இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நான் விலகவில்லை. அதன் பிரகாரம் கட்சியின் தலைமைப் பதவியில் நானே தலைவராகத் தொடர்கின்றேன். ஆகவே தலைமைப் பதவி தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்தவேண்டிய அவசியமில்லை என்று மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (28) வவுனியாவில் நடைபெறவுள்ளதோடு அந்தக் கூட்டத்தில் தலைமைப் பதவியில் மாவை.சோ.சேனாதிராஜா நீடிக்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ள எழுத்து மூலமான கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சில ஆண்டுகளுக்கு முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பதில் பொதுச்செயலாளராகச் செயற்படுவதற்கு உங்களை (ப.சத்தியலிங்கம்) நானே முன்மொழிந்திருந்தேன்.
அதற்கு அமைவாக, தாங்கள் பதில் பொதுச்செயலாளராக எனது அறிவுறுத்தல்களுக்கு அமைவாகச் செயற்பட்டு வருவதோடு தேர்தல் பதிவேடுகளிலும் அவ்றே காணப்படுகின்றது.
அத்துடன், கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் யாருடைய தலைமையில் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடவில்லை. அதனடிப்படையில் அக்கூட்டம் செல்லுபடியற்றதாகும்.
அதேநேரம், எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கான அறிவிப்பினை விடுவதற்கு முன்னதாக குறித்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை எனக்கு அனுப்பி வைக்குமாறும் எனது அனுமதியின் பின்னரே உறுப்பினர்களுக்கான அறிவிப்பைச் செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், ஒக்டோபர் 7ஆம் திகதி என்னால் சிறிதரன் மற்றும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமானது பதவி விலகும் அறிவிப்பை உள்ளடக்கியது அல்ல. நான் கட்சியின் தலைமைப்பொறுப்பினை சிவஞானம் சிறிதரனை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறே கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.
குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு மாதங்களாகின்றபோதும் சிறிதரன் தலைமைப்பதவியை பொறுப்பேற்காமையின் காரணமாக நானே தலைமைப்பதவியில் நீடிக்கின்றேன்.
அவ்வாறான நிலையில் கட்சியின் தலைமைப்பதவி சம்பந்தமாக வாக்கெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது தேவையற்ற விடயமாகும். தற்போதும் நானே தலைமைப்பதவியில் நீடித்துக்கொண்டிருக்கின்றேன்.
மேலும், கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற முறையற்ற கூட்டத்தில் பங்கேற்றிருந்த நான் உறுப்பினர்களால் வெளியிடப்பட்ட சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்களை அளித்துள்ளேன்.
அந்த வகையில், 28ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பை நடத்த முடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.