பௌத்த சமய அறநிலைய சட்டத்தை திருத்த நடவடிக்கை – அமைச்சர் ஹினிதும மத போதனைகள், நடைமுறைகளை சிதைப்பதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதாக மத புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
மத போதனைகள், நடைமுறைகளை சிதைப்பதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை மதத் தலைவர்கள் மற்றும் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட பௌத்த மத தலைவர்கள் போதனைகள், நடைமுறைகளை சிதைப்பதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளனர்.
அத்துடன் பல பௌத்த பிக்குகள் சியாம் பிரிவின் அஸ்கிரி மற்றும் மல்வத்த பீடங்களின் தலைமை பீடாதிபதிகளிடம் முறைப்பாடுகளை அளித்துள்ளனர். அந்த முறைப்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் கவனத்தைச் செலுத்தியுள்ளது.
அவர்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவதற்காக பௌத்த சமய அறநிலைய சட்டத்தின் 42 மற்றும் 43 பிரிவுகள் திருத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு குறித்த திருத்தங்கள் அரசியலமைப்புடன் இணங்குவது சம்பந்தமாக ஆராயப்படுகிறது. இத்தகைய திருத்தங்களின் நோக்கங்களில் மதங்களை சிதைக்கும் போலி மத்தலைவர்களால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பது முதன்மை நோக்கமாகும் என்றார்.