அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டம்

by smngrx01

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் தனது இல்லத்தின் முன்பு, தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவர், இரு தினங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கைதான ஞானசேகரன் என்பவர், தி.மு.க.வை சார்ந்தவர் என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியது. எனினும், இந்த குற்றச்சாட்டை திமுக மறுத்துள்ளது.

இந்த சூழலில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியும், இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்து சில போராட்டங்களை டிசம்பர் 26ம் திகதி அறிவித்தார்.

அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தன்னை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை (27) நடத்துவதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

அதன் பிரகாரம் கோயம்புத்தூரில் உள்ள அவரின் வீட்டுக்கு முன்னே நின்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். சட்டை இல்லாமல் தன்னைத்தானே சிலமுறை சாட்டையால் அடித்துக்கொண்டார். அங்கே உள்ள பாஜக தொண்டர்கள் திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதன்பின், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “நாங்கள் எடுத்துக்கொண்ட போராட்டம் வருங்காலத்தில் மிகவும் தீவிரமாகும்.

ஒரு தனி மனிதனை சார்ந்தோ, ஒரு தனிமனிதன் ஆட்சியாளர்கள் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் போராட்டமோ இது கிடையாது.

அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். கல்வியின் தரம் சரியத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் பின்தங்க ஆரம்பித்துள்ளது.

ஒரு போராக இருந்தாலும் பெண்ணை துன்புறுத்தக் கூடாது என்பது நம்முடைய மரபு. ஆனால், இன்று தமிழ்நாட்டில் பெண்களின் மீது தொடுக்கப்படும் குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தவவேள்வியாக இன்று இந்த போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம்,” என்றும் கூறியுள்ளார்.

மேலும், 48 நாட்கள் விரதம் இருக்க உள்ளதாகவும் அரசியல் செயல்களில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்