சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம்
- எழுதியவர், ரெபேக்கா மோரெல், டிம் டாட், ஆலிசன் ஃபிரான்சிஸ்
- பதவி, அறிவியல் நிருபர்கள்
நாசா விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று, வெப்பத்தை தாக்குப்பிடித்து ஒரு புதிய வரலாறு படைத்துள்ளது.
வியாழக்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்பு (இந்திய நேரப்படி இன்று காலை 10:30 மணியளவில்) விஞ்ஞானிகளுக்கு பார்க்கர் விண்கலத்தில் இருந்து (Parker Solar Probe) சிக்னல் கிடைத்தது.
முன்னதாக ஆளில்லா பார்க்கர் விண்கலம் சூரியனின் அதீத வெப்பம் மற்றும் தீவிர கதிர்வீச்சைத் தாங்கிக்கொண்டு, அதன் வெளிப்புற வளிமண்டலத்தில் நுழைந்தது. இதையடுத்து பல நாட்கள் அதனிடம் இருந்து தொடர்பு இல்லாத சூழல் நிலவியது.
தற்போது, சூரிய மேற்பரப்பில் இருந்து 61 லட்சம் கி.மீ தொலைவைக் கடந்து சென்றதைத் தொடர்ந்து விண்கலம் “பாதுகாப்பாக உள்ளது” என்றும் சாதாரணமாக இயங்குவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் விண்கலம் நுழைந்தது.
சூரியனின் செயல்பாடுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன் பார்க்கர் விண்கலம் முன்னெடுத்திருக்கும் இந்தத் தேடலில், அதீத வெப்பநிலை மற்றும் தீவிர கதிர்வீச்சை அது தாங்கிக் கொண்டுள்ளது.
அதீத வெப்பநிலையை தாங்கிய விண்கலம்
முன்னதாக, இந்திய நேரப்படி டிசம்பர் 28ஆம் தேதியன்று காலை 10.30 மணியளவில், இந்த விண்கலத்தில் இருந்து சிக்னல் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
நாசா இணையதளத்தின்படி, 692,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கலம் 1,800F (980C) வரையிலான வெப்பநிலையைத் தாங்கியுள்ளது.
“சூரியனுக்கு மிக அருகில் நடத்தப்படும் இந்த ஆய்வில், பார்க்கர் விண்கலம் பல்வேறு அளவீடுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவீடுகள், சூரியனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள வான்பொருட்கள் கொடிக்கணக்கான டிகிரி வரை வெப்பமடைவது எப்படி என்பதை விஞ்ஞானிகள் நன்கு புரிந்துகொள்ள உதவும்.
மேலும் சூரியக் காற்றின் (சூரியனில் இருந்து தொடர்ச்சியாக வெளிப்படும் துகள்கள்) தோற்றத்தைக் கண்டறிய இது உதவும். அதோடு, அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் துகள்கள் ஒளி வேகத்திற்குக் கிட்டத்தட்ட ஈடான வேகத்தை எவ்வாறு பெறுகின்றன என்பதைக் கண்டறியவும் உதவும்” என்று நாசா கூறுகிறது.
நாசாவின் அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் நிக்கோலா ஃபாக்ஸ் முன்னதாக பிபிசியிடம் பேசுகையில், “பல நூற்றாண்டுகளாக மக்கள் சூரியனைப் பற்றிய ஆய்வுகளைச் செய்துள்ளனர். ஆனால் நேரடியாகச் (பார்க்கர் விண்கலத்தின் பயணத் திட்டம்) சென்று அதை ஆய்வு செய்யாத வரை, அதன் வளிமண்டலத்தைப் பற்றி நம்மால் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது” என்றார்.
ஆகவே அவரது கூற்றுப்படி, அதன் ஊடாகப் பயணம் செய்தால் மட்டுமே, சூரியனின் வளிமண்டலத்தை உண்மையில் உணர முடியும்.
பார்க்கர் விண்கலத்தின் சிறப்பம்சங்கள்
பார்க்கர் விண்கலம் 2018ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டது. இது நமது சூரிய மண்டலத்தின் மையத்தை நோக்கிப் பயணிக்கிறது.
இது ஏற்கெனவே சூரியனை 21 முறை நெருங்கிச் சென்றுள்ளது. ஒவ்வொரு முறையும் சூரியனுடனான அதன் தூரம் குறைந்து வந்தது. ஆனால் இந்த முறை மிக நெருக்கமாகச் சென்று புதிய சாதனை படைத்துள்ளது.
“நாம் (பூமி) சூரியனில் இருந்து 93 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கிறோம். உதாரணத்திற்கு சூரியனுக்கும் பூமிக்குமான தொலைவு ஒரு மீட்டர் என்று வைத்தால், பார்க்கர் விண்கலம் சூரியனில் இருந்து நான்கு சென்டிமீட்டர் தொலைவில் உள்ளது என்று கூறலாம். எனவே அது மிகவும் நெருக்கமாகத்தான் உள்ளது” என்கிறார் நாசாவின் அறிவியல் துறைத் தலைவர் ஃபாக்ஸ்.
இந்த விண்கலம் 1,400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், அதன் மின்னணு சாதனங்களைத் தாக்கும் கதிர்வீச்சையும் தாங்க வேண்டியிருக்கும்.
அது 11.5 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் கொண்ட கார்பன் – ஃபைபர் கவசத்தால் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் வேகமாக உள்ளே சென்று பின்னர் மீண்டும் வேகமாக வெளியேறுவதுதான் பார்க்கர் விண்கலத்தின் உத்தி.
பார்க்கர் விண்கலம், மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தவொரு பொருளையும்விட வேகமாக, அதாவது மணிக்கு 4,30,000 மைல் வேகத்தில் நகர்ந்துள்ளது. இந்த வேகத்தில் பறந்தால், லண்டனில் இருந்து நியூயார்க் செல்ல 30 விநாடிகளுக்கும் குறைவாகவே தேவைப்படும். (இந்த வேகத்தில் சென்றால் டெல்லியில் இருந்து நியூயார்க் நகருக்கு ஒரு நிமிடத்தில் சென்றுவிடலாம்.)
பார்க்கர் விண்கலத்தின் இந்த வேகம், அது சூரியனை நோக்கிச் செல்லும்போது உணரக்கூடிய அபரிமிதமான ஈர்ப்பு விசையில் இருந்து கிடைக்கிறது.
சூரியனை நெருங்க இவ்வளவு கடுமையான முயற்சியை ஏன் எடுக்க வேண்டும்?
ஆனால், சூரியனைத் ‘தொட’ இவ்வளவு கடுமையான முயற்சியை ஏன் எடுக்க வேண்டும்?
இந்த விண்கலம், கொரோனா எனப்படும் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தைக் கடந்து செல்வதன் மூலம், நீண்டகாலமாக நிலவும் ஒரு மர்மம் தீர்க்கப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
“கொரோனாவில் அதீத வெப்பம் நிலவுகிறது. ஆனால் அதற்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை” என்கிறார் வேல்ஸில் உள்ள ஃபிஃப்த் ஸ்டார் ஆய்வகங்களின் வானியலாளர் முனைவர் ஜெனிபர் மில்லார்ட்.
“சூரியனின் மேற்பரப்பு சுமார் 6,000 டிகிரி செல்சியஸ் அல்லது அதைவிட அதிகமான வெப்பநிலையைக் கொண்டது. ஆனால் சூரிய கிரகணங்களின்போது, நாம் காணக்கூடிய இந்த கொரோனா எனும் மெல்லிய வெளிப்புற வளிமண்டலம், லட்சக்கணக்கான டிகிரி வெப்பநிலையை அடைகிறது.”
“அத்தனைக்கும் அது சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெகு தொலைவில்தான் உள்ளது. அப்படியானால் அந்த வளிமண்டலம் இந்த அளவுக்குச் சூடாவது ஏன் என்பதுதான் கேள்வி” என்கிறார் மில்லார்ட்.
சூரிய காற்று என்றால் என்ன?
சூரிய காற்றைப் (Solar Wind) பற்றி நன்கு புரிந்துகொள்ளவும் விஞ்ஞானிகளுக்கு இந்த ஆய்வு உதவும். சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து வெடித்து வெளியேறும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களே சூரிய காற்று எனப்படுகின்றன.
இந்தத் துகள்கள் பூமியின் காந்தப்புலத்துடன் தொடர்பு கொள்ளும்போது, வானில் அழகான துருவ ஒளிகள் தோன்றும்.
ஆனால் இந்த விண்வெளி நிகழ்வு, மின் கட்டமைப்புகள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி, பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
“சூரியன், அதன் செயல்பாடுகள், விண்வெளியின் பருவநிலை, சூரியக் காற்று ஆகியவை குறித்து நன்றாகப் புரிந்துகொள்வது, பூமியில் நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்” என்று டாக்டர் மில்லார்ட் கூறுகிறார்.
`மிகவும் வலிமையான விண்கலம்’
பார்க்கர் விண்கலம் பூமியுடன் தொடர்பற்றுப் போனபோது நாசா விஞ்ஞானிகள் அதன் சிக்னலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
“பார்க்கர், பூமிக்கு சிக்னல் அனுப்பியவுடன், விண்கலம் சரியாகத்தான் செயல்படுகிறது என்பதைத் தெரியப்படுத்த விஞ்ஞானிகள் குழு ‘ஒரு பச்சை நிற இதயக் குறியீடை’ குறுஞ்செய்தியாக அனுப்புவார்கள்” என்று நிக்கோலா ஃபாக்ஸ் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
இந்தத் துணிச்சலான முயற்சியைப் பற்றி நினைத்து அவர் பதற்றம் கொண்டிருந்தாலும், விண்கலத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் ஃபாக்ஸ் குறிப்பிட்டார்.
“நான் விண்கலத்தை நினைத்து சற்றுக் கவலைப்படுகிறேன். ஆனால் மிக மோசமான நிலைமைகள் அனைத்தையும் தாங்கும் வகையில்தான் நாங்கள் அதை வடிவமைத்துள்ளோம். அதுவொரு சிறிய, ஆனால் மிகவும் வலிமையான விண்கலம்” என்று நம்பிக்கையுடன் இருந்ததாகக் கூறுகிறார் நிக்கோலா.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு