உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டாம் முறை வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி

கொனேரு ஹம்பி

பட மூலாதாரம், Getty Images

உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் கொனேரு ஹம்பி கைப்பற்றியுள்ளார். இந்த பட்டத்தை அவர் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனீசியாவின் ஐரீன் சுகந்தரை வீழ்த்தி கொனேரு ஹம்பி இந்த பட்டத்தை வென்றார்.

இதற்கு முன்பு கொனேரு ஹம்பி 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற போட்டியில் உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.

இவரைத்தவிர சீனாவின் ஜு வென்ஜுனும் இந்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்றுள்ளார்.

கொனேரு ஹம்பிக்கு 37 வயதாகிறது. பெண்கள் பிரிவில், 11 சுற்றுகளுடன் நடைபெறும் இந்த போட்டியில் அவர் 8.5 புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ஆடவர் பிரிவில் ரஷ்யாவை சேர்ந்த 18 வயதான விலோடர் முர்சின் உலக அதி வேக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார்.

உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி என்பது டி20 கிரிக்கெட் போன்றது. இதில் விரைவாக சிந்திக்கும் ஆற்றலுடன், வேகமாக காய்களை நகர்த்தும் திறனும் வேண்டும்.

சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவை சேர்ந்த குகேஷ் தொம்மராஜு உலக செஸ் சாம்பியன்ஷிப் (கிளாசிக்கல் வகை) பட்டத்தை வென்றிருந்தார். தற்போது கொனேரு ஹம்பியின் இந்த வெற்றி செஸ் போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு மாகுடமாகும்.

மேலும் இந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் இந்தியா ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தங்கப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

யார் இவர்?

கொனேரு ஹம்பி

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் கொனேரு ஹம்பி. இளம் வயதில் இவரது தந்தை இவரின் திறமையை அடையாளம் கண்டார். 2002ஆம் ஆண்டு 15 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த சாதனை சீனாவின் ஹூ யிஃபான் என்ற வீராங்கனையால் 2008ஆம் ஆண்டு முறியடிக்கப்பட்டது.

கொனேரு ஹம்பி, 2020-ஆம் ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதைப் பெற்றுள்ளார்.

“ஒரு அரங்கத்திற்கு உள்ளே விளையாடப்படும் விளையாட்டு என்பதால், இந்தியாவில் கிரிக்கெட் அளவிற்கு சதுரங்கம் பெரிய கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், இந்த விருதின் மூலமாக, அதிகப்படியான மக்களை இந்த விளையாட்டு ஈர்க்கும் என்று நம்புகிறேன்.” என்று விருதுபெற்ற ஹம்பி தெரிவித்தார்.

வளர்ந்துவரும் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், “விளையாட்டை ரசித்து ஆடுங்கள் என்ன முடிவு வரும் என்பது குறித்து கவலை கொள்ளாதீர்கள். ஆட்டத்தின் முடிவை எட்ட முயலுங்கள், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மரியாதையையும், அங்கீகாரத்தையும் நீங்கள் சம்பாதிக்க வேண்டும். தைரியமாக இருங்கள், உங்கள் இலக்கை நோக்கியே இருங்கள்.” என்றார்.

“தன்னம்பிக்கை இருந்ததாலேயே இத்தனை ஆண்டுகளாக என்னால் வெல்ல முடிந்தது. ஒரு வீராங்கனை எப்போதுமே தனது விளையாட்டு பயணத்தை முடித்துக்கொள்ள யோசிக்கக்கூடாது. திருமணம் மற்றும் தாய்மை என்பன வாழ்க்கையின் ஒரு பகுதியே. அது நமது வாழ்க்கையையே மாற்றக்கூடாது.” என்றார் கொனேரு.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.