இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவியில் மாவை.சோ.சேனாதிராஜா தொடர்வதில் கட்சிக்குள் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரை மட்டுமல்ல கட்சியின் எந்தவொரு மத்தியகுழு உறுப்பினரையும் பொதுச்சபையின் அனுமதியின்றி நீக்கமுடியாது என்று அக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் ஊடகப்பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து பதவி விலகுவதாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பைச் செய்தபின்னர் எந்தவொரு அனுமதியையும் யாரிடமும் பெற வேண்டுமென்று யாப்பில் கூறப்பவில்லை என்று தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஞானமுத்து சிறிநேசன் எம்.பி தெரிவிக்கையில்,
மாவை.சோ.சேனாதிராஜா மட்டுமல்ல கட்சியின் எந்தவொரு மத்திய குழு உறுப்பினரையும் பதவி நீக்குவதற்கு பொதுச்சபையின் அனுமதி அவசியமாகும்.
ஆகவே பொதுச்சபையின் அனுமதியின்றி மாவை.சோ.சேனாதிராஜாவை கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீக்கிவிட முடியாது.
முன்பு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த கி.துரைரெட்ணசிங்கம் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை தன்னிச்சையாக வழங்கினார் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்து அவரை பதவி விலக்க வேண்டும் என்று கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில் குறிப்பிட்டபோது, அவரைப் பதவி நீக்கம் செய்வதாக இருந்தால் கட்சியின் பொதுச்சபையின் அனுமதி தேவையென்றும் அவ்வாறு அனுமதியின்றி பதவி நீக்கினால் நீதிமன்றத்தினை நாட வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
ஆகவே, துரைரெட்ணசிங்கம் விடயத்தின் பொதுச்சபையின் அனுமதி தேவiயாக இருக்கின்றபோது மாவை.சோ.சேனாதிராஜாவின் விடயத்தில் அவ்விதமான அனுமதி தேவையில்லை என்று கூறுவது எவ்வாறு நியாயமாகும். ஆகவே மாவை.சேனாதிராஜாவை பதவி நீக்கம் செய்ய முடியாது. அவர் தலைமைப் பதவியில் நீடிப்பார் என்றார்.
இதேவேளை, எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், மாவை.சோ.சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளருக்கு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியே எழுத்துமூலமாக அறிவித்துவிட்டார். அக்காலம் தேர்தலுக்குரியதாக இருந்தமையால் கட்சியால் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்க முடியவில்லை.
தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் எழுத்துமூலமாக மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் அவர் ஏற்கனவே அறிவித்த பதவி விலகல் நிலைப்பாட்டிலா உள்ளார் என்ற கேள்வியை எழுப்பி எழுத்துமூலமாக கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
ஆனால் அதற்குரிய பதவிலை கட்சியின் தலைவர் அனுப்பி வைக்கவில்லை. ஆகவே அவர் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீங்கும் தீர்மானத்தில் உறுதியாக இருக்கின்றார் என்று தான் கருதும் நிலைமை ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீங்குவதாக தானாகவே அவர் அறிவித்த பின்னர் அப்பதவி வெற்றிடமாகிறது. இந்த விடயத்தில் மத்தியசெயற்குழு யாரையும் பதவி நீக்கம் செய்யவில்லை. உறுப்புரிமையை இழக்கவும் செய்யவில்லை.
அறிவித்த முடிவொன்றையே அமுலாக்குவதற்கு முனைகின்றது. எனவே இந்த விடயத்தில் பொதுச்சபையின் அனுமதி அவசியமற்றது. உண்மையில் மத்திய குழுவின் தெளிவான நிலைப்பாட்டிற்காகவே வாக்கெடுப்புக் கூட அவசியமாகின்றது.
கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து நீங்குவதாக அறிவித்து ஒன்றரை மாதம் நிறைவடைந்திருக்கின்றது என்பதும் இங்கே முக்கியமான விடயமாகின்றது என்றார்.