உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே போட்டியிடுவோம் – நிஹால் அபேசிங்க

by guasw2

உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே போட்டியிடுவோம் – நிஹால் அபேசிங்க உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்ற நிலையில் அதனை தேசிய மக்கள் சக்தி எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அணியில் உள்ள பங்காளிகளுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தியாகவே உள்ளுராட்சி மன்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவோம்.

பாரம்பரிய அரசியல் முறைக்கு மாற்றாக இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியாகவே தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது.

2024 ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற பிறகு தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் கட்சி தொடர்ந்தும் முன்னோக்கிப் பயணிக்கிறது.

அத்துடன், பொதுமக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் ஏனைய தேர்தல்களிலும் நாம் தேசிய மக்கள் சக்தியாகவே களமிறங்குவதற்குத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

உள்ளுராட்சித் தேர்தல் கடந்த மார்ச் 2023இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், அப்போதைய அரசாங்கம் தேர்தல் ஆணையத்துக்குத் தேவையான நிதியை வழங்கத் தவறிவிட்டது. இதன் விளைவாக, தேர்தல்கள் ஏப்ரலில் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இருப்பினும், வெளியிடப்படாததன் காரணத்தினால் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, 2015முதல் 2020 வரையில் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் விளைவாக ஏற்பட்ட சட்டப் பிரச்சினை காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் ஐந்து வருடங்களைக் கடந்தும் நடத்தப்பட முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்