பகல் முழுவதும் ரைஸ்மில் வேலை, இரவு முழுவதும் போட்டோ ஷூட் – விஜயராஜ் கேப்டனாக உருவான தருணம்

மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த நினைவுகளைப் பகிர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள்

பட மூலாதாரம், RASI STUDIO

  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்

(இன்று விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி 2023-ஆம் ஆண்டு வெளியான இந்த கட்டுரை புதுப்பிக்கப்படுகிறது)

மதுரையில் இருந்து தமிழ் திரை உலகிற்கு நண்பர்களால் அழைத்து வரப்பட்டவர் தான் விஜயராஜ் என்கிற விஜயகாந்த். ஒரு காலத்தில் மதுரையில் இருந்து சினிமாவில் நடிக்க சாதாரண இளைஞராக கிளம்பியவர், பல வருடங்கள் கழித்து அதே மதுரைக்கு தேமுதிக என்கிற மிகப்பெரிய அரசியல் கட்சியைத் துவங்க வந்தார். தேர்தலில் வெற்றிபெற்று எதிர்கட்சி தலைவராகவும் உயர்ந்தார்.

மதுரையுடனான விஜயகாந்தின் பிணைப்பு அவரது சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகவே இருந்தது. விஜயகாந்தின் பூர்வீக வீட்டில் வசிக்கும் அவரது உறவினர்கள் மற்றும் மதுரையில் உள்ள நண்பர்கள் விஜயகாந்த் குறித்த நினைவுகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

மதுரை திருமங்கலம் பகுதியில், 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25இல் பிறந்த விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் மேலமாசி வீதியில் வசித்து வந்தார். அவரது தந்தை அழகர்சாமி, கீரைத்துறை பகுதியில் ரைஸ்மில் வைத்து நடத்தி வந்தார்.

காலையில் ரைஸ்மில்லில் பணி செய்த நடிகர் விஜயகாந்த், இரவு நேரங்களில் நண்பர்களுடன் பல்வேறு இடங்களுக்குச் சுற்றி வந்திருக்கிறார். பின்னர் நெருங்கிய நண்பர் ராவுத்தர் மற்றும் சில நண்பர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நட்சத்திரமாக மாறினார்.

மதுரை மேலமாசி வீதி அருகே சௌராஷ்ட்ரா சந்தில் விஜயகாந்தின் பூர்வீக வீடு உள்ளது. அங்குதான் 25 ஆண்டுகள் அவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அங்கு தற்போது அவரது சகோதரர்கள் பால்ராஜ், செல்வராஜ் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த நினைவுகளைப் பகிர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள்

படக்குறிப்பு, விஜயகாந்தின் தம்பி செல்வராஜ்

6 மாதத்திற்கு முன் ஏற்பட்ட பின்னடைவு

தனது அண்ணன் விஜயகாந்தின் மறைவு குறித்து அவரது தம்பி செல்வராஜ் கடந்த ஆண்டு பிபிசியிடம் பேசியபோது, “2023 ஜூன் மாதம் எனது மகள் திருமணத்தை முடித்துவிட்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்று ஆசீர்வாதம் பெற்று வந்தோம். எனது மருமகனைப் பார்த்து, “சூப்பர் மாப்பிள்ளை” என்று சொன்னார்.

சினிமாத்துறையில் அனைவருக்கும் உதவி செய்தவர் விஜயகாந்த், அதேபோல் தமிழ் சினிமா நடிகர் சங்கம் கடனில் தத்தளித்தபோது அதிலிருந்து மீட்டவர். அவரது வீட்டிற்கு சந்திக்கச் சென்றால் உணவு சாப்பிடாமல் அனுப்பமாட்டார். அரசியலில் இன்னமும் பெரிய அளவுக்கு வந்திருக்க வேண்டும். அவரது உடல் ஒத்துழைக்காததால் விஜயகாந்தை இழந்துவிட்டோம்”, என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய செல்வராஜின் மனைவி மீனாட்சி, “கடந்த சில ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி உடல்பயிற்சிகள் செய்ததில் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால் 6 மாதத்தில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. எங்களது பிள்ளைகள் அனைவரும் வளரும் வரை அவர் நல்ல உடல் நலனுடன் இருப்பார் என நினைத்தோம். இன்று காலையில் செய்தி வந்த போது கூட அதை நாங்கள் முதலில் நம்பவில்லை”, என கூறினார்.

மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த நினைவுகளைப் பகிர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள்

பட மூலாதாரம், RASI STUDIO

காலை ரைஸ்மில் வேலை, இரவு போட்டோ ஷூட்

“தனது தந்தையின் ரைஸ்மில்லில் காலை முழுவதும் வேலை செய்துவிட்டு, இரவு எனது போட்டோ ஸ்டுடியோவிற்கு போட்டோ எடுக்க வந்துவிடுவார்”, என்கிறார் மதுரை ராசி ஸ்டுடியோ உரிமையாளர் ஆசை தம்பி.

“எங்களது ராசி ஸ்டுடியோவில் 1976, 1977 காலகட்டத்தில் 41 நாட்களில் 32 புகைப்படங்களை விஜயகாந்த் எடுத்துக் கொண்டார். பல புத்தகங்களை பார்த்து ஆக்ஷன் புகைப்படங்களை எடுத்தேன். ரஜினிகாந்திற்கு போட்டியாக விஜயகாந்தை ஒரு ஆக்ஷன் நாயகனாக உருவாக்கினோம்”, என்று விஜயகாந்த் குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் ஆசை தம்பி.

தொடர்ந்து பேசிய அவர் “பகலில் ரைஸ் மில்லில் பணி செய்து விட்டு இரவு தான் ஸ்டுடியோவுக்கு வருவார். சினிமாவில் நடிக்க முன்பு புகைப்படத்தை வைத்து தான் வாய்ப்பு தருவார்கள். அதனால் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி ஓய்வு எடுக்கச் சொல்லி பின்பு இரவு துவங்கி அதிகாலை வரை புகைப்படம் எடுப்போம்”

“ஒரு புகைப்படம் எடுப்பதற்கு 2 மணி நேரம் ஆகும், அது சரியாக வராவிட்டால் மீண்டும் 2 மணி நேரம் லைட்டிங் எல்லாம் செட் செய்து எடுப்போம், அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

8 ஆயிரம் வார்ட்ஸ் பல்ப் பயன்படுத்தி புகைப்படம் எடுப்போம். அதிலிருந்து வெளியே வரும் வெப்பத்தை தாங்கிக் கொள்வார். விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் திரைத்துறையில் அவரை நாயகனாக மாற்றியே ஆகவேண்டும் என முனைப்புடன் இருந்தார்” என்றார்.

மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த நினைவுகளைப் பகிர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள்

பட மூலாதாரம், RASI STUDIO

படக்குறிப்பு, ராசி ஸ்டுடியோவில் உள்ள புகைப்பட நெகட்டிவ்

மக்களுக்கு ஓர் பேரிழப்பு

“விஜயகாந்த் இன்னமும் சிறிது காலம் இருந்து அரசியலில் சாதித்து மக்களுக்கு நன்மை செய்து இருக்கலாம், அது நடக்காமல் போனது ஓர் பேரிழப்புதான், மேலும் விஜயகாந்த் மிகவும் இரக்க குணம் கொண்டவர். அப்படிப்பட்டவருக்கு அரசியலில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். கிடைக்காமல் போனது மிகவும் துரதிஷ்டமானது தான்”, என்கிறார் மதுரை ராசி ஸ்டுடியோ உரிமையாளர் ஆசை தம்பி.

மதுரை வடக்கு மாசி வீதி பகுதியில் வசித்து வரும் விஜயகாந்தின் நண்பர் திருப்பதி, பிபிசி தமிழிடம் பேசும் போது, “எனது நண்பர் விஜயகாந்த், ராவுத்தர், சுந்தரராஜன் என 15 பேரும் இளமை காலங்களில் மதுரை முழுவதும் ஒன்றாகச் சுற்றுவோம், விஜயகாந்திற்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இல்லை.

அப்போது சேனாஸ் பிலிம்ஸ் மார்சுக் பாய் என்பவர் தான் இவர் பார்ப்பதற்கு ரஜினிகாந்த் போல இருப்பதாகக் கூறி திரைப்படத்தில் நடிக்க சென்னைக்கு அழைத்து சென்றார்”

“அதன் பின்னரே 1978 ஆம் ஆண்டு கடும் முயற்சிக்கு பின்னர் “இனிக்கும் இளமை”, என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்தார்” எனக் கூறினார்.

மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த நினைவுகளைப் பகிர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள்

கல்விக்கு உதவிய விஜயகாந்த்

மேலும் இது குறித்து பேசியவர், “தமிழ் திரையுலகத்திற்கு சென்று முன்னணி நடிகராக மாறிய பின்னரும் அனைவருக்கும் உதவும் குணத்தை விஜயகாந்த் தொடர்ந்தார்.

மதுரையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தேவைப்படுவதாக அவரிடம் கூறினால் போதும், உடனடியாக பணத்தை வழங்கி கல்வியை தொடர வழிகாட்டுவார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி மதுரையில் தேமுதிக என்கிற அரசியல் கட்சியைத் துவங்கினார். அதற்கு முன்பாக அரசியலில் ஈடுபடுவது குறித்து எங்களிடம் பகிர்ந்து கொண்டார். விஜயகாந்திற்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அதனை அரசியலுக்குப் பயன்படுத்தினார்.

கட்சித் தொடங்குவது குறித்து கலைஞர், ஜெயலலிதா, மூப்பனார் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் கூறி, அவர்களுடனான நட்பைத் தொடர்ந்தார்” என்கிறார் திருப்பதி.

மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த நினைவுகளைப் பகிர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள்

பட மூலாதாரம், RASI STUDIO

நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த்

“எங்களுடன் பழகிய காலங்களில் இருந்து தற்போது வரை எந்த மாற்றத்தையும் நான் அவரிடம் கண்டது இல்லை. எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வார், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடுகள் பார்க்கமாட்டார்.

சினிமா சூட்டிங் பார்க்கப் போனால் கூட உடனடியாக பார்த்து எங்களை அழைத்து நலம் விசாரிப்பார், வீட்டில் உள்ளவர்களின் நலன் விரும்பியாக இருந்தார். விஜயகாந்த் போனதால் இரண்டு கைகளையும் இழந்து நிற்பது போல நான் உணர்கிறேன்” எனக் கூறுகிறார் திருப்பதி.

மேலும், “கடந்த 2015 ஆம் ஆண்டு எனது நண்பர் ராவுத்தர் இறப்பிற்காக நான் சென்னை சென்ற போது விஜயகாந்தை நேரில் சந்தித்தேன். அப்போது விஜயகாந்தின் நிலையை பார்த்து தாங்க முடியாமல், எனக்கு இருதய நோய் ஏற்பட்டது.

இப்போது வரை அந்த பாதிப்பு உள்ளது, அதனால் இறப்பிற்காக சென்னை செல்ல வேண்டாம் என எனது குடும்பத்தினர் கூறிவிட்டனர்”, என விஜயகாந்தின் நண்பர் திருப்பதி மிகுந்த வேதனையுடன் கூறினார்.