அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம்: இந்த முடிவை எடுத்தது ஏன்? விமர்சனங்கள் பற்றி என்ன கூறினார்?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் தனது இல்லத்தின் முன்பு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவர், இரு தினங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஞானசேகரன் என்பவர், திமுகவை சார்ந்தவர் என்று பாஜக குற்றம்சாட்டியது. எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது திமுக.
இந்த சூழலில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியும், இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்து சில போராட்டங்களை டிசம்பர் 26ம் தேதி அறிவித்தார்.
அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தன்னை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை நடத்துவதாகக் கூறியிருந்தார் அண்ணாமலை.
அதன்படி, காலை 10 மணியளவில் கோயம்புத்தூரில் உள்ள அவரின் வீட்டுக்கு முன்னே நின்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். சட்டை இல்லாமல் தன்னைத்தானே சிலமுறை சாட்டையால் அடித்துக்கொண்டார். அங்கே உள்ள பாஜக தொண்டர்கள் திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
அண்ணாமலை கூறியது என்ன?
இதன்பின், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “நாங்கள் எடுத்துக்கொண்ட போராட்டம் வருங்காலத்தில் மிகவும் தீவிரமாகும்.
ஒரு தனி மனிதனை சார்ந்தோ, ஒரு தனிமனிதன் ஆட்சியாளர்கள் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் போராட்டமோ இது கிடையாது.
அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். கல்வியின் தரம் சரியத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் பின்தங்க ஆரம்பித்துள்ளது
ஒரு போராக இருந்தாலும் பெண்ணை துன்புறுத்தக் கூடாது என்பது நம்முடைய மரபு. ஆனால், இன்று தமிழ்நாட்டில் பெண்களின் மீது தொடுக்கப்படும் குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தவவேள்வியாக இன்று இந்த போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம்,” என்றும் கூறியுள்ளார்.
மேலும், 48 நாட்கள் விரதம் இருக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“மூன்று ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தை எவ்வளவு பின்னால் கொண்டு போய் இருக்கின்றார்கள் என்பதையும் தொடர்ந்து பேசுவோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த முடிவை எடுத்தது ஏன்?
மேற்கொண்டு பேசிய அவர், காவல்துறையில் பணியாற்றிய போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் பணியாற்றிய அவர் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளார். அப்போது இறந்த பெண்ணின் தாய் அண்ணாமலையிடம், “குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டீர்கள். என் பெண்ணை திருப்பிக் கொடுங்கள்” என்று கேள்வி கேட்டதாக கூறிய அண்ணாமலை அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார்.
இன்றும் அப்படியான ஒரு சம்பவம் நடக்கிறது. சாதாரண அரசியல்வாதி போன்று அதை பேசிவிட்டு கடந்து செல்ல இயலவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதனால் நன்றாக யோசித்து தான் இத்தகைய முடிவை எடுத்தேன் என்றும் கூறினார் அண்ணாமலை.
“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணிகளை அணியப்போவதில்லை. இது ஒரு தவமாக தமிழக மக்களுக்காக செய்கின்றோம்” என்றும் அண்ணாமலை கூறினார்.
திமுகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்
எனக்கு நானே கொடுத்துக் கொண்ட சாட்டை அடி என்று சொல்வதைக் காட்டிலும் சமுதாயத்தில் ஏற்படும் அவலங்களுக்கான சாட்டை அடி இது என்று தான் கூற வேண்டும் என்று கூறினார்.
“இந்த ஆட்சி முடிய வேண்டும். அவர்கள் (திமுக) நிறைய தவறு செய்கின்றனர். தமிழ் மண்ணின் மரபு இது என்பதால் நான் சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் இறங்கியுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
திருமாவளவனின் விமர்சனத்துக்கு பதில்
இந்த போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியான போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதனை நகைப்புக்குரிய செயல் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “நகைச்சுவையாக பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கட்டும். சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்.
லண்டன் சென்று திரும்பிய பிறகு அண்ணாமலைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பல கட்சியினரும் விமர்சனம் செய்கிறார்கள் என்ற கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய போது, “லண்டன் பயணத்திற்கு பிறகு என்னுடைய பாதை இன்னும் தெளிவாகியுள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பதற்கான உறுதித் தன்மை அதிகரித்துள்ளது. அங்கே படித்துவிட்டு திரும்பிய பிறகு, அரசியலை தூரமாக நின்று பார்க்கும்போது நிறைய புரிதல் உள்ளதாக நினைக்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய திருமாவளவன், விரதம் இருப்பது, காலணிகளை அணியாமல் இருப்பது, சாட்டையால் அடித்துக் கொள்வது போன்ற போராட்டங்கள் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளன. அவரின் போராட்டங்கள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக் கூடாது என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.