- எழுதியவர், அலெக்ஸ் ஸ்மித்
- பதவி, பிபிசி செய்திகள்
-
ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானைக் குட்டியின் (மாமத யானை) உடலை கைப்பற்றியுள்ளனர். சைபீரியாவின் யகுசியா பிராந்தியத்தில், பனி அடுக்குகளுக்கு நடுவே அந்த யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட யானையின் உடலாக இது அறியப்படுகிறது. இந்த உடல் கண்டெடுக்கப்பட்ட யானா நதியின் படுகையை கருத்தில் கொண்டு, இந்த யானைக்கு ‘யானா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
100 கிலோ கிராம் எடை கொண்ட இந்த யானையின் உயரம் 120 செ.மீ-ஆகவும், நீளம் 200 செ.மீ-ஆகவும் உள்ளது. யானா இறந்தபோது அதற்கு ஒரு வயது இருந்திருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு, இதேபோன்று 6 உடல்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து ரஷ்யாவிலும், ஒன்று கனடாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பதகைக்கா குழியில் இருந்து யானாவின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வாழும் மக்கள் யானா அங்கே இருப்பதை கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.
பதைக்கா, உலகின் மிகப்பெரிய ‘பெர்மாஃப்ரோஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது. நிரந்தரமாக உறைந்த அடிதளத்தைக் கொண்ட நிலபரப்பே பெர்மாஃப்ரோஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
லஸரேவ் மம்மூத் அருங்காட்சியக ஆய்வகத்தின் தலைவர், “மக்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் அதை கண்டறிந்துள்ளனர்,” என்று கூறினார்.
“யானா முழுமையாக பனியில் இருந்து வெளிப்பட்ட பிறகு மக்கள் அதை பார்த்துள்ளனர். பிறகு அந்த குழியில் இருந்து பத்திரமாக அதை மீட்டு தரைக்குக் கொண்டுவந்துள்ளனர்,” என்று கூறுகிறார் மாக்ஸம் செர்பசோவ்.
“பனியில் இருந்து முதலில் வெளிப்படும் பாகம், குறிப்பாக தும்பிக்கை போன்ற பகுதிகளை பறவைகள் அல்லது இதர விலங்குகள் உண்டுவிடும்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடலின் சில பகுதிகள் குறிப்பாக முட்டிப் பகுதிகள் (forelimbs) மற்ற விலங்குகளால் உண்ணப்பட்டிருந்தாலும், தலை மிகவும் பாதுகாப்பாக, எந்த சேதாரமும் இன்றி உள்ளது என்று கூறுகிறார்.
அந்த அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் கவ்ரில் நோவ்கோரோதோவ் ராய்ட்டர்ஸிடம், “அது அங்கே இருக்கும் ஈர நிலத்தில் சிக்கியிருக்கலாம். அதனால் தான் பல ஆயிரம் ஆண்டுகளாக எந்த சேதமும் இன்றி அந்த யானையின் உடல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது,” தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த பிராந்தியத்தின் தலைநகரான வடகிழக்கு ஃபெடரல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்கு வைக்கப்பட்டுள்ளது யானா. தற்போது ஆராய்ச்சியாளர்கள், அந்த யானை எப்போது இறந்தது என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
யானா ஒன்றும் ரஷ்யாவின் பெரிய பெர்மாஃப்ரோஸ்ட் பகுதியில் கண்டறியப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய படிமம் இல்லை. சமீபகாலத்தில், உறைந்த நிலப்பரப்பு தொடர்ச்சியாக காலநிலை மாற்றத்தின் காரணமாக கரைகின்ற காரணத்தால் இது போன்ற கண்டுபிடிப்புகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த மாதம், இதே பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் சாப்ரே பூனை ஒன்றின் உடலின் மிச்சத்தை கண்டறிந்தனர். 32 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் அந்த பூனை வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதற்கு முன்பு, இந்த ஆண்டின் துவக்கத்தில் 44 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓநாயின் உடல் கண்டறியப்பட்டது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு