விராட் கோலி – கான்ஸ்டாஸ் மோதல்: வேண்டுமென்றே இடித்தாரா? கோலி மீது என்ன நடவடிக்கை?
மெல்போர்னில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் நாளிலேயே, பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
பும்ரா உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்களைத் திணற வைத்த ஆஸ்திரேலியாவின் இளம் வீரருக்கும் இந்தியாவின் விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மைதானத்துக்கு உள்ளேயே உடல் ரீதியாகவும், வார்த்தைகளாலும் நடந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர கள நடுவர் தலையிட வேண்டியிருந்தது.
இந்த மோதல் தொடர்பாக பெரும்பாலும், விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மைதானத்துக்குள் என்ன நடந்தது?
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4-வது டெஸ்ட் வியாழக்கிழமை மெல்போர்னில் தொடங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
சாம் கான்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியாவுக்காக இன்னிங்ஸை தொடங்கினர். இது சாம் கான்ஸ்டாஸின் முதல் டெஸ்ட். 19 வயதான அவர், தனது பேட்டிங் திறனுக்காக உள்ளூர் போட்டிகளில் பிரபலமானவர்.
சாம் கான்ஸ்டாஸ் ஆரம்பத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை திறமையாகச் சமாளித்து ஆடினார். ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.
ஆறாவது ஓவரில் பும்ராவின் பந்தில் 2 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடித்து இந்திய அணியை அச்சுறுத்தினார் கான்ஸ்டாஸ். இந்த சிக்சருக்கு முன்புவரை டெஸ்ட் போட்டிகளில் 4,562 பந்துகளை சிக்சர் விட்டுக்கொடுக்காமல் வீசியிருக்கிறார் பும்ரா. அதனால் பும்ராவின் பந்தில் சிக்சர் அடிக்கவே முடியாது என்ற பெருமை அவருக்கு இருந்தது. இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் சிட்னியில் நடந்த டெஸ்டில் கேமரன் கிரீன் சிக்சர் அடித்திருந்தார்.
தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளிலேயே ஒரு ஓவரில் அதிக ரன்களை பும்ரா விட்டுக் கொடுத்ததும் இந்த ஓவரில்தான். அதில் 18 ரன்கள் எடுக்கப்பட்டன.
“பும்ராவை சமாளிக்க என்னிடம் திட்டம் இருக்கிறது” என்று போட்டிக்கு முன்னரே கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார் கான்ஸ்டாஸ்.
கான்ஸ்டாஸின் ஆக்ரோஷமான பேட்டிங் காரணமாக இந்தியா தரப்பில் பரபரப்பு ஏற்பட்டது. கான்ஸ்டாஸின் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்தது.
இந்தியாவுக்காக முகமது சிராஜ் 10-வது ஓவரை வீசினார். அந்த ஓவர் முடிந்த பிறகுதான் கோலிக்கும் கான்ஸ்டஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பத்தாவது ஓவர் முடிந்த பிறகு கான்ஸ்டாஸ் தனது சக வீரர் உஸ்மான் கவாஜாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி, கான்ஸ்டாஸின் தோளில் மோதினார். பின்னர் இருவரும் கோபமாக வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, நடுவர் தலையிட்டு இருவரையும் கலைந்து போக வைத்தார்.
கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?
இந்த மோதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இப்போது விவாதம் கோலி தற்செயலாக கான்ஸ்டாஸுடன் மோதினாரா அல்லது அவர் வேண்டுமென்றே அதைச் செய்தாரா என்பதுதான்.
சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோலியின் நடத்தையை விமர்சித்துள்ளனர். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், போட்டி நடுவர் நிச்சயமாக இந்த விஷயத்தை ஆராய்வார் என்று கூறியிருக்கிறார். கோலி பெருமை கொள்ளத் தகாத வகையில் நடந்து கொண்டதாக அவர் கூறினார்.
“கான்ஸ்டாஸ் தனது வழியில் சென்று கொண்டிருந்தார். விராட் தனது பாதையை மாற்றினார்” என்று கூறினார். அந்த நேரத்தில் மைக்கேல் வாகன் போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்தார். போட்டி நடுவர் இந்த விஷயத்தை ஆராய்வாரா என்று கேட்டபோது, ”நிச்சயமாக” என்று கூறினார்.
தவறு விராட் கோலியின் மீதுதான் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விராட் கோலியின் இந்த நடத்தை தேவையற்றது என்று கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டனும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரும் இந்த விஷயத்தில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். விராட் கோலி இதைத் தவிர்த்திருக்கலாம் என்று கவாஸ்கர் கூறுகிறார்.
யாராவது உங்கள் திசையில் வருவதைக் கண்டால், நீங்கள் வழிவிட்டு விலகிச் செல்லலாம், அவ்வாறு செய்வதன் மூலம் யாரும் சிறியவர்களாகிவிட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
இருப்பினும், போட்டியின்போது இப்படியெல்லாம் நடக்கும் என்றும், மைதானத்தில் என்ன நடந்தாலும் அது அதற்குள்ளே மட்டுமாகத்தான் இருக்கும் என்றும் சாம் கான்ஸ்டாஸ் பின்னர் கூறினார்.
ஆஸ்திரேலிய மகளிர் அணித் தலைவர் அலிசா ஹீலி, கோலியின் நடத்தையை விமர்சித்துள்ளார். மேலும் ஒரு நட்சத்திர பேட்ஸ்மேன் தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் உள்ள இளம் வீரரை குறிவைத்துள்ளார் என்றும் கூறினார்.
“இது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயம் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த மற்றும் அவரது நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரிடம் இருந்து இந்த வகையான நடத்தையை எதிர்பார்க்கவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
விராட் கோலி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
ஐசிசி நடத்தை விதிகளின்படி, கிரிக்கெட்டில் எந்தவொரு பொருத்தமற்ற ‘உடல் ரீதியான மோதலும்’ தடைசெய்யப்பட்டுள்ளது.
ஒரு வீரர் வேண்டுமென்றே அல்லது அவரது அலட்சியம் காரணமாக எந்த வீரருடனோ அல்லது நடுவருடனோ மோதினால், அது நடத்தை விதிகளை மீறுவதாகக் கருதப்படும்.
போட்டி நடுவர் அதை லெவல்-2 குற்றமாகக் கருதினால், சம்பந்தப்பட்ட வீரருக்கு மூன்று முதல் நான்கு அபராதப் புள்ளிகள் (Demerit points) வரை விதிக்கப்படலாம்,
விராட் கோலியின் விஷயத்தில் இது நடந்தால், சிட்னியில் நடைபெறும் அடுத்த டெஸ்டில் விளையாடுவதற்கு அவர் தடை செய்யப்படலாம். போட்டி நடுவர் அதை லெவல் 1 குற்றமாகக் கருதினால், அபராதம் விதிக்கப்படலாம்.
கடந்த 2018ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின்போது, ககிசோ ரபாடா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த வழக்கில் ரபாடா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு எதிராக மூன்று பெனால்டி புள்ளிகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், பின்னர் அவரது மேல்முறையீட்டின் பேரில் பெனால்டி தள்ளுபடி செய்யப்பட்டது.
கான்ஸ்டாஸின் அதிரடி ஆட்டம்
விராட் கோலியுடனான மோதலுக்குப் பிறகு கான்ஸ்டாஸ் மிகவும் கோபமாகத் தெரிந்தார். அடுத்த ஓவரிலேயே ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை அவர் அடித்தார்.
போட்டியின் 11-வது ஓவரில் கான்ஸ்டாஸ் 18 ரன்கள் எடுத்தார். தனது முதல் டெஸ்டை விளையாடிய கான்ஸ்டாஸ், வெறும் 52 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.
போட்டியின் 20வது ஓவரில் 60 ரன்கள் எடுத்த பிறகு அவர் அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா தனது விக்கெட்டை வீழ்த்தினார்.
கான்ஸ்டாஸ் வெறும் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.
பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இதுவரை நடந்தது என்ன?
தற்போதைய பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்காக இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துவிட்டன. ஒரு டெஸ்ட் போட்டி டிரா ஆனது, இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வலுவான மறுபிரவேசம் செய்து ஸ்கோரை சமன் செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
இந்தத் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற, இந்தியா இந்தத் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும்.
தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா இந்தத் தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளது.
இதுவரை ஜஸ்பிரித் பும்ரா இந்தத் தொடரில் இந்தியாவின் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். முதல் டெஸ்டில், தனது தலைமையில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், அவர் அற்புதமாகப் பந்து வீசினார்.
அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (21) வீழ்த்தியுள்ளார். அவருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பேட்டிங்கில் கே.எல். ராகுல் இந்தியாவுக்காக அதிகபட்சமாக 235 ரன்கள் எடுத்துள்ளார், அதே நேரத்தில் ஜெய்ஸ்வால் 193 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அதிக ரன்கள் (409) எடுத்துள்ளார். அவர் இந்திய அணிக்கு ஒரு பெரிய தலைவலியாக இருக்கிறார்.
இந்தத் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் இந்தியா திரும்பியுள்ளார், அவருக்குப் பதிலாக தனுஷ் கோட்டியன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.