- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணி்க்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று, நிதிஷ் குமார் ரெட்டியின் அற்புதமான சதம், வாஷிங்டன் சுந்தரின் அரைசதம் ஆகியவற்றால் இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பித்தது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தநிலையில் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறுவதில் சாதகமான வாய்ப்பைப் பெறும் என்பதால் ஆட்டம் உச்சக் கட்ட பரபரப்பில் செல்கிறது.
சுந்தர்-நிதிஷின் நங்கூரம்
ரிஷப் பந்த்(6), ஜடேஜா (4) இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் செஷனிலேயே ரிஷப் பந்த் 36 ரன்னில் போலந்த் பந்துவீச்சிலும், ஜடேஜா 17 ரன்னில் லேயான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினர். 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க 54 ரன்கள் தேவையாக இருந்தது. நண்பகல் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்திருந்தது.
8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர் இருவரும் மெல்ல ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். மெல்போர்னில் நன்கு வெயில் இருந்ததால் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாகவே இருந்தது. இதனால் நிதிஷ், சுந்தர் இருவரையும் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் அநாசயமாக எதிர்கொண்டு பவுண்டரிகள், சிக்ஸர் அடித்த நிதிஷ் குமார் டெஸ்டில் முதல் அரைசதத்தை நிறைவு செய்தார்.
ஆட்டத்தின் இடையே இருமுறை மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. நிதிஷ் குமாருக்கு முழு ஒத்துழைப்பு தந்து பேட் செய்த சுந்தர், பவுண்டரிகள் அடிக்காமலேயே அரைசதத்தை நெருங்கினார், அரைசதம் அடித் தபோது ஒரு பவுண்டரி மட்டுமே வாஷிங்டன் சுந்தர் அடித்திருந்தார்.
இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க 6 பந்துவீச்சாளர்களை கேப்டன் கம்மின்ஸ் பயன்படுத்தியும் முடியவில்லை. ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி, 96 ரன்கள் சேர்த்திருந்த போது, போலந்த் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து முதல் சதத்தை பதிவு செய்தார்.
8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்திருந்த போது லேயான் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த பும்ரா டக்அவுட் ஆனார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்துள்ளது. நிதிஷ் குமார் 105 ரன்களுடன், சிராஜ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
நிதிஷ் குமார் ரெட்டி 171 பந்துகளில் சதம் அடித்து, 105 ரன்கள் சேர்த்தார். நிதிஷ் குமார் ரெட்டிக்கு துணையாக பேட் செய்த தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 50 ரன் எடுத்தார். 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் கூட்டணி 127 ரன்கள் சேர்த்தனர்.
116 ரன்கள் முன்னிலை
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இதுவரை 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவைவிட இந்திய அணி இன்னும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளது.
3வது நாளில் இன்று மாலை நேரத்தில் வெளிச்சக்குறைவு, மழை வருவது போல் இருந்ததால் ஆட்டம் 70 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முடிக்கப்பட்டது.
எடுபடாத ஆஸ்திரேலியப் பந்துவீச்சு
மெல்போர்னில் இன்று வெயில் நன்றாகவே அடித்ததால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சுத்தமாக எடுபடவில்லை, பந்தும் எதிர்பார்த்த அளவு ஸ்விங் ஆகவில்லை.
இதனால் 2வது செஷனில் இருந்து நிதிஷ் குமார், சுந்தரைப் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பல்வேறு வகைகளில் முயன்றும் முடியவில்லை. புதிய பந்து மாற்றிய பின்பும் ஸ்டார்க், கம்மின்ஸ் பந்துவீசியும் எடுபடவில்லை.
ஆடுகளத்தில் லேசான வெடிப்புகள் வரத் தொடங்கி இருப்பதால், கடைசி இரு நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாறலாம். அப்போது நேதன் லயான், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு இந்த ஆட்டத்தில் பெரிய துருப்புச்சீட்டாக இருக்கும்.
அணியைக் காத்த நிதிஷ் குமார்
3வது நாளான இன்றைய ஆட்டம் முழுவதும் நிறைந்திருப்பது நிதிஷ் குமாரின் முதல் சதம், அரைசதம் அடித்து புஷ்பா பட பாணியில் அவரின் செயல், வாஷிங்டன் சுந்தரின் அரைசதம் ஆகியவைதான்.
பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டது நிதிஷ் குமாரின் பேட்டிங்தான். அதனால்தான் தொடர்ந்து 3 போட்டிகளிலும் நிதிஷ்குமார் ரெட்டியை அமர வைக்க எந்தவிதமான காரணமும் இன்றி தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார். முதல் டெஸ்டில் இந்திய அணி முன்னிலை பெறவும் நிதிஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் காரணமாக இருந்தது.
இந்த டெஸ்டில் இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பிக்கவும் நிதிஷ்குமாரின் சதம் முக்கியப் பங்காற்றியது. இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் முன்னனி வீரர்கள் ரோஹித், கோலி, சுப்மான் கில், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோரின் பேட்டிங் சராசரி 30 ரன்களுக்கு கீழ் இருக்கையில் நிதிஷ் குமாரின் சராசரி 50 ரன்களுக்கு மேல் இருப்பது அவரின் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது.
நிதிஷ் குமார் ரெட்டியை 8-வது வரிசையில் களமிறக்குவது சரியா அல்லது நடுவரிசையில் களமிறக்கலாமா என்று அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரை சிந்திக்க வைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க், போலந்த் பந்துவீச்சில் முன்னணி பேட்டர்கள் விக்கெட்டை கோட்டைவிட்டு தலைகவிழ்ந்து சென்ற நிலையில் நிதிஷ் ரெட்டி இவர்களின் பந்துவீச்சை அநாயசமாக எதிர்கொண்டு ஆடினார். கவர் டிரைவ், லாங் ஆனில் பவுண்டரி, புல் ஷாட் என அற்புதமான ஆட்டத்தை கம்மின்ஸ், ஸ்டார்க் பந்துவீச்சில் நிதிஷ் வெளிப்படுத்தினார்.
கவனிக்கப்படாத ஹீரோ வாஷிங்டன்
இன்றைய ஆட்டத்தின் மொத்த கவனத்தையும் நிதிஷ் குமார் தனது சதத்தால் ஈர்த்துவிட்டாலும், பேசப்படாத ஹீரோ ஒருவர் இருக்கிறார் என்றால் அது வாஷிங்டன் சுந்தர்தான். நிதிஷ் குமாருக்கு துணையாக பேட் செய்து 127 ரன்கள் பார்டனர்ஷிப் அமைக்க வாஷிங்டன் முக்கியக் காரணமாக அமைந்தார். 2021ம்ஆண்டு சிட்னி டெஸ்டை வெல்ல வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் முக்கியமாக இருந்த நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் இந்திய அணிக்கு மகுடமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
அஸ்வின் ஓய்வுக்குப் பின் அணியில் தேர்வு செய்யப்பட்ட வாஷிங்டன் சுந்தர் நிலை பல்வேறு விதங்களில் கேள்விகளை எழுப்பியது. சுப்மான் கில்லை அமரவைத்து வாஷிங்டனை தேர்வு செய்தது சரியா என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், அனைத்துக்கும் பதில் அளிக்கும் வகையில், தனது தேர்வை நியாயப்படுத்தும் வகையில் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து அணியை காப்பாற்றியுள்ளார்.
122 ஆண்டு சாதனையை முறியடித்த நிதிஷ் குமார்
மெல்போர்ன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு அணியில் 8-வது வீரராகக் களமிறங்கி அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை நிதிஷ் குமார்(105) ரெட்டி இன்று படைத்தார். இதற்கு முன் 1902ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ரெக்கி டப் 10-வது வீரராக களமிறங்கி 102 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை நிதிஷ் ரெட்டி முறியடித்துள்ளார்.
இந்திய அணியில் 8-வது வரிசை அதற்கு கீழாக களமிறங்கி சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையை நிதிஷ் படைத்துள்ளார். இதற்கு முன் அனில் கும்ப்ளே 2008-ஆம் ஆண்டு அடிலெய்ட் நகரில் 87 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8-வது வீரராக களமிறங்கி சதம் அடித்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் நிதிஷ் குமார் பெற்றார். இதற்கு முன் விருத்திமான் சாஹா ராஞ்சியில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 117 ரன்கள் சேர்த்திருந்தார்.
வாஷிங்டன் சுந்தர் –நிதிஷ் குமார் இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது என்பது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3வது அதிகபட்ச பார்ட்னர்ஷிபாகும். இதற்கு முன் 2013ல் சென்னையில் நடந்த டெஸ்டில் தோனி- புவனேஷ்வர் குமார் 140 ரன்களும், 2008-ஆம் ஆண்டு சிட்னி டெஸ்டில் சச்சின், ஹர்பஜன் சேர்ந்து 108 ரன்களும் சேர்த்திருந்தனர்.
மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை நிதிஷ் குமார் பெற்றார். இன்று நிதிஷ் குமார் சதம் அடித்த போது அவருக்கு 21 வயது நிரம்பி 214 நாட்கள் ஆகியிருந்தது. ஆனால், இதற்கு முன் சச்சின் 18 வயது 253 நாட்களிலும் ரிஷப் பந்த் 21 வயது 91 நாட்கள் இருந்த போது சதம் அடித்திருந்தனர்.
மெல்போர்ன் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் நிதிஷ் பெற்றார். இதற்கு முன் 1948-ஆம் ஆண்டு மன்கட் தனது முதல் சதத்தை மெல்போர்ன் மைதானத்தில் பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் 2008-ஆம் ஆண்டு கடைசியாக தென் ஆப்பிரிக்க அணியின் டுமினி தனது முதல் சதத்தை மெல்போர்னில் பதிவு செய்தார். அதன்பின் இதுவரை எந்த நாட்டு வீரரும் தங்களின் முதல் சதத்தை மெல்போர்னில் அடித்திராத நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின் நிதிஷ் குமார் இங்கு முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
புஷ்பா பாணியில் கொண்டாட்டம்
நிதிஷ் குமார் ரெட்டி 81 பந்துகளில் இன்று முதல் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த அவரை சக பேட்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். நிதிஷ் குமார் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த மகிழ்ச்சியை புஷ்பா திரைப்பட பாணியில் பேட்டை கழுத்தில் வைத்து சீவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வர்ணனையாளர்களும் புஷ்பா திரைப்பட பாணியில் நிதிஷ் கொண்டாடுகிறார் என்று சிரித்தனர்.
நிதிஷ் சதத்தை கண்டு ஆனந்தக் கண்ணீர்
நிதிஷ் குமாரின் ஆட்டத்தைக் காண மெல்போர்ன் மைதானத்தில் அவரின் தந்தையும் வந்திருந்தார். நிதிஷ் குமார் ரெட்டி போலந்த் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில் முதல் சதத்தை பதிவு செய்ததைப் பார்த்தவுடன் அவரின் தந்தை ஆனந்தக் கண்ணீர் வி்ட்டு அழுதார். கையில் தேசியக் கொடியை வைத்துக் கொண்டு நிதிஷ் குமார் ஆட்டத்தை ரசித்த அவரின் தந்தையை அருகே இருந்த ரசிகர்கள் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆட்டம் யார் பக்கம்?
இந்த டெஸ்டில் இன்னும் ஆஸ்திரேலிய அணியின் கைதான் ஓங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியைவிட 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இருக்கிறது. கடைசி விக்கெட்டுக்கு நிதிஷ், சிராஜ் களத்தில் உள்ளனர். இந்திய அணி நாளை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதல் இன்னிங்ஸ் சிராஜ் விக்கெட்டை இழந்தால் முடிவுக்கு வரலாம். எப்படிப் பார்த்தாலும் 100 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி இருக்கும்.
இந்த 100 ரன்கள் முன்னிலையை வைத்து ஆட்டத்தின் வெற்றியை ஆஸ்திரேலியா எளிதாக தீர்மானிக்க இயலும். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் நாளை முழுவதும் ஆஸ்திரேலிய அணி பேட் செய்து 300 ரன்களுக்கு மேல் அடித்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு இலக்கு வைத்து கடைசி நாளை முழுவீச்சில் எதிர்கொண்டால் ஆட்டத்தில் ஸ்வரஸ்யம் அதிகரிக்கும்.
கடைசி நாளில் ஆட்டம் யார் பக்கம் செல்லும், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றைப் பொருத்து ஆட்டத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும். இப்போதுள்ள நிலையில் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் நிலையில் ஆஸ்திரேலியஅணிதான் இருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.