நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

by wp_shnn

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய தீர்மானம் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை தேசிய மருத்துவத் துறையுடன் ஒன்றிணைத்து புதிய மாதிரியின் கீழ் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக அவ்வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் சிறப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்  மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

எதிர்காலத்தில் உள்நாட்டு சுகாதாரத் துறையை கேந்திரமாக் கொண்ட சுற்றுலாத் துறையை ஸ்தாபிப்பதே புதிய அரசாங்கத்தின் முதன்மையான இலக்காகும்.

அதற்கமைய நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை தேசிய மருத்துவத் துறையுடன் ஒன்றிணைத்து அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அமையப் பெற்றுள்ள பகுதியானது வெற்றிகரமான சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு பொருத்தமான இடமாக உள்ளது.

அவ்வாறானதொரு பின்னணியில் இவ்வைத்தியசாலை அபிவிருத்தி செய்வது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகிறேன். சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சால் இவ்வைத்தியசாலையின் ஊழியர்களின் ஊதியத்துக்காக மாதாந்தம் சுமார் 40 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

ஆகையால் எதிர்வரும் நாட்களிலும் இவ்வைத்தியசாலையை பாரம்பரிய அரச வைத்தியசாலையாக நடத்தும் எண்ணம் இல்லை.

சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் திறமை வாய்ந்த வைத்திய ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சி மற்றும் அவற்றின் தரத்தை கருத்தில் கொண்டு, நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை புதிய மாதிரியின் கீழ் மறுசீரமைக்க திட்டங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் ஏற்கனவே 800 படுக்கை வசதிகள் உள்ளதுடன் 440 படுக்கைகள் அன்றாட பாவனைக்கு பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் 1002 படுக்கைகளை கொண்ட வைத்தியசாலையாக இவ்வைத்தியசாலை மாற்றப்படும். நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி அவற்றுக்குரிய மறுசீரமைப்பு திட்டங்களை செயற்படுத்துவதுடன், மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை இந்நாட்டின் மிக பயனுள்ள வைத்தியசாலையாக துரிதமாக அபிவிருத்திச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்