by wp_fhdn

விடுதலைப் போராட்ட இயக்க வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகள் அதிக தியாகம் செய்தவர்கள்: ஸ்டாலின் குணசேகரன் விடுதலைப் போராட்ட இயக்க வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகள் அதிக தியாகம் செய்தவர்கள் என நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று இரவு நடைபெற்றது. செந்தொண்டர் அணிவகுப்பு, தியாகிகள் ஜோதி பெறுதல், புதுச்சேரி கலை ஆலயத்தின் சார்பில் மேரி ஸ்டெல்லாவின் வீராயி காவியம் நாட்டிய நாடகம் நடைபெற்றது. அதையடுத்து, கட்சியின் முதுபெரும் தியாகிகளான 100 பேர், அவரது குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். அதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையா எழுதிய பிரெஞ்சிந்திய ‘விடுதலை வரலாறு’ நூல் முதல் பிரதியை த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட அதை மூத்த தலைவர்கள் ராமமூர்த்தி, நவீன்.தனராமன், அபிஷேகம், கீதநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக நூல் வெளியீடு குறித்து நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவர் ஸ்டாலின் குணசேகன் கூறியதாவது: விடுதலைப் போராட்டத்தியாகி மக்கள் தலைவர் சுப்பையா எழுதிய பிரெஞ்சிந்திய விடுதலை வரலாறு நூலானது காலப்பெட்டகமாகும். இந்நூல் வெளிவராமல் இருந்திருந்தால் புதுச்சேரி விடுதலை போராட்ட வரலாற்றின் முக்கிய பகுதிகள் காற்றில் கரைந்திருக்கும். அந்த வகையில் காலத்தை வென்றிருக்கிற வரலாற்றுப் பெட்டகமாகவே நூல் திகழ்கிறது.

புதுச்சேரி மக்கள் தலைவரான தியாகி வ.சுப்பையா வரலாற்று நாயகர். இந்தியாவுக்கு ஜவஹர்லால் நேருவைப் போல புதுச்சேரிக்கு வ.சுப்பையா திகழ்ந்துள்ளார். அவர் காந்தியடிகள், நேரு ஆகியோரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து மண்ணின் வரலாற்றுக்கு வலுசேர்த்தவர். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் அகில இந்திய அளவில் முக்கியமானவராகத் திகழ்ந்துள்ளார்.

விடுதலைப் போராட்ட இயக்க வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகள் அதிக தியாகம் செய்தவர்கள். அதனால், தேசப்பாதுகாப்பில் அவர்களது வழியில் நாம் தொடர்ந்து செயல்படுவோம் என்றார். நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் அ.மு.சலீம் தலைமை வகித்தார். துணைச்செயலர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார்.

இன்று மாநிலம் முழுவதும் கட்சிக் கிளைகள் சார்பில் கொடியேற்றுதல், கட்சி அலுவலகத்தில் தலைவர் படங்களை வைத்து அலங்கரித்து, கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.மூத்த நிர்வாகிகள் கூறுகையில், “இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டிருந்த காலத்தில், மார்க்சிய கொள்கை மீது ஈடுபாடு கொண்டவர்கள் உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 24,25,26 தேதிகளில் ஒன்றுக்கூடி முதல் மாநாட்டினை நடத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள்.

இந்த மாநாட்டிற்கு தமிழகத்தை சார்ந்த சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் தலைமை தாங்கினார்.கட்சி தொடங்கியவுடன் பிரிட்டிஷ் ஆட்சி கட்சி செயல் பட தடை விதித்ததுடன் சதிவழக்குகளை தொடர்ந்து கம்யூனிஸ்ட் களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்து அடக்குமுறைகளை ஏவியது. பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி மண்ணில் மக்கள் தலைவர் வ. சுப்பையா தலைமையில் உருவாக்கப்பட்ட பிரெஞ்சிந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மண்ணின் விடுதலைக்கும், எட்டு மணி நேர வேலை உரிமைக்கும் போராடி வென்றது.” என்றனர்.

தொடர்புடைய செய்திகள்