ரஷ்ய உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மீதான படுகொலை முயற்சி முறியடிப்பு!

by wp_fhdn

மொஸ்கோவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மீதான பல கொலை முயற்சிகளை வியாழனன்று (27) முறியடித்ததாகக் ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) தெரிவித்துள்ளது.

உக்ரேனிய உளவுத்துறையினரால் இந்த தாக்குதல்கள் திட்டமிடப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புச் சேவையின் ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ்,

சிறப்பு இராணுவ நடவடிக்கையில் பங்கேற்கும் உயர்மட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மீதான தொடர்ச்சியான படுகொலை முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இந்த சதித்திட்டம் தொடர்பில் நான்கு ரஷ்ய பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தேடுதல்களில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மற்றும் குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர், 2020 முதல் உக்ரேனில் வசித்து வந்த ரஷ்ய குடிமகன், உக்ரேனில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் போல் பாசாங்கு செய்து கடந்த நவம்பரில் அவர் மொஸ்கோ திரும்பியதாக கூறப்படுகிறது.

அவரிடமிருந்து ஒரு வெடிக்கும் சாதனம் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களும் மீட்கப்பட்டதாக FSB அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உக்ரேனிய சிறப்பு சேவைகளின் உத்தரவின் பேரில் ரஷ்ய மூத்த இராணுவ அதிகாரிகள் மீது கண்காணிப்பு நடத்தியதற்காக மற்றொரு ரஷ்ய குடிமகன் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கைதான நபர்களுக்கு எதிராக பல குற்றவியல் வழக்குகளில் விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்