலானது.

சர்ஃபிங் செய்யும் போது கேப்ரியல் மதீனா சிரமமின்றி காற்றில் மிதப்பது போன்று செய்தது மேற்கத்திய கலை வரலாற்றின் முக்கியமான பல மத கலைப் படைப்புகளை நினைவுபடுத்துகிறது. ஜியோட்டோ, ரெம்ப்ராண்ட், இல் கரோஃபாலோ மற்றும் சால்வடார் டாலி போன்ற கலைஞர்களின் படைப்புகள் இதில் அடங்கும்.

அவரது வலது கை மற்றும் ஆள்காட்டி விரல், மதீனாவின் தடகள செயல் திறனுக்கும் மத நம்பிக்கை பற்றிய பார்வைக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க தொடர்பைப் படம் பிடிக்கிறது.

அவர் வானத்தை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது, அவரது உடல் மற்றும் ஆவி இரண்டையும் மேல்நோக்கி வழிநடத்துவது போலத் தோன்றுகிறது.

ஸ்பெயினைத் தாக்கிய டானா புயல்

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, நவம்பரில் டானா புயல் ஸ்பெயினில் நூற்றுக்கணக்கான இறப்புகளையும் எண்ணற்ற அழிவையும் ஏற்படுத்தியது.

அக்டோபர் 30ஆம் தேதியன்று கடுமையான மழை காரணமாக வலென்சியா நகரம் கடுமையான வெள்ளத்தைச் சந்தித்தது. ஒரு பெண் தனது பால்கனியில் இருந்து கீழே தெரிந்த காட்சியைப் பார்த்தார். அங்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கிடந்தன. தெருக்களில் காணப்படும் காளைகளின் நெரிசலைப் போன்று அக்காட்சி தோற்றமளித்தது.

புயல் காரணமாக கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. அக்டோபர் 30 அன்று, வெறும் எட்டு மணி நேரத்தில் 500 மிமீ மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியது.

வெள்ளம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான நிகழ்வுகளை உற்றுநோக்கும் பெண்ணின் இக்காட்சி, இத்தாலிய கியூபிஸ்ட் ஓவியரான கார்லோ காராவின், 1912ஆம் ஆண்டைச் சேர்ந்த ஓவியமான லா டோனா அல் பால்கோனின் சைமெல்டனெய்தா என்ற ஓவியத்தை நினைவுபடுத்துகிறது.

பில்லி எலிஷின் தோற்றம், நியூயார்க்

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பில்லி எலிஷ் நியூயார்க்கில் ஹிட் மீ ஹார்ட் அண்ட் சாஃப்ட் எனும் பாடல் ஆல்பத்தை வெளியிட்டார்.

நியூயார்க்கில் இந்த ஆண்டின் மே மாதத்தில், தனது புதிய ஆல்பமான “ஹிட் மீ ஹார்ட் அண்ட் சாஃப்ட்” ஆல்பத்தை பில்லி எலிஷ் வெளியிட்டார். அந்த விழாவில், எடுக்கப்பட்ட பில்லி எலிஷின் புகைப்படம், ஒளி மற்றும் புகையால் சூழப்பட்டு, கனவில் கரைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அவரது உடல் மங்கலாகி, ஏறக்குறைய, கண்ணுக்குத் தெரியாத நிழற்படத்தை உருவாக்கியது.

இந்தப் புகைப்படம், ஜே.எம்.டபிள்யூவின் புகழ்பெற்ற லைட் அண்ட் கலர் – தி மார்னிங் ஆஃப்டர் தி டெலுஜ் என்ற ஓவியத்தை நினைவூட்டுகிறது.

சிரியாவில் நடந்த சிலை உடைப்புச் சம்பவம்

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிசம்பர் 9 2024 அன்று, சிரியாவில் முன்னாள் அதிபர் ஹஃபீஸ் அல்-அசத்தின் இடிக்கப்பட்ட சிலையை ஒரு பிரிவினர் காலால் உதைத்தனர்.

டிசம்பர் 9 2024 அன்று, முன்னாள் அதிபர் ஹஃபீஸ் அல்-அசத்தின் இடிக்கப்பட்ட சிலையை காலால் உதைத்து ஒரு பிரிவினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சிரியாவில் பஷார் அல்-அசத் குடும்பம் நாட்டைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்த பஷர் அல்-அசத்தின் தந்தையான ஹஃபீஸ் அல்-அசத்தின் சிலைகள் வீழ்த்தப்பட்டன.

அதிகாரத்தை இழந்துவிட்ட ஆட்சியாளர்களின் சிலைகளைக் கவிழ்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியில் ஒரு வகையான வகுப்புவாத உணர்வு உள்ளது.

டான்சர்ஸ் மீட்டிங், நியூயார்க்

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், Bess Adler

படக்குறிப்பு, நியூயார்க்கில் 350 நடனக் கலைஞர்கள் இணைந்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

நியூயார்க்கில் ஏப்ரல் மாதம் 350க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் போஸ் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

பங்கேற்பாளர்களில் பலர் போட்டிக்கு ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருக்கும் புகைப்படம் அந்த முக்கியமான சந்தர்ப்பத்தின் நேர்த்தியையும் ஆற்றலையும் படம் பிடித்தது.

எட்கர் டெகாஸ் எனும் பிரெஞ்சு இம்ப்ரெஷனிஸ்ட் கலைஞர், பல இளம் பெண்கள் நடனமாடுவதைப் பார்த்து ஈர்க்கப்பட்டிருப்பார்.

திறமையான நடனக் கலைஞர்களைப் பார்த்து மகிழ்ந்தது மட்டுமின்றி, அவர்கள் நடனமாடும் போது அவர்களின் மூட்டுகள் “உராய்வதால்” ஏற்படும் ஒலிகளிலும் அவர் ஒரு விசித்திரமான ஆர்வம் காட்டினார்.

சியோல் தேசிய சட்டமன்றத்தில் காவலர்களை எதிர்கொண்ட பெண்

கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள் - 2024

பட மூலாதாரம், OhmyTV via AP

படக்குறிப்பு, அஹ்ன் க்வி-ரியோங் தென் கொரிய காவலர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

தென் கொரிய பெண்ணான 35 வயது, அஹ்ன் க்வி-ரியோங், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்.

அஹ்ன் க்வி-ரியோங், சுடுவதற்குத் தயார் நிலையில் இருந்த ஒரு வீரரின் துப்பாக்கியை தைரியமாகப் பிடித்தார். அதிபர் யூன் சுக் யோல் ராணுவ சட்டத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வருவதைத் தடுக்குமாறு வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதுகுறித்து அஹ்ன் க்வி-ரியோங் அவர்களுடன் சண்டையிடுவதைக் காண முடிந்தது.

“எனது ஒரே எண்ணம் நான் அவர்களைத் தடுக்க வேண்டும் என்பதுதான்” என அங்கு நடந்த மோதலைப் பற்றி அஹ்ன் பின்னர் கூறினார்.

“நான் அவர்களைத் தள்ளிவிட்டு, என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்” என்றும் அவர் கூறினார்.

அஹ்ன் க்வி-ரியோங்கின் அசைக்க முடியாத உறுதியும், அவரது ஆடைகளின் பிரகாச ஒளியும் பிரிட்டிஷ் கலைஞரான ஜான் கில்பர்ட்டின், ஜோன் ஆஃப் ஆர்க் எனப்படும் 19ஆம் நூற்றாண்டின் வாட்டர் கலர் ஓவியத்தை நினைவுபடுத்துகிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.