மோதி, மோகன் பாகவத் இடையே மறைமுக யுத்தம் நடக்கிறதா? உண்மை என்ன?
- எழுதியவர், அபினவ் கோயல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
“இந்துக்கள் ராமர் கோவில் மீது பக்தி கொண்டுள்ளனர். ஆனால் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு புதிய இடங்களில் இதேபோன்ற பிரச்னைகளை எழுப்புவதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இதை ஏற்க முடியாது.”
நாட்டில் கோவில்கள் மற்றும் மசூதிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள இந்த நேரத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் இவ்வாறு கூறியுள்ளார்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த விவாதம் நடந்து வரும் நிலையில், சம்பல், மதுரா, அஜ்மீர், காசி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உள்ள மசூதிகள் இருந்த இடத்தில் இதற்கு முன்பு கோவில்கள் இருந்தன என்று பலர் கூறி வருகின்றனர்.
டிசம்பர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புனேவில் ‘இந்து சேவா மஹோத்சவ்’ தொடக்க விழாவில் பேசிய மோகன் பாகவத் இந்த சூழல் குறித்து கவலை தெரிவித்தார். கோவில்-மசூதி குறித்த பிரச்னைகளை சரி செய்வது பற்றி அவர் மீண்டும் பேசினார்.
ஒவ்வொரு நாளும் இதுபோல புதிய பிரச்னைகள் உருவாகுவது சரியல்ல, இந்த நிலை தொடர முடியாது என்றும் அவர் கூறினார்.
மோகன் பாகவதின் இந்த கருத்துகளுக்கு பிறகு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு தொடங்கியிருப்பது மட்டுமல்லாமல் அவருக்கு எதிராக பல துறவிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோகன் பாகவதின் இந்த பேச்சின் அர்த்தம் என்ன? ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தங்களின் பாதையை மாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறாரா?
துறவிகள் எழுப்பியுள்ள கேள்விகள் என்ன?
மோகன் பாகவத் தெரிவித்த கருத்து குறித்து சுவாமி ராமபத்ராச்சார்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், “இது மோகன் பாகவதின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். இது அனைவரின் கருத்து அல்ல. அவர் ஒரு அமைப்பின் தலைவராக இருக்கலாம். ஆனால் அவர் இந்து மதத்தின் தலைவர் அல்ல. அவர் சொல்வதை நாம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று கூறினார்.
“அவர் இந்து மதத்திற்கான ஒட்டுமொத்த பொறுப்பாளர் அல்ல. இந்து மதம், இந்து மத ஆச்சார்யர்களின் கையில் உள்ளது. அது அவர் கையில் இல்லை. அவர் ஒரு அமைப்பின் தலைவராக இருக்கலாம். ஆனால் அவர் ஒட்டுமொத்த இந்தியாவிற்கான பிரதிநிதி அல்ல,” என்று ராமபத்ராச்சாரியா குறிப்பிட்டார்.
ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தும் மோகன் பாகவத் கருத்தால் அதிருப்தியடைந்துள்ளார்.
ஏபிபி செய்திகளிடம் பேசிய அவர்,”எல்லா இடங்களிலும் பிரச்னைகளை தேடக்கூடாது என்று இன்று சொல்பவர்கள்தான், பிரச்னையை பெரிதுபடுத்தி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இது போன்றவர்கள் பொறுப்புக்கு வந்த பிறகு சிரமமாக இருக்கிறது,” என்றார்.
“இதுபோன்ற பிரச்னைகள் எங்கிருந்து எழுகிறது என்பது பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதற்காக ஏன் ஒரு தனி ஆணையத்தை உருவாக்கக் கூடாது? இதன் மூலம் இந்த விஷயங்களை விரைவாக பரிசீலித்து, ஆதாரங்களைப் பார்த்து உண்மையைக் கண்டறிந்து அதை சரிசெய்ய முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் பாபா ராம்தேவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், “இந்தியா மீது படையெடுத்து வந்தவர்கள் நமது கோவில்கள், மதத் தலங்கள், சனாதனப் பெருமைக்குரிய சின்னங்களை அழித்து, இந்த நாட்டிற்குச் சேதம் விளைவித்திருப்பது உண்மைதான்” என்றார்.
“கோவில்கள் மற்றும் கடவுகளின் சிலைகளை இடிப்பவர்களை தண்டிப்பது நீதித்துறையின் வேலை. இந்த பாவங்களை செய்தவர்கள் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டும்” என்று பாபா ராம்தேவ் கூறினார்.
மோதி – மோகன் பாகவத் மறைமுக யுத்தமா?
2022ஆம் ஆண்டு நாக்பூரில் மோகன் பாகவத், “வரலாறு என்பது நம்மால் மாற்ற முடியாத ஒன்று. அது இன்றைய இந்துக்களாலோ அல்லது இன்றைய முஸ்லிம்களாலோ உருவாக்கப்படவில்லை. அது அந்தக் காலத்தில் நடந்தது. ஏன் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேட வேண்டும்?,” என்று தெரிவித்திருந்தார்.
2024 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் குறித்து மோகன் பாகவத் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். பாஜகவின் ஆணவத்தை அவர் சுட்டிக்காட்டுவதாக அந்த நேரத்தில் அது கருதப்பட்டது.
“கண்ணியத்தைப் பின்பற்றி வேலை செய்பவனே பெருமைக்குடையவன். அவன்தான் உண்மையான சேவகன் என்று அழைக்கப்படத் தகுதியானவன். அகங்காரம் கொண்டவன் அல்ல.” என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது அவரது கருத்தை அரசியல் ஆய்வாளர்கள் வேறு விதமாக பார்க்கின்றனர். பல தசாப்தங்களாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளை நெருக்கமாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா, “ராமர் கோவில் நிறுவப்பட்டதற்கு பிறகு சிலர் அரசியல் செய்து இந்துக்களின் தலைவராக மாற விரும்புகிறார்கள் என்று இந்த முறை மோகன் பாகவத் ஒரு வாக்கியத்தை சேர்த்துள்ளார்”, என்று கூறுகிறார்.
நரேந்திர மோதியை மறைமுகமாகத் சாடுவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக தலைவர்கள் ஆசியின் பேரில்தான் பாகவதிற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்று ஷரத் குப்தா கூறுகிறார்.
மூத்த பத்திரிகையாளர் அஷோக் வான்கடேயும் இதே கருத்தை முன்வைக்கிறார். “மோகன் பாகவதின் கூற்றை மத குருக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை ஆர்.எஸ்.எஸ். சங்கத்தை விட்டு வெளியேறுமாறு சமூக வலைதளங்களில் தொண்டர்கள் சிலர் சொல்கிறார்கள். டெல்லியின் ஆசியில்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை” என்கிறார்.
“இதை நரேந்திர மோதி கூறியிருந்தால் இதுபோன்ற விமர்சனங்கள் வந்திருக்குமா? மோகன் பாகவதுக்கு எதிராக வெளிப்படையாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது இந்திய அரசாங்கத்திற்கும் மோகன் பாகவதுக்கும் இடையே நடக்கும் நேரடிச் சண்டை” என்கிறார் அவர்.
மறுபுறம், தற்போது நாட்டில் நடந்து வரும் நிகழ்வுகள் அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை மோகன் பாகவதின் கருத்துகள் தெரிவிக்கின்றன என்று மூத்த பத்திரிகையாளரும் ஆர்எஸ்எஸ் சங்கம் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியவருமான விஜய் திரிவேதி குறிப்பிட்டார்.
“நரேந்திர மோதியுடன் அவருக்கு எந்த சண்டையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரது கருத்தினை சந்தேகிப்பது நேர்மையற்றது. இது தற்போது நடக்கும் விஷயங்களை பற்றியது மட்டுமல்ல. இந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று பல காலமாகவே அவர் கூறி வருகிறார்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“நல்லவராக தெரிய வேண்டும் என்பதற்காக அவர் வழக்கமாக முன்வைக்கும் கருத்துகள் போன்றது அல்ல இது. அவரது இந்த வார்த்தைகள் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பவர்களை நோக்கி கூறப்பட்டவை,” என்று விஜய் திரிவேதி குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். செல்வாக்கு
2024 மக்களவை தேர்தலின் போது கூட பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ். இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தோன்றின.
தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில்,’பாஜகவுக்கு இனி ஆர்எஸ்.எஸ்.இன் தயவு தேவையில்லை’ என்று கூறியிருந்தார்.
ஜே.பி. நட்டாவின் இந்த கருத்துக்கு பிறகு மோகன் பாகவத் சினம் கொண்டார் என்று மூத்த பத்திரிகையாளர் அஷோக் வான்கடே கூறுகிறார்.
“பாஜக மீது எப்போதும் ஆர்.எஸ்.எஸ்.இன் ஆதிக்கம் இருந்து வந்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தை போல மாறிவிட்டது. ஆட்சியும், கட்சியும் ஒருவரின் கையில் உள்ளது. இதனால் தங்கள் செல்வாக்கு போய்விடுமோ என்று இந்த சங்கத்தினர் கவலைப்படுகிறார்கள்”, என்று அஷோக் வான்கடே கூறுகிறார்.
“மோகன் பாகவதின் கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நிறைய விவாதங்கள் மற்றும் உத்திகளுக்குப் பிறகு இதுபோன்ற கருத்துகள் கூறப்படுகின்றன” என்று வான்கடே கருதுகிறார்.
மறுபுறம் நரேந்திர மோதிக்கு ஆதரவாக இருப்பவர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்.இல் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ். மீதான மோகன் பாகவதின் பிடியும் பலவீனமடைந்து வருகிறது. ஏனென்றால் சங்கத்தின் சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் திறமையானவர்தானா என்ற கேள்விகள் இப்போது எழுப்பப்படுகின்றன என்று ஷரத் குப்தா குறிப்பிட்டார்.
“பாஞ்சஜன்யம் என்பது இந்த சங்கத்தின் இதழ் ஆகும். இந்து மதத்தின் சின்னங்கள் எங்கு மறைந்திருந்தாலும், எங்கு இந்து கோவில்கள் இடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை திரும்பப் பெற வேண்டிய அவசியம் உள்ளது என்று இதழின் சமீபத்திய வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் இதழே அதன் தலைவருக்கு எதிராக நிற்கிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்தின் தாக்கம்?
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இத்தகைய கருத்துகள், அந்த சங்கத்தின் அடிமட்ட அளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதுதான் கேள்வி. சங்கத்துடன் தொடர்புடைய அமைப்புகள் மோகன் பாகவதின் பேச்சைக் கேட்கின்றனவா?
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்த கருத்து அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு கட்டளை அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி கூறினார்.
“இந்தியாவில் இந்த சங்கத்திற்கு சுமார் ஒரு கோடி தொண்டர்கள் இருக்கின்றனர். ஆனால், இந்துக்களின் மக்கள் தொகை சுமார் 80 கோடி. ஒவ்வொரு இந்துவும் சங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று நாம் கருதுகிறோம், ஆனால் அது அப்படி அல்ல. எனவே மோகன் பாகவத் கருத்துக்களின் நேரடித் தாக்கம் அடிமட்ட நிலை வரை காணப்படும் என்று சொல்ல முடியாது,” என்று திரிவேதி குறிப்பிட்டார்.
“ஆர்.எஸ்.எஸ் சங்கமும் பாஜக கட்சியும் சேர்ந்து உத்வேகம் கொண்ட ஒரு படையை உருவாக்கியுள்ளன. அந்த உத்வேகத்தை சிதைப்பது அவ்வளவு எளிதானது அல்ல,” என்று அவர் கூறினார்.
“இந்துத்துவா சித்தாந்தம் என்பது ஒரு புலி. அதில் ஏறி சவாரி செய்வது எளிது, ஆனால் இறங்குவது மிகவும் கடினம். ஆர்.எஸ்.எஸ் சங்கமும் பாஜக கட்சியும் சேர்ந்து நாடு முழுவதையும் இந்துத்துவ அலைக்குள் தள்ளிவிட்டன. இப்போது அதில் இருந்து இறங்க முடியாமல் திணறி வருகின்றன. இதற்கு முயற்சி செய்பவர்கள் இதுபோன்ற விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொள்கிறார்கள். மோகன் பாகவதும் இதற்கு விதிவிலக்கல்ல,” என்றார் அவர்.
காங்கிரஸ் கேள்வி
“மோகன் பாகவதின் கருத்து ஆர்.எஸ்.எஸ்.-இன் ஆபத்தான செயல்பாட்டை பிரதிபலிக்கிறது. அவரது வார்த்தைகளுக்கும் செயலுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
“ஆர்.எஸ்.எஸ். -இன் செயல்பாடு சுதந்திரத்தின் போது இருந்ததை விட இன்று மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. சொல்வதற்கு மாறாக அந்த அமைப்பு செயல்படுகிறது.”
“கோவில்-மசூதி பிரச்னையை முன்வைத்து தலைவர்கள் போலப் பேசுவது தவறு என்று மோகன் பாகவத் கருதினால் அத்தகைய தலைவர்களுக்கு ஏன் அவரது சங்கம் பாதுகாப்பு அளிக்கிறது? ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவில் மோகன் பாகவதின் பேச்சு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“அவர் தனது கருத்துகளில் உண்மையிலேயே நேர்மையாக இருந்தால், சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தலைவர்களை இந்த சங்கம் ஒருபோதும் ஆதரிக்காது என்று அவர் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.”
“ஆனால் அவர் அப்படிச் செய்ய மாட்டார். ஏனென்றால் கோவில்-மசூதி விவகாரம் அந்த சங்கத்தின் ஆதரவுடன்தான் நடக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தூண்டி, கலவரத்தை உருவாக்குபவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்பு உள்ளது என்பது பல சமயங்களில் தெரிய வந்துள்ளது. பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் அல்லது பாஜபவுடன் தொடர்புடையவர்களாக அவர்கள் உள்ளனர். வழக்கறிஞரை ஏற்பாடு செய்து தருவது முதல் வழக்கு நடத்துவது வரை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு முழுமையாக உதவுகிறது.”
“பாகவதின் கருத்துகள் சமூகத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே என்பது தெளிவாக உள்ளது. இதுபோன்ற விஷயங்களைச் சொல்வதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பாவங்கள் களையப்பட்டு, தனது பிம்பம் மேம்படும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் உண்மை நாட்டின் முன் உள்ளது,” என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.