மேலதிக வகுப்பு மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு ; சந்தேக நபர் கைது ! on Friday, December 27, 2024
கண்டி பிரதேசத்தில் உள்ள மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை திருடியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கண்டி, தலதா வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் பஸ் தரிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள மேலதிக வகுப்பு மாணவர்கள் மற்றும் ஏனைய நபர்களின் கையடக்கத் தொலைபேசிகளை திருடி அதனை கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து பணத்தைப் பெறுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருடிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.