டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை ‘வாங்க விரும்புவது’ ஏன்? சீனாவை சமாளிக்க அது உதவுமா?

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரிசோனாவில் நடைபெற்ற மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் பேசினார்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், யுக்ரேன் போர் போன்ற வெளிநாட்டு மோதல்களில் இருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்துவது, வெளிநாட்டு வர்த்தக கூட்டாளிகளின் மீதான வரிகளை அதிகரிப்பது, உள்நாட்டு உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற கொள்கைகளை முன்னிறுத்தினார்.

ஆனால் சமீபத்திய நாட்களில் அவர் தனது வெளியுறவுக் கொள்கையில் மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறையைப் பரிந்துரைத்துள்ளார்.

முதலில், கனடா கூடுதலான ஒரு அமெரிக்க மாகாணம் என்று டிரம்ப் கேலி செய்தார். அடுத்ததாக, பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறப் போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.

டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீன்லாந்தை வாங்க விரும்பினார். அந்த விருப்பதைத் தற்போது அவர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கிரீன்லாந்தை உற்றுநோக்கும் டிரம்ப்

கடந்த வார இறுதியில், டிரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில், தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சுதந்திரத்தின் காரணங்களுக்காக, கிரீன்லாந்தின் உரிமை மற்றும் கட்டுப்பாடு ஒரு முழுமையான தேவை என்பதை அமெரிக்கா உணர்வதாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, கிரீன்லாந்தில் பிட்டுஃப்ஃபிக் (Pituffik) விண்வெளி தளத்தை நிர்வகிக்கிறது. பூமியில் கிடைக்கும் அரிய கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், அந்த பிரதேசத்தில் நிறைந்துள்ளன. மேலும் ஆர்டிக் வட்டத்தில் உலகளாவிய சக்திகள் தங்கள் வரம்பை விரிவுபடுத்த முயல்வதால் வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய இடமாகவும் அது பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யா, இப்பகுதியை ஒரு பாதுகாப்பு உத்தியாகப் பார்க்கிறது.

கிரீன்லாந்தின் பதில்

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனாமா கால்வாய் “தவறான கைகளில்” விழாமல் இருக்க வேண்டும் என்று சீனாவை குறிப்பிட்டு டிரம்ப் கூறினார்.

கடந்த 2019இல், அதிபராகத் தனது முதல் பதவிக் காலத்தில், கிரீன்லாந்தை வாங்கும் எண்ணத்தை டிரம்ப் முன்மொழிந்தார். ஆனால் அது ஒருபோதும் நிறைவேறவில்லை.

“நாங்கள் விற்பனைக்கு இல்லை, நாங்கள் விற்கப்படவும் மாட்டோம்” என கிரீன்லாந்தின் பிரதமர் மூட் பி எகேடே, டிரம்பின் சமீபத்திய கருத்துகளுக்கு இந்த வாரம் பதிலளித்தார்.

ஆனால், கிரீன்லாந்து மக்கள் தங்கள் அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்கவும் வர்த்தகம் செய்யவும் சுதந்திரமானவர்கள் மற்றும் இறையாண்மை கொண்டவர்கள் என்று அவர் கூறினார்.

டிரம்பின் உத்தி என்ன?

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

ஆனாலும், டிரம்ப் தனது அறிக்கைகளைத் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில், பனாமா கால்வாய்க்கு நடுவில் அமெரிக்க கொடி நடப்பட்டிருப்பது போன்ற ஒரு படத்தை டிரம்ப் வெளியிட்டார்.

அவரது இரண்டாவது மகனான எரிக் டிரம்ப், எக்ஸ் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டார். அமேசான் ஷாப்பிங் இணையதளத்தில் கிரீன்லாந்து, பனாமா கால்வாய் மற்றும் கனடாவை அமெரிக்கா வாங்குவதற்காகச் சேர்த்து வைத்திருப்பது போல் அந்தப் படம் பிரதிபலிக்கிறது.

டிரம்பை பொறுத்தவரை, அமெரிக்காவின் பலத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கான வாக்குறுதிகள் அவரது இரண்டு வெற்றிகரமான அதிபர் பிரசாரங்களுக்கு உதவியது.

அதிபராகத் தனது முதல் பதவிக்காலத்தில், டிரம்ப் ஓர் உத்தியைப் பயன்படுத்தினார். வரி விதிப்பதாகவும் “ஆயுதம் ஏந்திய வீரர்களை” அனுப்புவதாகவும் அச்சுறுத்தி, அமெரிக்காவுடனான அதன் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும் மெக்சிகோவுக்கு அழுத்தம் கொடுத்தார்.

அவரது இரண்டாவது பதவிக்காலத்தை நோக்கிச் செல்லும்போது, டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றவுடன் இதேபோன்ற உத்தியைப் பயன்படுத்த திட்டமிடலாம்.

டிரம்பின் அறிக்கைக்குப் பிறகான மாற்றங்கள்

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றவுடன் இதே போன்ற உத்தியை பயன்படுத்த திட்டமிடலாம்.

அடுத்தடுத்து நடக்கப் போகும் நிகழ்வுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றாலும், டென்மார்க் அவரது நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஆர்டிக் பகுதியைப் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை, டிரம்ப் மீண்டும் கூறிய சில மணிநேரங்களில், கிரீன்லாந்து மீதான பாதுகாப்புக்கான செலவினங்கள் அதிகரிக்கப்பட்டதாக டென்மார்க் அறிவித்தது.

கிரீன்லாந்தின் பாதுகாப்பு செலவினம் 1.5 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளதாக, டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோல்ஸ் பவுல்சன் கூறினார்.

மேலும், கிரீன்லாந்தின் பாதுகாப்பு செலவினத்தை அதிகரிப்பது அவர்களுக்குக் கடினமான முடிவாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் பவுல்சன், கூடுதல் பாதுகாப்பு தொகுப்பின் மூலம் தீவின் நிலையைக் கண்காணிக்கும் இரண்டு புதிய கப்பல்களையும், நீண்ட தூரம் பறக்கும் இரண்டு புதிய ட்ரோன்களையும், மரம் அல்லது இரும்பால் ஆன சிறிய பனிச்சறுக்கு வண்டியில் சரக்குகளை ஏற்றி, எட்டு முதல் பத்து நாய்களின் உதவியுடன் பனிப் பகுதிகளில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தப்படும் வண்டிகளையும் பெற்றிருப்பதாகக் கூறினார்.

 F-35 போன்ற  அதிவேக போர்விமானங்களை இயக்குவதற்கான திறனை உயர்த்தவும் உதவும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரீன்லாந்தின் குடிமக்கள் பயணிக்கும் மூன்று முக்கிய விமான நிலையங்களில் ஒன்றில் F-35 போன்ற அதிவேக போர் விமானங்களை இயக்குவதற்கான திறனை உயர்த்தவும் உதவும்.

மேலும், “நாங்கள் பல ஆண்டுகளாக இந்தத் தீவுக்கு அதிக கவனம் செலுத்தவில்லை அல்லது முதலீடு செய்யவில்லை, ஆனால் இப்போது இந்தத் தீவில் தங்களது பிடியைப் பலப்படுத்துவதற்கு முறையான திட்டங்களை உருவாக்கி வருகிறோம்” என்றும் பவுல்சன் தெரிவித்தார்.

டென்மார்க்கின் பாதுகாப்பு அமைச்சர் இதன் சரியான மதிப்பை வெளிப்படுத்தவில்லை, ஆனால் டென்மார்க் ஊடகங்கள் இதன் மதிப்பு 12 முதல் 15 பில்லியன் க்ரோன் (டென்மார்க் நாணயம்) என மதிப்பிட்டுள்ளன.

கிரீன்லாந்தின் பாதுகாப்பு செலவினத்தை அதிகரிக்கும் திட்டம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், இதை டிரம்பின் அறிக்கைகளுக்கு நேரடியான பதிலாகக் கருதக்கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் கிரீன்லாந்தில் தனது ராணுவ திறனை அதிகரிக்க டென்மார்க் மெதுவாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் சீனா மற்றும் ரஷ்யாவின் அத்துமீறல்களுக்கு எதிராக டென்மார்க் அப்பகுதியைப் பாதுகாக்க முடியாவிட்டால், கட்டுப்பாட்டுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

டிரம்பின் நோக்கம், இத்தகைய நடவடிக்கைகளை எடுக்குமாறு டென்மார்க்குக்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கலாம் என்று டென்மார்க் பாதுகாப்பு அகாடமியின் தலைவர் ஸ்டீன் க்ஜேர்கார்ட் கூறுகிறார்.

கிரீன்லாந்தை சுற்றியுள்ள வான்பகுதி மற்றும் கடல் கட்டுப்பாட்டு அமைப்புகளின் தேவை குறித்தும், கிரீன்லாந்தின் முன்னேற்றங்கள் குறித்தும் டிரம்ப் தனது கவனத்தைச் செலுத்துவார். அங்கு சிலர் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள், சொல்லப்போனால் அதை எதிர்நோக்கியுள்ளார்கள்” என்று ஸ்டீன் பிபிசியிடம் கூறினார்.

“இருப்பினும், இவை அனைத்திற்கும் மத்தியில், கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் ஒரு புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

டிரம்பின் நோக்கம், இத்தகைய நடவடிக்கை எடுக்க டென்மார்க்குக்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் நோக்கம், இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க டென்மார்க்குக்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கலாம் என்று ஸ்டீன் க்ஜேர்கார்ட் கூறுகிறார்.

“டிரம்ப் மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்படுவதாக நான் நினைக்கிறேன். கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதன் மூலம், அதன் ராணுவ திறன்களுக்கு முன்னுரிமை அளிக்க டென்மார்க்கை அவர் கட்டாயப்படுத்துகிறார்,” என்கிறார் ஸ்டீன் க்ஜேர்கார்ட்.

கோபன்ஹேகனில் இருந்து கிரீன்லாந்து அதிக அளவில் மானியங்களை நம்பியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். 2019இல் முதன்முதலில் கிரீன்லாந்தை வாங்க டிரம்ப் விருப்பம் தெரிவித்தார். இதற்கு டென்மார்க் தலைவர்கள் வலுவாக எதிர்வினையாற்றினார்கள்.

அந்த நேரத்தில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன் இந்த யோசனையை “முட்டாள்தனம்” என்று அழைத்தார். அதற்குப் பிறகு டிரம்ப் தனது டென்மார்க் அரசுப் பயணத்தை ரத்து செய்தார்.

அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க விரும்புவது ஏன்?

இந்த கனிமங்களில் நிலக்கரி, தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்றவை அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகளவிலான கனிம வளங்கள் இருப்பினும், கிரீன்லாந்து தனது செலவுகளில் மூன்றில் இரண்டு பங்கைப் பராமரிக்க டென்மார்க்கை நம்பியுள்ளது.

அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க விரும்புவதற்கான காரணங்கள் என்ன?

அதிகளவிலான கனிம வளங்கள் இருப்பினும், கிரீன்லாந்து தனது செலவுகளில் மூன்றில் இரண்டு பங்கைப் பராமரிக்க டென்மார்க்கை நம்பியுள்ளது. இந்தக் கனிமங்களில் நிலக்கரி, தாமிரம், துத்தநாகம் போன்றவை அடங்கும்.

கடந்த 2019இல், கிரீன்லாந்தை வாங்குவதற்கான அமெரிக்காவின் உயர்மட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்த இருவர், அதிபர் டிரம்ப் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தால் கிரீன்லாந்தை வாங்க விரும்பியதாக நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தனர்.

ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையே உள்ள பாதையில் அமைந்துள்ள முக்கிய பாதுகாப்புப் பகுதியாக கிரீன்லாந்து இருப்பதால் அங்கு அமெரிக்கா தனது கவனத்தைக் குவித்து வைத்திருந்தது.

அமெரிக்கா பனிப்போரின் ஆரம்பத்தில், வான்பகுதி மற்றும் ரேடார் தளம் ஒன்றை இத்தீவில் நிறுவியது. இது தற்போது விண்வெளியைக் கண்காணிப்பதற்கும், அமெரிக்காவின் வட எல்லைப் பகுதிகளில் ஏவுகணை எச்சரிக்கைகளை வழங்கவும் உதவுகின்றது.

இதற்கிடையே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவி வெப்பமடைதல் காரணமாக, உறைந்த ஆர்டிக் கடல் பகுதி போக்குவரத்துக்கு உகந்ததாக மாறி வருகிறது. அதோடு இங்கு கடல் வழிப் பாதையும் உருவாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில், கிரீன்லாந்தை வாங்குவதற்கான அதிபர் டிரம்பின் விருப்பம் சீனாவும் கிரீன்லாந்தில் பெரிய ஆர்வம் காட்டிய காலத்தில் ஏற்பட்டது.

சீன அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம், 2018ஆம் ஆண்டு கிரீன்லாந்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு 2019இல் திரும்பப் பெறப்பட்டது.

அதேவேளையில், 2019ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் மைக் கல்லாகர் அதிபர் டிரம்பின் முன்மொழிவை பாதுகாப்பு நோக்கில் மிகவும் புத்திசாலித்தனமான முடிவு எனக் குறிப்பிட்டார்.

“பாதுகாப்பு அடிப்படையில் கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவு. இது வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட துருவத்திற்கு இடையே அமைந்துள்ள டென்மார்க்கின் தன்னாட்சிச் பகுதி,” என்று அவர் தனது எக்ஸ் பதிவில் கூறினார்.

கிரீன்லாந்தின் அதிகாரங்கள் என்ன?

கிரீன்லாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாதுகாப்பு அடிப்படையில் கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவு. இது வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட துருவம் இடையே அமைந்துள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதி

இந்தத் தீவில் சுமார் 56,000 மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் கடற்கரையை ஒட்டி வாழ்கின்றனர். கிரீன்லாந்தின் மக்கள்தொகையில் 90%, பூர்வீக கிரீன்லாண்டிக் இன்யூட் மக்களால் ஆனது. அங்கு அத்தீவுக்குச் சொந்தமான நாடாளுமன்றம் மற்றும் அதன் அரசுக்குக் குறிப்பிட்ட அளவிலான அதிகாரங்களும் உள்ளன.

இந்தத் தீவின் 80% பகுதி, ஆண்டின் 12 மாதங்களிலும் தடிமனான பனிப்படலத்தால் மூடப்பட்டுள்ளது. இந்தப் பனி தற்போது புவி வெப்பமடைவதால் உருகத் தொடங்கியுள்ளது.

இது பனிப்போர் காலத்தில் சில அமெரிக்க ராணுவ தளங்களில் புதைக்கப்பட்ட அணுக் கழிவுகளை வெளிப்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது.

கிரீன்லாந்தை கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்டகால திட்டமா?

இந்தத் தீவைக் கைப்பற்றும் அமெரிக்காவின் விருப்பம், மிகப் பழமையானது மற்றும் 1860இல் முதல் முறையாகப் பரிசீலிக்கப்பட்டது.

கிரீன்லாந்து, அதன் தாதுப்பொருள் வளங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் காரணமாக மிகவும் முக்கியமானதாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை 1867ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.

ஆனால், 1946 வரை கிரீன்லாந்து குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போது டென்மார்க்குக்கு 100 மில்லியன் டாலர் அளிக்கப்படும் என்று ஹென்றி ட்ரூமேன் அதிபராக இருந்தபோது பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும், கிரீன்லாந்துக்கு பதிலாக அலாஸ்காவின் சில பகுதிகளை டென்மார்க்குக்கு வழங்கவும் அவர் தயாராக இருந்தார்.

– இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் பிபிசி செய்தியாளர் கேலா எப்ஸ்டீன், ராபர்ட் கிரீனல், பால் கிர்பி ஆகியோரின் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.