புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளபோதும் அதற்காக இறக்குமதியை மேற்கொள்ளப்போகவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக அவர் தெரிவித்துள்ளதாவது,
கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடம்பர வாகனங்களை தற்போது ஏலம் விடும் பணியில் ஆளும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
பத்தாவது பாராளுமன்றத்தில் பணியாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இருப்பினும், அவர்களுக்கு எப்போது வாகனங்களை வழங்குவது என்பது குறித்து நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. எவ்வாறாயினும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை.
அவர்களுக்கு வாகனங்கள் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனைகளை மேற்கொள்ளவுள்ளது. அதன் அடிப்படையில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.