கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு வேட்புமனுத் தாக்கலில் முன்னுரிமை கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு வேட்புமனுத்தாக்களின் போது முன்னுரிமை வழங்கப்படும். கட்சிக்கு துரோகமிழைத்தவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள கூடாது என்பதை பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.சி சானக தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக கட்சியை விட்டுச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள கூடாது என்று பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுத்தாக்கல் கோரப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு வேட்புமனுத்தாக்களின் போது முன்னுரிமை வழங்கப்படும். வெற்றியோ தோல்வியோ தனித்தே போட்டியிட தீர்மானித்துள்ளோம். சந்தர்ப்பவாத தரப்பினருடன் கூட்டணியமைக்க போவதில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 75 ஆண்டுகால அரசியலை விமர்சித்தே ஆட்சிக்கு வந்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை கடுமையாக சாடினார்கள். ஆனால் தற்போது கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் 99 சதவீதத்தை கடந்த அரசாங்கம் முழுமைப்படுத்திவிட்டது. மிகுதி 1 சதவீதத்துக்கான பணிகளையே தொடர வேண்டும் என்று தொழில் அமைச்சர் குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் மேடைகளில் இவர்கள் இவற்றை குறிப்பிடவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போது ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை தொடர வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி போலியான வாக்குறுதிகளை வழங்கி நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளது. அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளிப்பட ஆரம்பித்துள்ளது. வெகுவிரைவில் நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக்கொள்வார்கள். அரிசி தட்டுப்பாடு விவகாரத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை முன்வைக்கவில்லை. மாறாக அரிசி உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு அமைய அரிசியின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.