போதைப்பொருள் நாட்டிற்குள் வருவதைத் தடுத்தல் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை !

by wamdiness

போதைப்பொருள் நாட்டிற்குள் வருவதைத் தடுத்தல் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை ! on Saturday, December 28, 2024

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது, விமான நிலைய வளாகத்தில் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது மற்றும் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பது குறித்து நீண்டநேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் நிறவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் கூட்டுக் கெமரா அமைப்பு மற்றும் கூட்டு கண்காணிப்பு அறையை நிறுவுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

மேலும், தற்போதுள்ள ஸ்கேனிங் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேனிங் இயந்திரங்களைப் பயன்படுத்தி, கடத்தல் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான புதிய செயல்முறையை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை சுங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நிலவும் தவறான கருத்துக்களை இல்லாது செய்ய செயற்படுமாறும், இது தொடர்பில் ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் கடுமையாகவும் உடனடியாகவும் எடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்

தொடர்புடைய செய்திகள்