யாழில். வங்கியில் வேலை பெற்று தருவதாக 15 இலட்சம் மோசடி – வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது

by wp_fhdn

வங்கியில் வேலை பெற்று தருவதாக கூறி 15 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு , தான் கடமையாற்றிய வங்கியில் வேலை வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார். 

பணத்தினை பெற்று நீண்ட காலமாகியும் வேலை வாய்ப்பினை பெற்று கொடுக்காததால் , இளைஞன் பணத்தினை மீள கோரியுள்ளார். அதனால் முன்னாள் முகாமையாளர் 15 இலட்ச ரூபாய் பணத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். 

காசோலையை இளைஞன் வங்கியில் வைப்பிலிட்ட போது , காசோலை திரும்பியுள்ளது. அதை அடுத்து இளைஞன் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிடம் முறையிட்டுள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் , முன்னாள் முகாமையாளர் தலைமறைவாகி இருந்தார். 

அந்நிலையில் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை அவரை கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்