பானை கழுவச்சென்ற பெண் முதலையின் தாக்குதலுக்கு பலி ! களுத்துறை தொடங்கொட பகுதியில் முதலையால் தாக்கப்பட்டு களு கங்கையில் இழுத்துச் செல்லப்பட்ட 50 வயதுடைய பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹொலன பிரதேசத்தில் களு கங்கையில் வியாழக்கிழமை (26) பானை கழுவச் சென்ற பெண்ணொருவர் எதிர்பாராத விதமாக அங்கிருந்த முதலையால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காணாமல்போன பெண்ணை மீட்பதற்காக படகுகள் மூலம் பிரதேச மக்கள் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சற்று தொலைவில் முதலை இழுத்துச் சென்ற பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடங்கொட கொஹொலான வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக விசாரணையின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.