தொழிற்சங்கங்களுக்கு இலவச அனுமதி சீட்டுகளை வழங்கியதால் CTB, ரயில்வேக்கு ரூ.07 கோடி நட்டம் !

by 9vbzz1

on Friday, December 27, 2024

நாடு முழுவதும் பயணிக்கக் கூடிய விதத்தில் 08 தொழிற்சங்கங்களுக்கு இலவச அனுமதி சீட்டுகளை வழங்கியதனூடாக, ரயில்வே திணைக்களத்துக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் 2023 ஆம் ஆண்டில் சுமார் 07கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஸ்தாபனக்கோவைக்கு முரணாக இந்த இலவச அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

08 தொழிற்சங்கங்களுக்கு 138 (Open Free Pass) இலவச அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், 2023ஆம் ஆண்டு மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சுமார் நான்கரை கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதனை தவிர ரயில்வே திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட 22 (Open Free Pass) இலவச ரயிவே பயண அனுமதிப்பத்திரங்களை தொழிற்சங்கங்களுக்கு வழங்கியதன் மூலம், 2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்துக்கு இரண்டரை கோடி ரூபாவுக்குமேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்தாபனக்கோவைக்கமைய, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் ஒன்றின் சார்பாக இரண்டு அதிகாரிகள் முழுநேர பணிக்காக விடுவிக்கப்படலாமென கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு விடுவிக்கப்படும் அதிகாரிக்கு இலவச ரயில் அனுமதிப்பத்திரம் மற்றும் இலவச பயணச்சீட்டுகள் வழங்கப்படவேண்டுமென்ற போதிலும், 08 தொழிற்சங்கங்கள் சார்பாக 2023ஆம் ஆண்டுக்காக நாட்டில் எங்கும் பயணிக்கக்கூடியவாறு மத்திய போக்குவரத்து சபையின் 138 (Open Free Pass பயண அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி 4,30,46,993 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 22 ரயில் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் அரசாங்கத்துக்கு 2,52,94,500 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை மீளப்பெறுவதற்கு அல்லது நட்டங்களை மீளப்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டுமென கணக்காய்வாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்