மன்மோகன் சிங்கை கோபப்படுத்திய மோதியின் குற்றச்சாட்டு – இரு தலைவர்களின் உறவு எப்படி இருந்தது?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்குப் பிறகு, அவரது பதவிக்காலங்கள் , அரசியல் மரபு, பொருளாதார நிபுணராக அவரது கண்ணோட்டம் ஆகியவற்றைக் குறித்து பேசப்பட்டது.
மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோதி, “பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கைகளில் வலுவான தடம் பதித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவரது செயல்பாடுகள் புத்திசாலித்தனமானவை. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை அவர் மேற்கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அஞ்சலி செய்தியில், மன்மோகன் சிங் ஒரு பொருளாதார நிபுணர், அரசியல்வாதி என பிரதமர் மோதி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆனால், இதற்கு மற்றொரு பக்கம் உள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி, மன்மோகன் சிங்கை பல விஷயங்களில் விமர்சித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். அது பொருளாதாரக் கொள்கையாக இருந்தாலும் சரி, காங்கிரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல்கள் என்று கூறப்பட்டதாக இருந்தாலும் சரி, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் கூறப்படும் தோல்வியாக இருந்தாலும் சரி.
மென்மையாகப் பேசும் மன்மோகன் சிங்கை தேர்தல் பிரசாரத்தின் போது, ‘ மவுன் மோகன்சிங் ‘ மற்றும் ‘ மவுனிபாபா ‘ என்று வார்த்தைகளால் தாக்கினார் மோதி.
மன்மோகன் சிங் சமீபத்தில் நரேந்திர மோதியின் தேர்தல் பிரசாரத்தை கடுமையாக சாடியதுடன், அவர் வெறுப்புணர்வைப் பயன்படுத்துவதாகவும், பிரதமர் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
2017 டிசம்பரில், காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மணிசங்கர் அய்யரின் வீட்டில் இரவு விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி கலந்து கொண்டார்.
இந்த விருந்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த இரவு விருந்தில் குஜராத் தேர்தல் குறித்து பாகிஸ்தான் விருந்தினர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் விவாதித்ததாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டால் கோபமடைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , இந்த விவகாரத்தில் பிரதமர் மோதி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார் .
அரசியல் நோக்கங்களை அடைவதற்காக பிரதமர் மோதி பொய்களையும், கட்டுக்கதைகளையும் பரப்பி வருகிறார் என்றும் மன்மோகன் சிங் கூறினார்.
அதன்பிறகு குர்ஷித் மஹ்மூத் கசூரி பிடிஐக்கு அளித்த பேட்டியில், ” மணிசங்கர் அய்யர் நடத்திய இரவு விருந்தில் குஜராத் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை” என்றார்.
இரு தலைவர்களும் ஒருவரையொருவர் பலமுறை வார்த்தைகளால் தாக்கிக் கொண்டனர். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதும் பல முறை காணப்பட்டது. சில சந்தர்ப்பங்களில், இருவரும் ஒருவரையொருவர் ‘அன்புடன்’ சந்திப்பதைக் கூட காண முடிந்தது.
அப்படியானால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோதிக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தது?
இதுபற்றி அறிய, குஜராத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் சிலரிடம் பிபிசி குஜராத்தி பேசியது.
தலைவர்களுக்கிடையேயான அரசியல் குற்றச்சாட்டுகள் ‘பொதுவானவை’
அரசியலில் ஒருவர் மீது ஒருவர் வார்த்தைத் தாக்குதல்கள் நடப்பது ஆச்சரியமில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் ஆய்வாளருமான அஜய் உமத், “மன்மோகன் சிங் மீதான நரேந்திர மோதியின் வாய்மொழி தாக்குதல்கள் தனிப்பட்டவை என்பதை விட அரசியல் சார்ந்தவை. ஏனென்றால், அணுசக்தி ஒப்பந்தம் முதல் 2008-09-ஆம் காலகட்டத்தில் உலக மந்தநிலையில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றியது வரை மன்மோகன் சிங்கின் சாதனைகள் அனைவருக்கும் முன்பாக உள்ளது” என்று தெரிவித்தார்.
வதோதரா எம். எஸ். பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் அமித் தோலகியா, நரேந்திர மோதிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது தனிப்பட்ட மரியாதை இருந்தது என்று தெரிவித்தார்.
“அரசியல் என்பது பொதுவெளியில் நடக்கும் போர், அதனால் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். மன்மோகன் சிங் மீது மோதிக்கு தனிப்பட்ட மரியாதை இருந்தது என்று நான் நினைக்கிறேன். மோதி பொதுவாக ஒரு தலைவரைப் புகழ்வதில்லை, ஆனால் மன்மோகன் சிங்குக்கு அவர் செலுத்தும் அஞ்சலி அரசியல் அல்ல, தனிப்பட்டதாக இருந்தது”என்று பேராசிரியர் அமித் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், “மோதியும் மன்மோகனும் சந்தித்தபோது அவர்களின் உடல் மொழியில் கூட உணர்ச்சியும் மரியாதையும் வெளிப்பட்டன. பொதுவாக மோதி எந்தவொரு காங்கிரஸ் தலைவரையும் இவ்வளவு புகழ்ந்து பேசமாட்டார்”என்றும் பேராசிரியர் அமித் கூறினார்.
மன்மோகன் சிங்குக்கு குஜராத் மாடலை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததா?
குஜராத் மாடல் பற்றி தெரிந்து கொள்வதில் மன்மோகன் சிங்குக்கு ஆர்வம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அரசியல் ஆய்வாளர் அஜய் உமத், “மோதியின் பேச்சை கேட்டு மன்மோகன் சிங், குஜராத் மாடல் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்.
ஆப்பிரிக்கா, அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் போது விமானத்தில் இருந்த மன்மோகன் சிங், அதிகாரபூர்வமாக இல்லாமல் செய்தியாளர்களிடம் உரையாடியபோது மோதியின் மாடல் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
கருத்தியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், இருவருக்கும் இடையே மரியாதைக்குரிய உறவு இருந்தது என்று நம்புகிறேன்” என்றும் அஜய் தெரிவித்தார்.
சர்தார் படேல் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் பல்தேவ் அக்ஜா கூறுகையில், “மன்மோகன் சிங்கின் நற்பெயர் வித்தியாசமானது, அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. மன்மோகன் சிங்குக்கு எதிராக மோதி கூறி வரும் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் நிரூபிக்க முடியாது. ” என்று தெரிவித்தார்.
மோதி – ஷாவுக்கு எதிரான நடவடிக்கைகள்
பேராசிரியர் அமித் தோலக்கியா கூறும்போது, ”மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, மோதிக்கு எதிராக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தப்பட்டது, சொராபுதீன் வழக்கில் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோதி மற்றும் ஷாவை சிக்க வைத்து அவர்களது அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. அது பலனளிக்கவில்லை, ஏனெனில் சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சட்டப்பூர்வ சூழ்ச்சிகள் மோடியை மேலும் பிரபலமாக்கின” என்று குறிப்பிட்டார்.
அஜய் உமத் மேலும் தெரிவிக்கையில், “நரேந்திர மோதி மன்மோகன் சிங் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பல்வேறு முதல்வர் கமிட்டிகளின் தலைவராக மோதி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்களுக்கு இடையே நேர்மையான கருத்து வேறுபாடுகளும் மரியாதையும் இருந்தன”
மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் பற்றி அமித் தோலக்கியா கூறும்போது, ” மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலம் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களின் கலவையாக இருந்தது. தனது பத்தாண்டு கால ஆட்சியில் சமூக நலனுக்கு உரிமை என்ற அந்தஸ்தை வழங்கியவர் மன்மோகன் சிங். அவரது ஆட்சிக் காலத்தில் கல்வி உரிமை, தகவல் அறியும் உரிமை, உணவுப் பாதுகாப்புச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. அவை நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.”என்றும் அமித் தோலக்கியா தெரிவித்தார்.
மன்மோகன் சிங்கின் பணி பாணியைப் கூறும்போது, “அவரது ஆளுமையைப் பொருத்தவரை, அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை, எனவே அவருக்கு தனது வேலையை எவ்வாறு விளம்பரப்படுத்துவது அல்லது அங்கீகாரம் பெறுவது என்று தெரியவில்லை. அவர் எப்போதும் காந்தி குடும்பத்தின் பின்னணியில் இருந்தார். அவருக்கு ஒரு பிரபலமான அடித்தளம் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும்” என்று பேராசிரியர் அமித் தோலக்கியா குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.