பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல்

நெமிசிஸ், சூரியன், இரட்டை நட்சத்திரம்

பட மூலாதாரம், Serenity Strull/ Getty Images

படக்குறிப்பு, ஒரு காலத்தில் சூரியனுக்கு ஒரு இணை நட்சத்திரம் இருந்திருக்கலாம் என்பதற்கான தடயங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
  • எழுதியவர், ஜானதன் ஓ’கல்லகன்
  • பதவி, பிபிசி ஃப்யூச்சர்

நமது விண்மீன் மண்டலத்தில் பல நட்சத்திரங்கள் ஜோடியாக உள்ளன, ஆனால் சூரியன் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக உள்ளது. ஒரு காலத்தில் சூரியனுக்கு அருகில் ஒரு இணை நட்சத்திரம் இருந்திருக்கலாம் என்பதற்கான தடயங்களை இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அப்படியென்றால் அந்த இணை நட்சத்திரம் எங்கே போனது என்பதுதான் தற்போதைய கேள்வி.

நமது சூரியன் சற்று தனிமைப்படுத்தப்பட்ட நாடோடி. பால் வீதியில் தனிமையில் சுற்றிக்கொண்டிருக்கும் சூரியன், அதன் மையத்தை சுமார் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.

நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான ப்ராக்ஸிமா சென்டாரி (Proxima Centauri) 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. அதாவது, மிக வேகமான விண்கலம் கூட அதை அடைய 7,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

நெமிசிஸ், சூரியன், இரட்டை நட்சத்திரம்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நமது சூரியக் குடும்பத்தின் மையத்தில் உள்ள நட்சத்திரமான சூரியன் அசாதாரணமானதாகத் தெரிகிறது. ஏனெனில் நமது விண்மீன் மண்டலத்தில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் இரட்டை நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படும் ஜோடிகளாக உள்ளன. இந்த ஜோடி நட்சத்திரங்கள் ஒன்றாக பால் வீதியை வலம் வருகின்றன.

சமீபத்தில், வானியலாளர்கள் பால்வீதியின் மையத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துளைக்கு மிக அருகில் ஒரு ஜோடி நட்சத்திரங்களைக் கவனித்தனர். கருந்துளையின் தீவிர ஈர்ப்பு விசையானது நட்சத்திரங்களைத் துண்டித்துவிடும் அல்லது ஒன்றாக நசுக்கும் என்று அவர்கள் கருதியதற்கு மாறாக இப்படி நிகழ்ந்துள்ளது வானியலாளர்களுக்குச் சற்று ஆச்சரியமாக உள்ளது.

சூரியனின் இணை நட்சத்திரம்

பல நட்சத்திரங்கள் ஜோடிகளாகக் காணப்படுகின்றன. சில விஞ்ஞானிகள் நமது சூரியன் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் ஒரு இணையுடன் பிறந்திருக்கலாம் அதாவது இரட்டையராக (இரட்டை நட்சத்திரங்களாக) பிறந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். இது ஒரு புதிரான கேள்வியை எழுப்புகிறது.

நமது சூரியனுக்கு ஒரு காலத்தில் ஒரு இணை நட்சத்திரம் இருந்ததா, அது நீண்ட காலத்திற்கு முன்பு மறைந்துவிட்டதா? என்பதுதான் அக்கேள்வி.

இதற்கு நிச்சயம் சாத்தியம் உள்ளது என்கிறார் அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்படக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த வானியலாளர் கோங்ஜி லி.

“அது மிகவும் சுவாரஸ்யமானது” என்றும் அவர் கூறுகின்றார்.

அதிர்ஷ்டவசமாக, நமது சூரியன் ஒரு தனி நட்சத்திரம். அதற்கு இணை நட்சத்திரம் இருந்தால், அதன் ஈர்ப்பு விசை பூமி மற்றும் பிற கோள்களின் சுற்றுப்பாதையை சீர்குலைத்து, நம் வீட்டை கடுமையான வெப்பத்திலிருந்து பயங்கரமான குளிராக மாற்றுவது போன்ற தீவிர மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் நமது கிரகம் உயிர்கள் வாழ முடியாத அளவிற்கு கடுமையானதாக மாறியிருக்கும்.

பூமிக்கு மிக அருகில் உள்ள இரட்டை நட்சத்திரங்களான ஆல்பா சென்டாரி ஏ மற்றும் பி ஆகியவை பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட சுமார் 24 மடங்கு இடைவெளியில் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன, இது தோராயமாக 3.6 பில்லியன் மைல்கள் ஆகும்.

நமது சூரியனுக்கு மங்கலான ஒரு இணை நட்சத்திரம் இருந்திருக்கலாம், அது நெமிசிஸ் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நட்சத்திரம் இருப்பதாக 1984இல் முதன்முதலில் முன்மொழியப்பட்டது. அதன் பிறகு, பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் அத்தகைய நட்சத்திரம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நெமிசிஸ், சூரியன், இரட்டை நட்சத்திரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நெமிசிஸ் நட்சத்திரம் இருப்பதாக 1984இல் முதன்முதலில் முன்மொழியப்பட்டது

நமது சூரியன் முதன்முதலில் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான போது, அது வித்தியாசமான சூழ்நிலையாக இருந்திருக்கலாம்.

வாயுக்கள், தூசுகள் அடங்கிய மாபெரும் மேகக் கூட்டங்கள் ஒன்று கூடும்போது நட்சத்திரங்கள் உருவாகின்றன. இந்த மேகக் கூட்டங்கள், பல்லாயிரக்கணக்கான ஒளி ஆண்டுகளாக படிப்படியாக ஈர்ப்பு விசையால் ஒன்றாகச் சேர்கின்றன. அதன்பின் அவை லட்சக்கணக்கான ஆண்டுகளாக வெப்பமடையத் தொடங்குகிறன.

இறுதியில், அணுக்கரு இணைவைத் தொடங்கி, இது நட்சத்திர உருவாக்கத்தின் ஆரம்ப நிலையை அடைகிறது. இந்த குட்டி நட்சத்திரங்களைச் சுற்றி, எஞ்சிய தூசுகள், வாயுக்கள் சுழலும். அவை இறுதியில் கிரகங்களை உருவாக்குகின்றன.

‘எல்லா நட்சத்திரங்களும் ஜோடிகளாக உருவாகலாம்’

2017ஆம் ஆண்டில், கனடாவில் உள்ள குயின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் இயற்பியலாளர் சாரா சதாவோய், பல இளம் இரட்டை நட்சத்திர அமைப்புகள் காணப்படும் பெர்சியஸ் எனப்படும் மூலக்கூறு மேகத்தின் வானொலி ஆய்வின் தரவைப் பயன்படுத்தினார்.

இதன் மூலம் நட்சத்திரங்கள் பொதுவாக ஜோடிகளாக அல்லது பல நட்சத்திர அமைப்புகளாக உருவாகலாம் என்று அவர் முடிவு செய்தார். நட்சத்திர உருவாக்கம் பெரும்பாலும் ஜோடிகளாக உருவாகும் புரோட்டோஸ்டார்களில் (புரோட்டோஸ்டார்ஸ் என்பது ஒரு நட்சத்திரத்தின் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டம்) விளைகிறது என்று அவரது ஆராய்ச்சி முடிவுகள் பரிந்துரைத்தன.

அவரும் அவருடன் இருந்த மற்ற ஆராய்ச்சியாளர்களும் எல்லா நட்சத்திரங்களும் ஜோடிகளாக அல்லது பல்வகையான நட்சத்திர அமைப்புகளாக உருவாகலாம் என்று பரிந்துரைத்தனர் .

“நெபுலாக்கள் மூலம் சிறிய அடர்த்தியான பகுதிகள் உருவாகலாம். அவை சிதைந்து பல நட்சத்திரங்களை உருவாக்க முடியும், அதை நாங்கள் துண்டுகளாக்கும் செயல்முறை என்று அழைக்கிறோம்,” என்கிறார் சதாவோய்.

மேலும் “இந்த நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருந்தால், அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவை மிகவும் நெருக்கமாக இருந்தால், ஈர்ப்பு விசை அவற்றை ஒன்றாக இணைக்க வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

சதாவோயின் ஆராய்ச்சி, அனைத்து நட்சத்திரங்களும் முதலில் இரட்டை நட்சத்திரங்களாக அதாவது ஜோடிகளாக உருவாகியிருக்கலாம், மற்றவை 10 லட்சம் ஆண்டுகளுக்குள் வேகமாக உடைந்துவிடும் என்று தெரிவிக்கின்றது.

“நட்சத்திரங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்கின்றன,” என்று அவர் கூறுகிறார். “இது ஒரு குறுகிய காலம் தான். ஆனால் அந்த குறுகிய காலத்தில் பல சம்பவங்கள் நடக்கின்றன” என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதை வைத்து நம்முடைய சூரியனுக்கும் இதேபோல நடந்திருக்கலாமா என்று கேள்வி எழுகிறது.

நமது சூரியனுக்கும் இணை நட்சத்திரம் இல்லை என நினைக்க எந்தவொரு காரணமும் இல்லை என்கிறார் சதாவோய். ஆனால் “நம்முடைய சூரியன் ஒரு இணையுடன் உருவாகி இருந்தால், அதை நாம் இழந்துவிட்டோம்” என்றும் அவர் கூறுகிறார்.

நெமிசிஸ், சூரியன், இரட்டை நட்சத்திரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூரியனுக்கு இணை நட்சத்திரம் இருந்திருந்தால், தொலைதூரப் பகுதியில் புளூட்டோ போன்ற அளவில் குறுகிய கிரகங்கள் உருவாக வழிவகுத்திருக்கலாம்

இரட்டை நட்சத்திரங்களில் ஒன்றாக இருந்த சூரியன்

நமது சூரியன் ஒரு காலத்தில் இரட்டை நட்சத்திரங்களில் ஒன்றாக இருந்ததாக சில தடயங்கள் வெளிவருகின்றன.

2020ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வானியலாளர் அமிர் சிராஜ், புளூட்டோவிற்கு அப்பால் நமது சூரியக் குடும்பத்தைச் சுற்றியுள்ள பனிக்கட்டி வால் நட்சத்திரங்களின் பகுதி, ஊர்ட் கிளவுட் என்று அழைக்கப்படும். அது சூரியனின் இணை நட்சத்திரத்தின் தடத்தை கொண்டிருக்கக்கூடும் என்றும் பரிந்துரைத்தார்.

ஊர்ட் கிளவுட் என்பது நமது சூரிய குடும்பத்தைச் சுற்றி, மிகவும் தொலைதூரத்தில் உள்ள பனிக்கட்டிப் பகுதி. நாம் அனுப்பிய வாயேஜர் 1 என்ற விண்கலம் கூட இன்னும் 300 ஆண்டுகளுக்குள் அதை அடைய முடியாத அளவுக்கு அது வெகு தொலைவில் உள்ளது.

நமது சூரியனுக்கு இணை நட்சத்திரம் இருந்திருந்ததால், தொலைதூரப் பகுதியில் புளூட்டோ போன்ற அளவில் குறுகிய கிரகங்கள் உருவாக வழிவகுத்திருக்கலாம் என்று சிராஜ் கூறுகிறார்.

இல்லையென்றால், இது ஒரு பெரிய கிரகத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஒருவேளை ஒன்பதாம் கிரகமான நெப்டியூன் அளவிலான கிரகம் அங்கு இருக்கக்கூடும். சில வானியலாளர்கள் நமது சூரிய குடும்பத்தின் வெளிப்புற பகுதிகளில் ஒன்பதாவது கிரகம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நம்புகிறார்கள்.

“ஊர்ட் கிளவுட்டில் சுற்றும் பில்லியன் அல்லது டிரில்லியன்கணக்கான பொருட்களுடன், ஒரு இணை நட்சத்திரம் இல்லாமல், ஊர்ட் கிளவுட்டின் தொலைதூரத்தில் நாம் பார்ப்பது போல் பல பொருட்களை உருவாக்குவது கடினம்” என்கிறார் சிராஜ்.

மேலும் ஒரு இணை நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை சீர்குலைந்து அத்தகைய கிரகத்தை அதன் தொலைதூர இடத்திற்கு நகர்த்தியிருக்கலாம். ஒன்பதாவது கிரகம் போன்ற தொலைதூர கிரகத்தை நாம் கண்டுபிடித்தால், சூரியனில் இருந்து இவ்வளவு தூரம் செல்ல எப்படி முடிந்தது என்பதை விளக்குவது ‘மிகவும் கடினமானது’ என்று சிராஜ் கூறுகிறார்.

நெமிசிஸ், சூரியன், இரட்டை நட்சத்திரம்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, பூமிக்கு மிக அருகில் உள்ள இரட்டை நட்சத்திரங்களான ஆல்பா சென்டாரி ஏ மற்றும் பி

ஒன்பதாம் கோள் உள்ளதா?

அமெரிக்காவின் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கிரக விஞ்ஞானி கான்ஸ்டான்டின் பாட்டிஜின், 2016ஆம் ஆண்டில் , ஒன்பதாம் கோள் இருப்பதாக முதலில் முன்மொழிந்தார். மேலும் “ஊர்ட் கிளவுட்டை விளக்க ஒரு இணை நட்சத்திரம் தேவையில்லை” என்கிறார் பாட்டிஜின்.

“சூரியன் ஒரு நட்சத்திரக் குழுவில் உருவானது என்பதை அறிவதன் மூலம் ஊர்ட் கிளவுட் இருப்பதை நீங்கள் முழுமையாக விளக்கலாம். வியாழன் மற்றும் சனி ஆகியவை அவை தற்போது இருக்கும் அளவில் உருமாறியதால், அவை பல பொருட்களை வெளியேற்றின.” என்கிறார்.

ஒன்பதாம் கோளைக் கூட சூரியன் பிறந்த குழுவில் இருந்து கடந்து செல்லும் மற்ற நட்சத்திரங்கள் மூலம் விளக்க முடியும் என்கிறார் பாட்டிஜின்.

இருப்பினும், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், ஊர்ட் கிளவுட்டின் உட்பகுதியில் உள்ள விளிம்பை ஒரு இணை நட்சத்திரத்தின் இணை கொண்டு விளக்க முடியும் என்று பாட்டிஜின் பரிந்துரைக்கிறார்.

“கணினி தொழில்நுட்பத்தின் மூலம் நாம் கண்டறிந்தது என்னவென்றால், பொருள்கள் சிதறிவிடுவதால், அவை இணை நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்ளத் தொடங்குகின்றன” என்று பாட்டிஜின் விளக்குகின்றார்.

மேலும் “அவை வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களின் சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்து ஊர்ட் கிளவுட்டின் உட்பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சிப் பார்வை உண்மையா என்பதை சிலியில் உள்ள வேரா ரூபின் அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் ஒரு புதிய தொலைநோக்கி மூலம் உறுதிப்படுத்த முடியும். இது அடுத்த ஆண்டு இயக்கப்படும். இதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் இரவு நேரங்களில் வானத்தில் மிக விரிவான ஆய்வு நடத்தப்பட உள்ளது.

“வேரா ரூபினை விரிவாகச் செயல்படுத்தத் தொடங்கியவுடன், இணை நட்சத்திரத்தின் தெளிவான அறிகுறிகளை நாம் சரிபார்க்கலாம்” என்கிறார் பாட்டிஜின்.

இணை நட்சத்திரத்தின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளின் மற்றொரு அறிகுறியாக, நமது சூரியன் சுமார் ஏழு டிகிரி சாய்ந்துள்ளது.

இந்த சாய்வு மற்றொரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையின் காரணமாக இருக்கலாம், இது நமது சூரியனை சம நிலையிலிருந்து சற்று சாய்வான நிலையில் இருக்கச் செய்கின்றது.

“ஆரம்பத்தில் ஒரு இணை நட்சத்திரம் இருந்தது மிகவும் இயற்கையான விளக்கம் என்று நான் நினைக்கிறேன்,” என்று பாட்டிஜின் கூறுகிறார். இதன் விளைவாகத்தான் விண்வெளி முழுவதும் மற்ற இரட்டை நட்சத்திரங்களை நாம் காண்கிறோம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரம்

நமது சூரியனுக்கான இணை நட்சத்திரம் இருந்ததாகக் கூறும் ஆய்வுகளை ஆதரிக்கும் ஆரம்ப கால சான்றுகள் சரியாக இருந்தாலும், இந்த ‘காணாமல் போன இரட்டையை’ கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று சதாவோய் விளக்குகிறார்.

எந்த இணை நட்சத்திரமும் ‘இரவு வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் கடலில் தொலைந்து போகும்’ என்றும் சதாவோய் கூறுகின்றார்.

எவ்வாறாயினும், நமது சூரியன் உருவான அதே பகுதியில் பிறந்த நட்சத்திரங்கள் ஒரே மாதிரியான கலவையைக் கொண்டிருக்கலாம், ஏனெனில் அவை ஒரே மாதிரியான வாயுக்கள் மற்றும் தூசு கலவையிலிருந்து உருவாக்கப்பட்டு, அவை அனைத்தும் நட்சத்திரக் குடும்பத்தின் உண்மையான உடன்பிறப்புகளாக மாறுகின்றன.

2018 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் நமது சூரியனின் அத்தகைய ‘இரட்டை’ நட்சத்திரத்தை அடையாளம் கண்டுள்ளனர்.

சூரியனைப் போன்ற அதே அளவு மற்றும் ரசாயன கலவையோடு, 200 ஒளி ஆண்டுகளுக்கு குறைவான தூரத்தில் அது அமைந்துள்ளது.

ஆனால் இதுகுறித்து நாம் மிகவும் உற்சாகமடைவதற்கு முன்பு, நமது சூரியன் பிறந்த வாயு மற்றும் தூசுகள் அடங்கிய மேகக் கூட்டமே, ‘நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை’ உருவாக்கியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று சதாவோய் கூறுகிறார்.

இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலவையைக் கொண்டிருக்கின்றன. அதாவது அந்த நட்சத்திரம் நமது சூரியனின் உண்மையான இணையா என்பதை அறிய வழி இருக்காது.

நமது சூரியனின் எந்த இணையும் அதே அளவிலான நட்சத்திரமாக இருந்திருக்காது. “அது ஒரு [சிறிய] சிவப்பு நட்சத்திரமாகவோ அல்லது வெப்பமான, நீல நட்சத்திரமாகவோ இருந்திருக்கலாம்” என்கிறார் சதாவோய்.

நமது சூரியனுக்கு ஒரு காலத்தில் இணை நட்சத்திரம் இருந்திருக்கலாம் என்ற எண்ணம், நிரூபிப்பதற்கு சவாலான அதே சமயம், பல நட்சத்திரங்களுக்கும் இதேபோன்ற வரலாறுகள் இருக்கலாம் என்றும் கூறுகிறது.

இது சூரியக் குடும்பத்தில் மற்ற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் கோள்களான எக்ஸோப்ளானெட்டுகள் பற்றிய நமது புரிதலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பல நட்சத்திரங்கள் இரட்டை நட்சத்திரங்களாக (இரட்டையராக) தொடங்கினால், இந்த தொலைதூர கிரகங்களின் உருவாக்கம் மற்றும் குணாதிசயங்களைப் பற்றி நாம் எப்படி நினைக்கிறோம் என்ற பார்வையை மாற்றலாம்.

நெமிசிஸ், சூரியன், இரட்டை நட்சத்திரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூரியனின் இணை நட்சத்திரம் பால் வீதிக்கு அப்பால் கூட இருக்கலாம் என்கிறார் சதாவோய்

சூரியனுடன் இரட்டையராக பிறந்த இன்னொரு நட்சத்திரம் எங்கே?

முக்கியமாக, நமது சூரிய குடும்பத்தில் உள்ள உயிர்கள் மற்றும் கிரகங்கள் மற்றொரு நட்சத்திரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது. “இரட்டை நட்சத்திரங்களைச் சுற்றி வரும் பல புறக்கோள் அமைப்புகள் உள்ளன,” என்கிறார் லி.

அவற்றில் சில கிரகங்கள் இரண்டு நட்சத்திரங்களில் ஒன்றைச் சுற்றி வருகின்றன, இது ஒரு சூழ்நிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. மற்றவை இரண்டு நட்சத்திரங்களையும் சுற்றி வருகின்றன. மேலும் ஸ்டார் வார்ஸில் உள்ள கற்பனைக் கிரகமான டாட்டூயின் போன்ற இரண்டு சூரியன்களுடன் வானங்கள் உள்ளன.

“சில நேரங்களில் அந்த இரட்டை நட்சத்திரங்கள் அத்தகைய அமைப்புகளில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்” என்கிறார் லி.

“இது நட்சத்திரம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் பொருத்தது. நட்சத்திரம் நெருக்கமாக இருந்தால், அது கோள்களின் சுற்றுப்பாதையை சீர்குலைத்து, விசித்திரமான, வட்டமற்ற வடிவங்களுக்குத் தள்ளும்.”

“சூழ்நிலை அமைப்புகளில், கிரகங்கள் அதிக நீள்வட்ட சுற்றுப்பாதைகளைக் கொண்டிருக்கலாம். இது அவற்றை நிலையற்றதாக மாற்ற வேண்டிய அவசியமில்லை.” என்று லி கூறுகிறார்.

இருப்பினும், ஒரு கிரகம் நட்சத்திரத்திற்கு அருகில் நகரும் போது குறிப்பிடத்தக்க வெப்பநிலை மாற்றங்களை உணரக்கூடும் என்றும் அவர் கூறுகின்றார்.

நமது சூரியனுக்கு ஒரு காலத்தில் இணை நட்சத்திரம் இருந்திருந்தாலும், பூமியில் நிகழ்ந்த உயிர்களின் உருவாக்கத்தை அது தடுக்கவில்லை என்று தெரிகிறது. விஞ்ஞானிகள் நமது சூரியக் குடும்பத்தின் தொலைதூர பகுதிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்வதால், இந்த இணை நட்சத்திரம் ஒரு காலத்தில் இருந்ததற்கான பல அறிகுறிகளை அவர்கள் கண்டறியலாம். அதன் தடயம் கண்டுபிடிக்கப்பட காத்திருக்கின்றது.

“அவ்வாறு நமது சூரியனுடன் ஒரு இணை நட்சத்திரம் இருந்தால், அது தனக்கான சொந்த சூரிய குடும்பத்துடன் விண்வெளியில் எங்காவது இருக்கலாம். அல்லது விண்மீன் மண்டலத்தின் மறுபக்கத்தில் கூட இருக்கலாம்”

“அது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.” என்கிறார் சதாவோய்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.