அமெரிக்காவில் கொந்தளிக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற குழந்தை – என்ன நடந்தது?
- எழுதியவர், பிரான்செஸ்கா ஜில்லட்
- பதவி, பிபிசி செய்தி
-
அமெரிக்காவின் ஹவாய் தேசியப் பூங்காவில் ஒரு குழந்தை மிகச் சரியான தருணத்தில், ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பியதைத் தொடர்ந்து பூங்கா நிர்வாகம் புதிய எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது.
“அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள ஹவாய் தேசியப் பூங்காவில் ஒரு குழந்தை தனது குடும்பத்தினரை விட்டு தள்ளிச் சென்று கண்ணிமைக்கும் நொடியில் கிலாவியா எரிமலையின் 400 அடி குன்றின் விளிம்பை நோக்கி விரைந்தது” என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.
“குழந்தை விலகிச் சென்றதை உணர்ந்த தாய், உரத்த குரல் எழுப்பினார். இன்னொரு அடி எடுத்து வைத்தால் லாவாவில் விழுந்துவிடும் நிலையில் இருந்த குழந்தையை அவர் பின்னோக்கி இழுத்தார். பெரிய அபாயத்தில் இருந்து குழந்தை தப்பித்தது” என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனை நேரில் பார்த்த பூங்கா அதிகாரி ஜெசிகா ஃபெர்ராகேன், இந்த சம்பவத்தின் விவரங்களைப் பொதுவில் பகிர்வது “எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் தடுக்க உதவும்” என்று நம்புவதாக பிபிசியிடம் கூறினார்.
ஹவாயின் பெரிய தீவில் உள்ள கிலாவியா எரிமலை, உலகின் மிகவும் துடிப்புடன் செயல்படும் எரிமலைகளில் ஒன்றாகும். இது அடிக்கடி வெடிக்கும் எரிமலையாகும். இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இந்த மலையில் இருந்து எரிமலைக் குழம்பு வெளிப்ட்டது.
யு.எஸ்.ஜி.எஸ் (USGS) ஹவாய் எரிமலை கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, தேசிய பூங்காவின் மூடப்பட்ட பகுதியில் எரிமலை வெடிப்பு குறைவான அளவில் தொடர்ந்து நிகழ்கிறது.
குழந்தை எதிர்பாராத விதமாக எரிமலையை நெருங்கிய சம்பவம் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்துள்ளது. சில குடும்பங்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று எரிமலைக் குழம்பு பாய்வதை நேரில் காண பூங்காவிற்குச் சென்றுள்ளனர். அப்போது ஒரு குழந்தை எரிமலையின் விளிம்பை நோக்கி ஓடியுள்ளது. அதில் விழுந்திருந்தால் குழந்தை இறந்திருக்கும் என்கிறார் ஜெசிகா.
“இதுபோன்ற பகுதிகளில் உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்போதும் கவனமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக சுற்றுலா பகுதிகளில், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம். அவர்கள் எப்போதும் உங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.” என்று பூங்கா நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
“எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பவர்கள், அபாய அறிக்கைகளைக் கடந்து செல்பவர்கள், அன்புக்குரியவர்களைத் தவற விடுபவர்கள், மற்றும் தடை செய்யப்பட்டப் பகுதிகளுக்குள் சென்று எரிமலையை நெருக்கமாகப் பார்ப்பவர்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர்.” என்று அவர்கள் கருதுகின்றனர்.
“இந்த தகவலைப் செய்திகளில் பகிர்வது எதிர்காலத்தில் இப்படி நடப்பதை தடுக்கும் என்று நம்புகிறோம்” என்கிறார் ஜெசிகா.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு