பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு விரைந்து முற்றுப்புள்ளி : அமைச்சர் சரோஜா சாவித்ரி தலைமையில் தேசிய செயற்திட்டம் அங்குரார்ப்பணம் ! on Thursday, December 26, 2024
பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கிலான இரண்டாவது பல்துறைசார் தேசிய செயற்திட்டம் அண்மையில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தலைமைத்துவத்தின்கீழ் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான தேசிய செயற்திட்டத்தைத் தயாரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் என்பன கடந்த மூன்று வருடகாலமாக அவசியமான தொழில்நுட்ப மற்றும் வழிகாட்டல் உதவிகளை வழங்கிவந்தன. அத்தோடு பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை உறுதிசெய்வதை முன்னிறுத்திய இலங்கையின் கூட்டு செயற்றிட்டத்துக்கு நோர்வே மற்றும் கனேடிய நாடுகளின் அரசாங்கங்கள் அவசியமான அனுசரணையினை வழங்கியிருந்தன.
அதன்படி பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட முதலாவது தேசிய செயற்றிட்டம் 2016 – 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது செயற்றிட்டம் 2024 – 2028ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இச்செயற்திட்டமானது பாலின மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, சமூகப்பாதுகாப்பு, நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெருந்தோட்டம், சிறுவர் விவகாரம், போக்குவரத்து, ஊடகம், இளைஞர் மற்றும் விளையாட்டு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கல்வி எனும் விடயப்பரப்புக்களுடன் தொடர்புடைய 13 அமைச்சுக்களின்கீழ் இயங்கும் 13 பிரதான துறைகளையும், 5 உப துறைகளையும் உள்ளடக்கியுள்ளன.
இச்செயற்திட்டமானது சம்பந்தப்பட்ட அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் உள்ளிட்ட ஐ.நா முகவரமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், அபிவிருத்திப்பங்காளிகள், தனியார்துறையினர் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.