மன்மோகன் சிங்: மூத்த அமைச்சர்கள் மீது புகார் எழுந்தபோது என்ன செய்தார்? பகிரும் பழனிமாணிக்கம்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
“எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது என்ற அவநம்பிக்கை அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. எப்போதும் அணுகக் கூடியவராக அவர் இருந்தார்.”
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனான தனது அனுபவம் குறித்து திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பிபிசி தமிழிடம் இவ்வாறாகக் குறிப்பிட்டார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக முரண்பட்டபோதும், கூட்டணிக் கட்சிகளை மன்மோகன் சிங் அரவணைத்துச் சென்றதாகவும் பழனிமாணிக்கம் கூறுகிறார்.
பிரதமர் என்பதையும் தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கு உற்ற நண்பராக மன்மோகன் சிங் இருந்ததாகத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்த காலத்தில் அவரது அணுகுமுறை எப்படி இருந்தது? அதுகுறித்து திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சொல்வது என்ன?
கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது.
தமிழ்நாட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைத்தது. திமுக, 16 இடங்களில் வெற்றி பெற்றது. நாடு முழுவதும் 215 தொகுதிகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது.
இடதுசாரிக் கட்சிகளும் மதிமுகவும் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. தேர்தல் முடிவில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. புதிய அரசில் திமுகவுக்கு 3 கேபினட் அமைச்சர் பதவிகளும் நான்கு இணை அமைச்சர் பதவிகளும் கிடைத்தன.
திமுக சார்பாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி ஆகியோர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், பழனிமாணிக்கத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது.
எளிதில் அணுகக்கூடிய பிரதமர்
“மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் ஒன்பது ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்தேன். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்துவார். என்னுடைய பணிகள் பற்றிக் கேட்டு ஊக்கப்படுத்துவார்” என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் ஆறு மாதங்கள் தான் வேலை பார்த்ததாகக் கூறும் பழனிமாணிக்கம், “அனைவராலும் எளிதில் அணுகக் கூடியவராக மன்மோகன் சிங் இருந்தார்” என்கிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் உடன் தனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவம் ஒன்றையும் பிபிசி தமிழிடம் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் விவரித்தார்.
மூத்த அமைச்சர்கள் மீது புகார்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் மூத்த அமைச்சர்கள் பலரும், இணை அமைச்சர்களுக்குப் போதுமான வேலைகளை ஒதுக்காமல் தாங்களே வைத்துக் கொள்வதாகப் புகார் ஒன்று எழுந்துள்ளது.
“இதற்காக அனைத்து இணை அமைச்சர்களும் சேர்ந்து ஒரு கூட்டத்தைக் கூட்டினர். அந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டதாக” கூறுகிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
தொடர்ந்து பேசிய அவர், “அப்போது நிதித்துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தார். என்னைப் பேசுமாறு மன்மோகன் சிங் கூறினார். நான் பேசும்போது, ‘என்னுடைய துறையில் எல்லா உரிமைகளையும் பிரணாப் தருகிறார். போதுமான வேலைகளும் ஒதுக்கப்படுகிறது’ எனக் கூறினேன்.”
“எனக்கு புதிதாக வேலைகள் தேவைப்பட்டாலும் பிரணாப் முகர்ஜி ஒதுக்குவதாகவும் அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் பேசினேன்” என்ற பழனிமாணிக்கம் இதை முன்னுதாரணமாகக் காட்டி மன்மோகன் சிங் பேசியதாகத் தெரிவித்தார்
`அதிகார தோரணை கிடையாது’
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுக இணைந்தது. கூட்டணிக் கட்சிகளுக்கு இலாகாக்களை ஒதுக்குவது தொடர்பாக நடந்த சம்பவம் ஒன்றையும் பழனிமாணிக்கம் நினைவுகூர்ந்தார்.
“நிதித்துறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் யாரும் இணைப் பொறுப்பை வகித்ததில்லை. எனக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த பிறகு, மீண்டும் இதே துறையை திமுக தலைவர் கருணாநிதி கேட்டார்.
அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் உடனே வழங்கிய மன்மோகன் சிங், ‘அவர் நல்ல இளைஞர். அவரை ஊக்கப்படுத்துங்கள்’ எனப் பாராட்டினார். எனக்கு மீண்டும் அதே துறை கிடைக்கவும் மன்மோகன் சிங் காரணமாக இருந்தார்” என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
பிரதமராக நரசிம்மராவ் பதவி வகித்த காலத்தில் புதிய பொருளாதார கொள்கைகளை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்களிப்பை நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அளித்ததாகக் கூறுகிறார் பழனிமாணிக்கம்.
“அவரது அமைச்சரவையில் இருந்த காலகட்டத்திலும், நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் நான் இருந்த காலத்திலும் கமிட்டி கூட்டங்களில் எந்தவிதமான அதிகார தோரணையையும் அவர் வெளிக்காட்டியது இல்லை” என்று கூறினார்.
தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?
திமுக தலைவர் கருணாநிதியோடு நல்ல நட்புடன் மன்மோகன் சிங் இருந்ததாகக் கூறும் பழனிமாணிக்கம், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கென திமுக தலைவர் கொடுத்த திட்டங்களை மன்மோகன் சிங் நிறைவேற்றிக் கொடுத்தார்” என்றார்.
அதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பட்டியலிட்ட பழனிமாணிக்கம், “தமிழ்நாட்டில் கார் தொழிற்சாலைகளில் அந்நிய முதலீட்டைக் கொண்டு வரும் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை மிகுந்தவராக மன்மோகன் சிங் இருந்தார்” என்கிறார்.
இதையே தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் இருந்தார். தேசிய அளவிலான திட்டங்களிலும் கொள்கைகளிலும் தென்னக மக்களின் குரல்கள் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார்” என்கிறார்.
திமுக ஆட்சியில் இல்லாதபோதும்கூட சுனாமி பாதித்த பகுதிகளில் வீடுகளைக் கட்டுவதற்கும் கடற்கரையோர பகுதிகளில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் மன்மோகன் சிங் அரசு உதவி செய்ததாகக் கூறுகிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியாவில் வாட் வரி அமல்படுத்தப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக (2001-2006), வாட் வரிக்கான மாநில பகிர்வைக் கேட்காமல் இருந்ததாகக் கூறுகிறார் அவர்.
அந்தச் சூழ்நிலையில், ” தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் (2006) காலம் தவறியதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, வரிப் பகிர்வில் சிறப்பு சலுகையை வழங்குமாறு கருணாநிதி கேட்டார். அதை ஏற்று உடனே மன்மோகன் சிங் நிறைவேற்றிக் கொடுத்தார்” எனவும் அவர் கூறுகிறார்.
மேற்கு மண்டலத்துக்கு கிடைத்த உதவி
அடுத்ததாக, 2006 சட்டமன்றத் தேர்தலின்போது நடந்த சம்பவம் ஒன்றை பழனிமாணிக்கம் குறிப்பிட்டார்.
கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்த கருணாநிதி, கைத்தறி நெசவாளர்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
அவர்களின் தொழிலுக்குப் பெரும் தடையாக சென்வாட் (cenvat) வரி இருந்தது. அதை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி உறுதி கொடுத்திருந்தார். அதன்படி ஆட்சிப் பொறுப்பேற்றதும், மன்மோகன் சிங்கின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றார்.
“சென்வாட் வரியை நீக்கி கைத்தறி துணி ஏற்றுமதியாளர்களுக்கு மிகப் பெரிய சலுகையை கருணாநிதி பெற்றுத் தந்தார். அதேபோல், தமிழ்நாட்டுக்கான நெடுஞ்சாலைத் திட்டங்களில் பலவும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கிடைத்தது” என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
“பொருளாதார நிபுணராகவும் சிறந்த பிரதமராகவும் இருந்தது மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதிலும் தனது சகாக்களை மதிப்பதிலும் சிறந்தவராக மன்மோகன் சிங் இருந்தார்” என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
திமுகவின் நெருக்கடிக் காலத்தில் மன்மோகன் சிங் செய்தது என்ன?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாம் பகுதியில் இறுதிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக முரண்பட்டது. இதையடுத்து, ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் திமுக திரும்பப் பெற்றது.
இதன் பின்னணியில் 2ஜி விவகாரம் பேசப்பட்டது. அப்போது திமுகவுக்கு பவ்லேறு வகைகளில் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடிகளின்போது மன்மோகன் சிங்கின் செயல்பாடு குறித்து பழனிமாணிக்கத்திடம் பிபிசி தமிழ் கேட்டது.
“ஆட்சியின் இரண்டாம் பகுதியில் நெருக்கடிகள் ஏற்படும்போது, ஏ.கே.ஆண்டனி, குலாம் நபி ஆசாத் போன்றோர் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படக்கூடிய நெருடல்களை தீர்ப்பதில் அக்கறையுடன் இருந்தனர்.
ஆனால், மன்மோகன் சிங்கை பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளிடம் எந்தவகையிலும் வருத்தத்தையோ கோபத்தையோ காட்டியதில்லை” என்கிறார்.
அதற்கேற்ப, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 2017ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.
இதுதொடர்பாக அதே ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மன்மோகன் சிங்குக்கு ஆ.ராசா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ‘என்னை வெளிப்படையாக ஆதரிக்க முடியாமல் உங்களைத் தடுத்த நிர்பந்தங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதில் அளித்து 2018ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி கடிதம் ஒன்றை ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் எழுதியிருந்தார். அதில், ‘நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டீர்கள். இறுதியில் உண்மை நின்றது என்பதில் உங்கள் நண்பர்களுக்குப் பெரிய நிம்மதி’ எனக் கூறியிருந்தார்.
கூட்டணிக் கட்சிகள் இடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து ஆட்சியைத் தொடர வைப்பதில் மன்மோகன் சிங் தீவிர கவனம் செலுத்தியதாகக் கூறும் பழனிமாணிக்கம், “எந்தப் பிரச்னையிலும் ‘தீர்க்க முடியாதது’ என்ற அவநம்பிக்கையை அவரிடம் ஒருபோதும் பார்த்ததில்லை” என்கிறார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு