தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் கூறுகிறது.
ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
ஒருநபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் யோஹாப் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஒரு பறவை மோதியதால் விமானத்தில் லேண்டிங் கியர் செயலிழந்தது என யோன்ஹாப் கூறுகிறது.
விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு