இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதிய சாதனை படைத்த பும்ரா
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

மெல்போர்னில் நடந்துவரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

4-வது நாளான இன்று ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்து, 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்த பும்ரா, சிராஜ் இருவரும் டெய்லண்டர்களான போலந்த்(10), நேதன் லேயான்(41) விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர். 173 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்த நிலையில் கடைசி விக்கெட்டுக்கு இருவரும் 55 ரன்களுடன் இந்திய பந்துவீச்சாளர்களைச் சோதித்து வருகிறார்கள்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கும், இந்திய அணி 369 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

4வது டெஸ்ட் டிரா ஆகுமா? இந்தியா அல்லது ஆஸ்திரேலியா வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே எகிறச் செய்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கோன்ஸ்டாஸை வீழ்த்திய பும்ரா

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நிதிஷ் குமார் ரெட்டியின்(114) விக்கெட்டை இன்று காலை லேயான் பந்துவீச்சில் இழந்தவுடன் 369 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, 105 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. கடந்த இன்னிங்ஸில் பும்ரா பந்துவீச்சில் ராம்ப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய கோன்ஸ்டாஸை 8 ரன்னில் பும்ரா க்ளீன் போல்டாக்கினார். கண்ணிமைக்கும் வேகத்தில் ஸ்விங் ஆகிய பும்ராவின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் கோன்ஸ்டாஸ் அவுட்டானார்.

அடுத்த சிறிது நேரத்தில் உஸ்மான் கவாஜா 21 ரன்கள் சேர்த்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ஸ்மித்-லாபுஷேன் ஓரளவுக்கு நிலைத்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உஸ்மான் கவாஜா 21 ரன்கள் சேர்த்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித்

ஸ்மித்(13) விக்கெட்டையும் சிராஜ் கழற்றினார். சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட்(1), மிட்ச்செல் மார்ஷ்(0), அலெக்ஸ் கெரே(2) ஆகியோர் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து நடுவரிசை பேட்டிங் உருக்குலைந்தது. 80 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 11 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால், இதை தொடர்ந்து எடுத்துச் செல்ல கேப்டன் ரோஹித் சர்மா தவறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். கடைசி நேரத்தில் எந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது, எந்த பேட்டர் எதில் பலவீனம் என்பதை அறிந்து பந்துவீச்சை மாற்றுவதில் கேப்டன் ரோஹித் தோல்வி அடைந்துவிட்டார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

லாபுஷேன் மட்டும் களத்தில் இருந்த நிலையில் கேப்டன் கம்மின்ஸ் அவருடன் இணைந்தார். இருவரும் இணைந்து, 7-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லாபுஷேன் 70 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

ஸ்டார்க் 5 ரன்னில் ரன்அவுட்டானார். கம்மின்ஸும் 41 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி விக்கெட்டான போலந்த், நேதன் லயன் இருவரில் ஒருவரை விரைவாக வீழ்த்திவிடலாம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா எண்ணினார். ஆனால், போலந்த், லேயான் இருவரும் 100 பந்துகளுக்கும் சமாளித்து 50 ரன்களுக்கும் மேல் சேர்த்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 333 ரன் முன்னிலை பெற்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாபுஷேன் அடித்தாடுகையில், மிக நெருக்கமாக பீல்டிங் செய்து கொண்டிருந்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் துள்ளிக் குதிக்கிறார்.

ஜெய்ஸ்வால் மீது கோபப்பட்ட ரோஹித்

4வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை இழந்த நிலையில் லாபுஷேன் மட்டும் நிலைத்து பேட் செய்தார். லாபுஷேன் 46 ரன்களை எட்டியிருந்த போது, நிதிஷ் குமார் வீசிய 40-வது ஓவரின்போது, கிடைத்த கிடைத்த கேட்சை ஜெய்ஸ்வால் பிடிக்காமல் நழுவவிட்டார். இதைப் பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வாலை நோக்கி கடுமையாக பேசினார். இன்று மட்டும் ஜெய்ஸ்வால் 3 கேட்சுகளை நழுவவிட்டார்.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாபுஷேன் 46 ரன்னில் இருந்த போது, நிதிஷ் குமார் பந்துவீச்சில் கொடுத்த கேட்சை ஜெய்ஸ்வால் நழுவவிட்டார்.

நோபாலால் கிடைத்த வாய்ப்பு

கடைசி விக்கெட்டுக்கு போலந்த் – லயன் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலிய அணியின் முன்னிலையை 300 ரன்களுக்கு மேல் உயர்த்தி, இந்திய அணிக்கு நெருக்கடி அளித்துள்ளனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 55 ரன்களை எட்டியுள்ளது.

பும்ரா பந்துவீச்சில் லயன் பேட்டில் பட்டு ராகுலிடம் 3வது ஸ்லிப்பில் கேட்சானது, அப்போதே ஆட்டம் முடிந்துவிட்டதாக எண்ணியிருந்த போது, அது நோபாலாக நடுவர் அறிவித்தார்.

அது மட்டுமல்லாமல் 3வது செஷனில் கடைசி நேரத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேட் செய்யாமல் ஒரு விதத்தில் ஆஸ்திரேலிய அணியும் காப்பாற்றியுள்ளது. ஆட்டம் முடிய கடைசி நேரத்தில் புதிய பந்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சில் இந்திய தொடக்க பேட்டர்கள் விக்கெட்டுகளை இழந்தால் பெரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும். அதை தவிர்க்கும் விதத்தில் ஆஸ்திரேலியா டெய்லண்டர்கள் களத்தில் இருந்தார்கள் என்று இந்திய ரசிகர்கள் ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடைசி விக்கெட்டுக்கு போலந்த் – லயன் பார்ட்னர்ஷிப் 55 ரன்களை சேர்த்துள்ளது.

பும்ரா புதிய சாதனை

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். 44 போட்டிகளில் அவர் 200 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதன் மூலம் அலெக் பெட்சர், ரிச்சர்ட் ஹாட்லி, காகிசோ ரபாடா, ஜோயல் கார்னர், கம்மின்ஸ் ஆகியோர் வரிசையில் பும்ராவும் இணைந்தார். இவர்கள் அனைவரும் 44 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் 200 விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரத்துக்கும் குறைவான (3912)ரன்களையே பும்ரா விட்டுக்கொடுத்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சு சராசரி 19.56 என்கிற அளவில் உள்ளது. அந்த வகையில், 20-க்கும் குறைவான சராசரியுடன் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

பும்ராவின் ஸ்ட்ரைக் ரேட் 42.4 ஆகும். அதாவது ஒவ்வொரு 7 ஓவர்களுக்கு ஒருமுறை ஒரு விக்கெட்டை பும்ரா வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானின் வக்கார் யூனுஸ், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், ரபாடா ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பும்ரா உள்ளார்.

குறிப்பாக சேனா நாடுகள் எனச் சொல்லப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக மட்டும் பும்ரா 142 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது பும்ராவின் 202 டெஸ்ட் விக்கெட்டுகளில் 142 விக்கெட்டுகள் சேனா நாடுகளுக்கு எதிராக வீழ்த்தப்பட்டவை.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம், Getty Images

பும்ராவின் 200 விக்கெட்டுகளில் 64 விக்கெட்டுகள் அனைத்து அணிகளின் டாப்-3 பேட்டர்களுக்கு எதிராக வீழ்த்தப்பட்டவை. தொடக்க ஆட்டக்காரர்களை 50 முறையும், 3வது பேட்டரை 14 முறையும், 4வது பேட்டரை 30 முறையும் வீழ்த்தியுள்ளார். பும்ராவின் 200 விக்கெட்டுகளில் டாப்-4 பேட்டர்கள் விக்கெட்டுகள் மட்டும் 47 சதவீதமாகும். உலகளவில் பும்ராவின் இந்த பந்துவீச்சு 7-வது இடத்திலும், இந்திய அளவில் சிறந்த பந்துவீச்சாகவும் பார்க்கப்படுகிறது.

பும்ரா தனது பந்துவீச்சில் அதிக முறை இங்கிலாந்தின் ஜோ ரூட்டை 9 முறையும், அடுத்தபடியாக டிராவிஸ் ஹெட்டை 6 முறையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இந்த டெஸ்டில் கூட டிராவிஸ் ஹெட்டை 2 முறையும் பும்ராதான் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிதாப நிலையில் ‘ஹிட் மேன்’

ரோஹித் சர்மா 2வது டெஸ்டிலிருந்துதான் பார்டர்- கவாஸ்கர் கோப்பையில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதுவரை ரோஹித் சர்மா இந்த டெஸ்ட் தொடரில் 22 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். 70 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார்.

ஆனால், ஆஸ்திரேலிய அணியின் டெய்லெண்டர் பேட்டரான, வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலந்த் இந்த டெஸ்டில் மட்டும் 101 பந்துகளைச்(முதல் இன்னிங்ஸில் 36, 2வது இன்னிங்ஸில் 65) சந்தித்துள்ளார். போலந்த் ஒரு டெஸ்டில் 100 பந்துகளைச் சந்தித்துவிட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 டெஸ்ட்களிலும் சேர்த்து 70 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா 100 ஆண்டு வரலாற்றை மாற்றுமா?

கடந்த 100 ஆண்டுகளில் மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸில் 332 ரன்கள்தான் அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ரன்களுக்கு மேல் எந்த அணியும் இதுவரை சேஸ் செய்ததில்லை. அப்படியிருக்கையில் கடைசி நாளான(நாளை) 333 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை இந்திய அணி சேஸிங் செய்தால் மெல்போர்ன் மைதானத்தில் புதிய வரலாறு படைக்கும்.

1928-ம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 332 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி சேஸிங் செய்ததுதான் இங்கு அதிகபட்சம். இந்திய அணிக்கு 333 ரன்களுக்கும் அதிகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை சேஸிங் செய்தால் புதிய வரலாறு படைக்கும்.

முக்கியத்துவம் மிகுந்த 5-வதுநாள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே இந்த போட்டியில் வெற்றி அவசியமாகும். ஆதலால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடும்.

இந்திய அணியின் முன்னணி பேட்டர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோர் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிதிஷ் குமாரை முன்கூட்டியே களமிறக்கலாமா என்று கேப்டன் ரோஹித்தை சிந்திக்க வைத்துள்ளார்.

5-வது நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்?

மெல்போர்ன் எம்சிஜி ஆடுகளம் நாளைய கடைசி நாளை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக இருக்கும். ஆடுகளத்தில் தற்போது பிளவுகள் வந்துள்ளன, நாளை வெயில் அதிகரிக்கும் போது ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறக் கூடும்.

ஒருவேளை ஆடுகளத்தில் ரோலர் போட்டு உருட்டினாலோ அல்லது ஆடுகளத்தில் தண்ணீர் தெளித்து இறுக்கம் செய்தாலோ ஆட்டத்தின் போக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆட்டத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வது ஆடுகளத்தின் பராமரிப்பாளர்கள் கையில் இருக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம், Getty Images

மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்

மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஏறக்குறைய 2.99 லட்சம் ரசிகர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய 4-வது நாளில் மட்டும் 43 ஆயிரம் ரசிகர்கள் ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மவுசு குறைந்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதற்கு உயிர் கொடுக்கம் விதத்தில் அதிகளவு வந்து பார்வையிட்டுள்ளனர். நாளை கடைசி நாளில் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு