- எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா
- பதவி, பிபிசிக்காக
திருப்பதி பெருமாள் கோவில் உண்டியலில் இருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் திருடு போனதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
உண்டியலில் உள்ள பணத்தை எண்ணுவதற்காக பெரிய ஜீயர் மடத்தின் சார்பாக இந்த பணியில் ஈடுபட்ட சி.வி. ரவிக்குமார் என்பவர் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினரான பானுபிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
பல ஆண்டு காலமாக, மொத்தம் ரூ. 200 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை ரவிக்குமார் திருடி இருப்பதாகவும், அவர் 2023-ஆம் ஆண்டு கையும் களவுமாக பிடிபட்டதாகவும், பின்னர் மக்கள் நீதிமன்றம் மூலம் இந்த விஷயத்தில் சமரசம் எட்டப்பட்டதாகவும் பானுபிரகாஷ் ரெட்டி கூறினார்.
ஆனால் இந்த முழு விவகாரத்திலும் பல சந்தேகங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
2023-ஆம் ஆண்டு ரவிக்குமாரின் இந்த திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அதற்கு சமரசம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி கோவிலின் உண்டியலில் வெளிநாட்டு பணம் திருடப்படுவதாக தேவஸ்தான உறுப்பினர் ஒருவர் டிசம்பர் 24 ஆம் தேதி அன்று நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில், தேவஸ்தானத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியிடம் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய அவர், பின்னர் 2023 ஆம் ஆண்டு ரவிக்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களுடன் தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவு வழங்கிய கடிதங்களையும் வழங்கினார்.
நடந்தது என்ன?
தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவு வெளியிட்ட ஆவணங்களின்படி, 2023-ஆம் ஆண்டில் ரவிக்குமார் திருப்பதியில், பெரிய ஜீயர் மடத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு வயது 53. கோவிலின் உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் பெரிய ஜீயர் மடத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக அவர் இருந்தார்.
அவர் திருப்பதியிலேயே வசித்து வருகிறார். 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி அன்று, திருப்பதி உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணி முடித்து வீட்டிற்குச் செல்ல முயன்றார். அப்போது, அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 அமெரிக்க டாலர்கள் நோட்டுகளுடன் தேவஸ்தான காவல் அதிகாரிகளால் அவர் பிடிபட்டார்.
அவர் 100 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒன்பது நோட்டுகளை எடுத்துள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் 72 ஆயிரம் ரூபாய் என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பணியில் இருந்த உதவி விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் மற்றும் அவரது குழுவினரால், ரவிக்குமார் கையும் களவுமாக பிடிபட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் சதீஷ்குமாரின் புகாரின்படி திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவு வழங்கிய ஆவணங்களுடன், சதீஷ்குமார் விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் கொடுத்த புகாரின் நகலையும் பானுபிரகாஷ் ரெட்டி வெளியிட்டார்.
“2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி, உண்டியல் பணத்தை எண்ணும் போது ரவிக்குமார் விசித்திரமாக நடந்துகொண்டதை விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனித்துள்ளனர். அவர் வெளியே வந்தவுடன், அவரை உடனடியாக சோதனை செய்த போது, அவரது உள்ளாடையில் வெளிநாட்டு நோட்டுகளை வைத்திருந்தார். அவரிடம் ஒன்பது 100 அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தன.”, என்று சதீஷ்குமாரின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவிக்குமார் தனது தவறை ஒப்புக்கொண்டதாகவும், இதுபோல செய்வது அதுவே முதல் முறை என்று அவர் கூறியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமரசம் எவ்வாறு எட்டப்பட்டது?
இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி ரவிக்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அதே ஆண்டு மே 19-ஆம் தேதி அன்று, திருப்பதி மற்றும் சென்னையில் உள்ள ரவிக்குமார் மற்றும் அவருடைய மனைவி ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அவர்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 7 அசையா சொத்துக்களை நன்கொடையாக வழங்குவதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் ஒன்றை கொடுத்தனர்.
பின்னர் மக்கள் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் சமரசம் செய்து கொண்டதால் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாக சமீபத்தில் வெளியான விஜிலென்ஸ் பிரிவின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ரவிக்குமாரும், அவர் மீது குற்றம் சுமத்திய அதிகாரி சதீஷ்குமாரும் சமரசம் செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பெரிய ஜீயர் மடத்தின் நற்பெயருக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த வழக்கில் சமரசம் எட்டப்பட்டது என்று விஜிலென்ஸ் பிரிவு தெரிவித்தது.
தற்போது சதீஷ்குமார், திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் பணிபுரிந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் விஜிலென்ஸ் பிரிவு விசாரணை நடத்திய போது, காவல்துறையினர் அப்போது அளித்த கடும் அழுத்தம் காரணமாக சமரசம் செய்து கொள்ள நேரிட்டதாக அவர் கூறியதாக விஜிலென்ஸ் பிரிவு தனது ஆவணங்களில் தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ரவிக்குமாரும் அவரது மனைவியும் தேவஸ்தானத்திற்கு 13 கட்டடங்களை நன்கொடையாக அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி திருப்பதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 8 மூன்று அறைகள் கொண்ட வீடுகளையும் மற்றும் 5 இரண்டு அறைகள் கொண்ட வீடுகளையும் தேவஸ்தானத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
பணம் கைமாறியதா?
உண்டியல் பணத்தை திருடியது குறித்து பதவியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தேவஸ்தானத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி கோரினார்.
இந்த வழக்கில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், அதிக அளவில் பணம் கைமாறியதால் விசாரணையின் தீவிரம் குறைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரவிக்குமார் தேவஸ்தானத்திற்கு வழங்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் டிசம்பர் 25 ஆம் தேதி அன்று ஆய்வு நடத்தப்பட்டது.
இதுகுறித்து பானு பிரகாஷ் ரெட்டி பிபிசியிடம் பேசினார்.
“2023-ஆம் ஆண்டு, திருப்பதி உண்டியலில் பணத்தை எண்ணும் போது வெளிநாட்டு பணத்தை திருடிய ரவிக்குமாரின் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போது இந்திய மதிப்பில் 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
ஆனால், ரவிக்குமார் தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அடுக்கு மாடி குடியிருப்பில் பல வீடுகளை வழங்கினார். சென்னையிலும் உள்ள அவரது சொத்துக்களும் கைமாறின. தேவஸ்தானத்தில் சிறிய தொழிலாளியாக உள்ள ரவிக்குமார் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார்?
“உயர்நிலை விசாரணை நடந்தால், இந்த ஊழல் வெளிக்கொண்டுவரப்பட்டு, அதில் தொடர்புடைய அதிகாரிகளை அம்பலப்படுத்தலாம். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தனியாரின் கைக்கு மாறியுள்ளன. முழு விசாரணை நடத்தி, இதற்கு மறைமுகமாக ஒத்துழைத்தவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்”, என பானுபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதி கோவில் உண்டியல்
திருப்பதியில் உள்ள பெருமாள் கோவிலின் உண்டியலுக்கு பல நூற்றாண்டு கால வரலாறு உள்ளது.
சாமி தரிசனம் செய்ய வரும் மக்கள், நகைகள் மற்றும் பணத்தை உண்டியல் மூலம் பெருமாளுக்கு வழங்குகின்றனர். இந்த உண்டியலில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன.
17-ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தியதாக கோவில் வரலாறு கூறுகிறது.
விஜிலென்ஸ் பிரிவு, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் முன்னிலையில் இந்த உண்டியலில் உள்ள பணம் மற்றும் பிற பொருட்கள் எண்ணப்படுகின்றன. தீவிர கண்காணிப்பின் மத்தியில் இந்த பணி நடந்து வருகிறது.
நாணயங்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நோட்டுகள், பழங்கால நாணயங்கள், நகைகள், மதிப்புமிக்க பொருட்கள், ஆவணங்கள், குறிப்பேடுகள், வாழ்த்து அட்டைகள், விசிட்டிங் கார்டுகள், அரிசி, மஞ்சள் என பலவிதமான காணிக்கைகள் உண்டியலில் செலுத்தப்படுகின்றன.
1965-ஆம் ஆண்டு வரை கோவிலில் உள்ள தங்க வாயிலில் தான் உண்டியல் எண்ணும் பணி நடந்து வந்தது. அதன்பின், காணிக்கையின் அளவு அதிகரித்ததால், கோவில் வளாகத்தில் உண்டியலை எண்ணுவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது.
தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பலத்த பாதுகாப்பு கொண்ட அறைகளில் அவை எண்ணப்படுகின்றன.
காணிக்கை எண்ணுவதற்கான விதிகள்
உண்டியலில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணியாளர்கள் ஏராளமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.
அரசு, தனியார் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வு பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு இந்த உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணிகளில் தன்னார்வமாக ஈடுபட தேவஸ்தானம் வாய்ப்பளிக்கிறது.
இந்த சேவையில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பக்தர்களின் எண்ணிக்கையுடன் காணிக்கைகளும் வெள்ளம் போல் அதிகரித்து வருவதால், காணிக்கை எண்ணுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், இந்த பணிக்கென 2022-ஆம் ஆண்டு புதிய கட்டடம் ஒன்று கோவில் வளாகத்தில் கட்டப்பட்டது.
உண்டியல் பணத்தை திருடியதாக கூறப்படும் ரவிக்குமாரை தொடர்பு கொள்ள பிபிசி முயன்றது.
இந்த வழக்கு முடிவடைந்ததில் இருந்து அவர் யாருடனும் தொடர்பில் இல்லை என அவரது வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்த விஷயம் குறித்து தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவிடம் பேச பிபிசி பலமுறை முயற்சித்தது. ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவரிடம் இருந்து பதில் கிடைத்தால் இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.