மட்டக்களப்பில் அழிப்பேரலையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி!

by wamdiness

சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பின் பல பகுதிகளிலும்  நடைபெற்றது.

இலங்கையில் மிக உயரமான சுனாமி நினைவுத்தூபியை கொண்டிருப்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்ததின்போது அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டதுமான நாவலடி கிராமத்தில் உள்ள சுனாமி நினைவுத்தூபியில் இன்றைய தினம் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

நாவலடி சுனாமி நினைவுக்குழுவின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வில் நாவலடி சித்திவிநாயகர் ஆலயத்தில் காலையில் விசேட பூஜைகள் நடைபெற்றன. 

அதனை தொடர்ந்து சுனாமி நினைவுத்தூபியில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது விசேட ஆத்மசாந்தி பூஜைகளை தொடர்ந்து, உயிர்நீத்த உறவுகளால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, நாவலடி கடற்கரையிலும் உயிர்நீத்தோரின் ஆத்மசாந்திக்காக விசேடபூஜைகள் நடைபெற்றன. 

இந்த நிகழ்வில் அருட்தந்தையர்களான ஜோசப் மேரி, க.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், இரா.துரைரெட்னம், முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் நினைவுத்தூபியிலும் நினைவேந்தல் உணர்வூர்வுமாக முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நாவலடி, புதுமுகத்துவாரம் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 1100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்