கொலையில் முடிந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு

by smngrx01

கொலையில் முடிந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி கிராமத்தில் உள்ள இறால் பண்ணையில் வேலை செய்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (26) கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இறால் பண்ணையில் வேலை செய்து வந்த உயிரிழந்த நபர், மதுபோதையில் காணப்பட்டுள்ளதுடன், அவருக்கும், அங்கு தொழில் புரிந்துவந்த மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, ஆத்திரமடைந்த நபர், மதுபோதையில் இருந்த குடும்பஸ்தரை அங்கு இருந்த மண்வெட்டி ஒன்றினால் பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளதுடன், பல இடங்களில் வெட்டியும் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த நபர் யட்டியாந்தோட்டையைச் சேர்ந்த 37 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையான ராஜேந்திரன் ராஜசேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறினர்.

அத்த்துடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் பதில் நீதிவான் வஸீம் ராஜா, சம்பவ இடத்தில் நீதவான் விசாரணையை நடத்தியதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், இந்த கொலை சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாரும் , புத்தளம் பொலிஸ் தடவியல் பிரிவினரும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்