சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு

படக்குறிப்பு, சென்னை அண்ணா பல்கலைக் கழகம் (கோப்புப் படம்)
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள இந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் என்ன நடந்தது? முதல் தகவல் அறிக்கை வெளியானது பற்றி தமிழ்நாடு அரசு அளித்த விளக்கம் என்ன? குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் அரசியல் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இருப்பது பற்றிய மனுதாரர் தரப்பு முறையீட்டிற்கு நீதிபதிகள் அளித்த பதில் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு, உயர் நீதிமன்றம்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி மற்றும் பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் முறையிட்ட வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, “இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்” என்றார்.

வெள்ளியன்று (டிசம்பர் 27) மாலை இந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது சட்டவிரோதம். இதை காவல் ஆணையரே ஒப்புக் கொண்டுள்ளார். இடைக்காலமாக, முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து வழக்கை விசாரிக்க வேண்டும்” என வாதிட்டார்.

கைதான நபர் மீது இருபதுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதாக முறையிட்ட மனுதாரர், “அவரது பின்னணியில் உள்ளவர்களை விசாரிக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையடுத்து, “வழக்கு விசாரணையில் இருக்கும் போது கைதானவரே குற்றவாளி தான் என்ற முடிவுக்கு காவல் ஆணையர் எப்படி வந்தார்?” என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மாணவியின் புகாரில் கைதான நபரின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்ததாக, தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு, உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்றம்

இதன் பிறகு பேசிய நீதிபதிகள், ” பாதிக்கப்பட்ட மாணவியைப் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை. பெண்கள் ஆண்களுடன் பேசக் கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி அங்கு சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் கூறக் கூடாது. காதல் என்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்” எனக் கூறினர்.

இந்த வழக்கில் விசாரணை நடக்கும் போதே செய்தியாளர்களை ஆணையர் சந்தித்ததாக கூறிய நீதிபதிகள், “இதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டாமா? எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு யார் பொறுப்பு?” எனக் கேள்வி எழுப்பி, விரிவான அறிக்கையை நாளை (டிசம்பர் 28) தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பல்கலைக் கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிர்பயா நிதி செலவினம், பல்கலைக் கழகத்தின் விசாகா குழுவுக்கு வந்த புகார்கள் ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உத்தரவிட்டனர்.

சனிக்கிழமையன்று (டிசம்பர் 28) இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது உள்துறை செயலர் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரனும், காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசனும் ஆஜரானார்கள்.

நீதிமன்றத்தில் அரசு சார்பில் முத்திரையிடப்பட்ட கவர்களில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

எஃப்.ஐ.ஆர் வெளியானது எப்படி?

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு, உயர் நீதிமன்றம்

படக்குறிப்பு, அண்ணா பல்கலைக்கழக வளாகம்

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடும் போது, “முதல் தகவல் அறிக்கையைப் பொருத்தவரையில், குற்ற வழக்குகளில் பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளிவராமல் கணினியே தடுத்துவிடும்” என்றார்.

“கோட்டூர்புரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தயாரித்த பிறகு அது இணையதளத்தில் பதிவாகிவிட்டது. பின்னர் அது முடக்கப்பட்டது. அதன் விவரங்களை சிலர் எடுத்துள்ளனர்” என்று தலைமை வழக்கறிஞர் கூறினார்.

முதல் தகவல் அறிக்கையை முடக்கிய பின்னரும் சிட்டிசன் போர்ட்டலில் இருந்து 14 பேர் அதனை பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“எஃப்.ஐ.ஆரை முடக்கிய பின்னரும் எப்படி பார்க்க முடியும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இருந்து புதிதாக பி.என்.எஸ்(பாரதிய நியாய சன்கிதா) சட்டத்துக்கு வழக்கு பிரிவுகளை மாற்றிய போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகிவிட்டது” என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதாவது, தொழில்நுட்ப தவறு காரணமாகவே எஃப்.ஐ.ஆர் வெளியானது. காவல்துறை இதனை வெளியிடவில்லை எனவும் அரசுத் தரப்பு வாதிட்டது. இருப்பினும் எஃப்.ஐ.ஆர் விவகாரத்தில் 14 பேருக்கு எதிராக விசாரணை நடப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆணையர் பேட்டி அளித்தது ஏன்?

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு, உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அளித்த பேட்டி குறித்து விளக்கம் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், “இதுவரை நடந்த விசாரணையில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரியவந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார். ஒருவர் மட்டுமே குற்றவாளி என்ற முடிவுக்கு வரவில்லை” எனக் கூறினார்.

அதேநேரம், அதிகாரிகளின் பணி விதிகளின்படி, செய்தியாளர்களை சந்திப்பதற்கு அரசு அனுமதி தேவையில்லை; அதற்கு எந்த தடையும் இல்லை என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் எவரையும் காவல்துறை பாதுகாக்கவில்லை என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கவே காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்ததாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

988 கேமராக்கள், ஆனால்?

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு, உயர் நீதிமன்றம்

படக்குறிப்பு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்

இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக அண்ணா பல்கலைக் கழகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலைக் கழக வளாத்திற்கு 8 வழிகள் உள்ளன. வளாகத்தில் 988 கேமராக்கள் உள்ளன. அதில் 849 செயல்படுகின்றன. மற்றவை செயல்படவில்லை” எனக் கூறினார்.

மாதந்தோறும் கேமராக்கள் செயல்படுகிறதா எனப் பரிசோதனை செய்யப்படுவதாகக் கூறிய அண்ணா பல்கலைகழகம் தரப்பு வழக்கறிஞர், “கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுவதும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது” என்றார்.

“பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக் கழகத்தில் தான் படிப்பை தொடர்வார்” எனக் கூறிய அண்ணா பல்கலைக்கழக வழக்கறிஞர், “போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும். ஊடகங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஊடகங்கள் எதிரிகள் அல்ல” எனக் குறிப்பிட்டனர்.

தாங்கள் ஊடகங்களுக்கு எதிராக கூறவில்லை எனவும் அண்ணா பல்கலைக் கழகம் தரப்பு கூறியது.

நீதிபதிகள் கண்டிப்பு

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு, உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் தொடர்பான தகவல்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, “முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவரின் அடையாளத்தையும் வெளியிடக் கூடாது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்” எனக் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவரை கண்காணித்து குற்றத்தை தடுக்க காவல் துறை தவறிவிட்டதாக கூறிய மனுதாரரின் வழக்கறிஞர், “குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் செல்வாக்கு நிறைந்த அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்” என்றார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ” ஒரு திருமண நிகழ்வுக்கு செல்லும் போது நம்முடன் புகைப்படம் எடுத்துக்கொண்டால் அதை வைத்து எப்படி முடிவுக்கு வர முடியும். அப்படியென்றால் அவர்களுக்கு எங்களுடன் தொடர்பா?” எனக் கேள்வி எழுப்பினர்.

இது பொருந்தாத வாதம் என்று கண்டித்த நீதிபதிகள், “குற்ற சம்பவம் குறித்து மட்டும் பேசுங்கள்” எனக் கூறினர்.

“வழக்கு விசாரணையைக் கண்காணிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்” எனக் கூறிய நீதிபதிகள், “அண்ணா நகர் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரிகளைப் போல யார் யார்… என்பதை தெரிவியுங்கள்” எனக் கூறிவிட்டு விசாரணையை சிறிது நேரம் தள்ளிவைத்தனர்.

சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் எனக் கூறிய நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவி படிப்பை தொடர தேவையான உதவிகளை வழங்க வேண்டும். அவரிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது” என உத்தரவிட்டனர்.

மேலும், “வழக்கின் புலன் விசாரணையை காவல் ஆணையரின் கீழ் பணிபுரியும் அதிகாரியிடம் இருந்து மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாதது” என நீதிபதிகள் கூறினர்.

“விசாரணை ஆரம்படககட்டத்தில் உள்ள நிலையில், அரசு அனுமதியின்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி முக்கிய தகவல்களை பகிர்ந்த காவல் ஆணையருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாணவியின் விவரங்கள் வெளியானதால் அவருக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அவரிடம் இருந்து கல்விக் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உத்தரவிட்டது.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த குழுவில் அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு