50 சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு கூட்டாக கடிதம்

by wp_shnn

பிராந்தியத்தில் நடந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகள் வருகை தொடர்பான பிரச்சினை, மீண்டும் மீண்டும் நிகழ்வதாக இருக்கும். ஆகவே இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரக அலுவலகத்தை (யு.என்.எச்.சி.ஆர்) முழு அதிகாரத்துடன் தொடரவேண்டுமெனக் கோரிக்கை விடுத்து 50 சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தி கடிதமொன்றை அனுப்பியுள்ளன.

2024 ஆம் ஆண்டின் இறுதியில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரகம் இலங்கையில் உள்ள தனது அலுவலகத்தை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு சிவில் அமைப்புக்கள் கூட்டாக கடிதமொன்றை அனுப்பியுள்ளன.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு கடந்த வாரம் வருகைதந்த 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் உட்பட, நாட்டில் ஏற்கனவே உள்ள அகதிகளின் பாதுகாப்பையும் ஆதரவையும், சர்வதேச சட்டத்தின்படி உறுதி செய்ய வேண்டும்.

இலங்கையில் அகதிகளின் தற்காலிக தங்குதலை எளிதாக்குவதோடு, அவர்களின் பாதுகாப்பு, வீட்டுவசதி, உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், நிரந்தர மீள்குடியேற்றம் உள்ளிட்ட நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அத்துடன், ரோஹிங்கியாக்கள் மற்றும் பிற புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகளின் அவலநிலை குறித்து உள்ளூர் சமூகங்களுக்கு உணர வைப்பதற்கும், அமைதியான ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கும், பாகுபாட்டைத் தடுப்பதற்கும், ரோஹிங்கியாக்கள் மற்றும் இலங்கையில் புகலிடம் தேடும் பிற துன்புறுத்தப்பட்ட சமூகங்களுக்கு நீடித்த தீர்வைத் தேடுவதற்கு சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து ஈடுபடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் நாட்டிற்கு வருகைதந்த மியன்மார் நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை தரையிறங்க அனுமதித்ததும், கடற்படை, அரசு அதிகாரிகள், குடிமக்கள் மற்றும் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் அவசர உதவிகளை வழங்கியதும் பாராட்டத்தக்கதாகும்.

இருப்பினும், அவர்கள் கடலில் நீண்ட நேரம் வைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் தங்க வைக்கப்பட வேண்டிய இடத்தை தீர்மானிப்பதில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களும், அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்ற செய்திகளும் எங்களுக்கு கவலையளிக்கின்றன.

அகதிகளின் கதைகள் மனதை வேதனைப்படுத்துகின்றன. அவர்கள் மூன்று படகுகளில் மியான்மரை விட்டு வெளியேறினர், ஒருபடகு மட்டுமே இலங்கையின் கரையை அடைந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் பயணத்தின் போது பசியால் இறந்துள்ளனர், அவர்களின் உடல்கள் கடலில் வீசப்பட வேண்டியிருந்தது.

ஏற்கனவே தாங்கள் மியான்மரின் ராக்கைன் மாநிலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஆனால் தங்கள் மீதான வன்முறை காரணமாக மீண்டும் சொந்த நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அகதிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சர்வதேச சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை உறுதி செய்யும் வகையில், புகலிடம் கோருவோர் குறிப்பாக மியான்மர் ரோஹிங்கியா அதிகதிகளில் புகலிடம் கோருவோர் உள்ளிட்டவர்களுக்கு அரசாங்கம் தனது பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும்.

இலங்கையர்களை அகதிகளாக அனுப்பும் நாடாக நாம் இருந்துள்ளோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. எமது மக்கள் கடந்த காலங்களில் இதேபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்துள்ளனர்.

ஆகவே அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுடன் ஒத்துப்போகும் ஒரு விரிவான அகதிக் கொள்கையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் எமக்கு நினைவூட்டுகிறது.

அந்தவகையில் ஐ.நா.அகதிகளுக்கான முகவரகத்தின் நீடித்த செயற்பாட்டை உறுதி செய்வதோடு அதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்