சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?
- எழுதியவர், நித்யா பாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
டிசம்பர் 25ஆம் தேதி, இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.
டிசம்பர் 26ஆம் தேதி, காலையில் அந்தப் பெண் கொடுத்த புகார் தொடர்பாகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்தப் பெண்ணுக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி அந்தப் பெண்ணின் பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய எஃப்.ஐ.ஆரை ஒளிபரப்பின.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள் தொடர்பான பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெளியிடக் கூடாது என்று சட்டங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடுவது குறித்து சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறை தரப்பு கூறுவது என்ன? இதுபோன்ற செயல்பாடுகள் நிகழ்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய அண்ணாமலை
முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேசிய மகளிர் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “தமிழக காவல்துறையின் செயல்பாடு பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையை மீறும் வகையில் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நற்பண்பை கேள்விக்கு உட்படுத்தும் செயலாக இதை தமிழக காவல்துறை மற்றும் திமுக அரசு செய்துள்ளது,” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி, “பாதிக்கப்பட்ட மாணவியின் எந்த அடையாளமும் முதல் தகவல் அறிக்கையில் தெரியப்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை முடக்க வேண்டும் என்று எந்த வகையிலும் இந்த அரசு முயலவில்லை. அவர் மிகவும் துணிச்சலுடன் வந்து, இந்த அரசு மீது நம்பிக்கை வைத்து தாமாக முன்வந்து புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது,” என்று பதில் அளித்துள்ளார்.
காவல்துறை இணையதளத்தில் இருந்து முதல் தகவல் அறிக்கை பின்னர் முடக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண் சமூக “ஊடகங்களில் ஏற்கெனவே வெளியான எஃப்.ஐ.ஆரை ஆன்லைனில் பகிர்ந்தாலோ, பிரசுரம் செய்தாலோ சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு காவல்துறையினரின் அலட்சியம் மட்டுமே காரணம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
‘அடையாளத்தை வெளியே தெரிவிக்கக் கூடாது’
பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் தொடர்பான தகவல்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். பழைய இந்திய தண்டனைச் சட்டம் 228ஏ பிரிவில், இவ்வாறு பிரசுரம் செய்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். புதிதாக அமலுக்கு வந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா 72வது பிரிவும் அதே தண்டனையை வலியுறுத்துகிறது.
காவல் நிலைய ஆவணங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆவணங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உபயோகிக்கப்பட்டாலும்கூட, அவர் தொடர்பான தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்று பிபிசியிடம் பேசிய வழக்கறிஞர் ப.பா. மோகன் தெரிவிக்கிறார்.
கர்நாடகா Vs புட்டராஜா வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீதிமன்ற ஆவணங்களிலும் பயன்படுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. “நீதிமன்ற தீர்ப்புகளை வெளியிடுவதில், பிரசுரிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பழிவாங்கும் போக்கையும், ஒதுக்கி வைக்கும் மனப்பான்மையையும் கருத்தில் கொண்டு, உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது,” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மாற்றத்தை ஏற்படுத்திய நிர்பயா வழக்கு
வழக்கறிஞர் ப.பா மோகன் பிபிசி தமிழிடம் பேசும்போது, பாதிக்கப்பட்ட நபரின் அடையாளங்களை வெளியிடுவது தொடர்பாகவும், ஒரு காவல்துறை ஒரு வழக்கை எப்படிக் கையாள வேண்டும் என்பது தொடர்பாகவும் பல்வேறு சட்ட திருத்தங்கள் நிர்பயா வழக்குக்குப் பிறகு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார்.
“இந்திய ஆதார சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதிலும், அவர் எந்தவித அசௌகரியமும் இன்றி வழக்கை எதிர்கொள்ளவும் உருவாக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட நபர், தான் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தால் மட்டும் போதுமானது.
வழக்கை நேரடியாக விசாரணை செய்ய பெண் காவலர் அனுப்பி வைக்கப்படுவார். அவரிடம் தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரின் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை டிஜிட்டல் மயமாக்க வேண்டிய அவசியமில்லை. போக்சோ வழக்குகளைக் கையாலும் வகையில்தான் இத்தகைய வழக்குகளும் கையாளப்பட வேண்டும்,” என்று கூறுகிறார் அவர்.
“தனிப்பட்ட விவரங்களைத் தெரிவிக்காமல் ஒரு எஃ.ஐ.ஆரை வைத்து செய்திகளை உருவாக்க இயலும். அதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவு செய்தியாளர்களிடம் அந்த முதல் தகவல் அறிக்கைகள் இருக்கின்ற சூழலில், அது பாதிக்கப்பட்டவருக்கு எத்தகைய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்?” என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார்.
கவனக் குறைவாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது பிரிவு 166ஏ-வின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காவல்துறை நிர்வாக சீர்திருத்தங்கள்
கடந்த 2012ஆம் ஆண்டு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் வழக்குகளை எவ்வாறு விசாரிக்க வேண்டுமென்று சில நிர்வாக சீர்திருத்தங்களை அறிவித்தது. அதன்படி,
- பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு பதிவாகிறது என்றால், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி மையத்தை (Rape Crisis Cell) உருவாக்க வேண்டும்.
- காவல் நிலையங்களிலும், விசாரணை அறையிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய புகாரை ஆன்லைன் மூலமாக அளிக்கலாம்.
- காவல்கோட்ட வரையறை ஏதுமின்றி, எந்த காவல் நிலையமும் வழக்கைப் பதிவு செய்யலாம். எனவே அனைத்து போலீசாரும் எஃப்.ஐ.ஆரை அணுகும் வகையில் அது ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்த நபர்களை குற்றவாளிகளாகக் கருதக்கூடாது.
- பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கு காவல்துறையினருக்கு பயிற்சி வழங்க வேண்டும்.
இந்தக் குறிப்பிட்ட விவகாரத்திலும் காவல்துறை வர்மா கமிட்டியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஆன்லைனில் பதிவேற்றி இருக்கக்கூடுமா என்று வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டபோது, “வர்மா கமிட்டியின் நோக்கம் என்பது பாதிக்கப்பட்ட பெண்ணை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அலைக்கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதானே தவிர, அவரது விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை,” என்றார்.
அதோடு, “பொதுவாக பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும்போது ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்ற பெயரில்தான் பதிவு செய்யப்படும். அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் இருக்கக்கூடாது. இந்த ஜீரோ எஃப்.ஐ.ஆர் தான் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்,”என்றும் அவர் தெரிவித்தார்.
“காவல்துறையினர் நினைத்திருந்தால், எஃப்.ஐ.ஆரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வேறொரு பெயரைப் பதிவேற்றி இருக்கலாம். பெண்ணின் தனிப்பட்ட நலனைக் கருத்தில் கொண்டு காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இத்தகைய பிரச்னை ஏற்பட்டிருக்காது” என்று தெரிவிக்கிறார் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் எம்.கருணாநிதி.
“காவல்துறையினர் யாருக்குமே இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை என்று கூறிவிட இயலாது. போதுமான பயிற்சிகள் அனைவருக்கும் வழங்கப்படாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்,” என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.
தொடர்கதையாகும் நிகழ்வுகள்
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் தொடர்ச்சியாக இது குறித்துப் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்கள், பெயர், பெற்றோரின் பெயர்கள் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்கள் கசிந்த வண்ணம் இருப்பதாக சமூக செயற்பாட்டாளார்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இத்தகைய செயல்கள் பாதிக்கப்பட்ட நபரையும் அவரது குடும்பத்தினரையும் நீண்ட நாள் கவலைக்கு உள்ளாக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு, சமீபத்தில் கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு, தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு அரியலூரில் பட்டியலினப் பெண்ணுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை எனப் பல நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் அஜிதா பேசுகையில், “தனிப்பட்ட விவரங்களை வெளியே சொல்லக் கூடாது என்று காரணமின்றிச் சொல்லப்படுவதில்லை. பல நேரங்களில், பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை வெளியே கூறியபோது அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தொடர்ச்சியாக அவமானங்களைச் சந்திக்க நேரிட்டது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினருடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் அவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்,” என்று கூறினார்.
மேலும், “இது போன்று தொடர்ந்து காவல்துறையின் கவனக்குறைவு மற்றும் ஊடகங்களின் அலட்சியத்தால், இனி வரும் காலத்தில் இதுபோன்று பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிப்பதற்குத் தயக்கம் காட்டுவார்கள்” என்றும் கூறுகிறார் அஜிதா.
பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்கள் வெளியிடப்படும்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு நிபுன் சக்ஸேனா vs ஒன்றிய அரசு வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம், “துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய சமூகத்தில், பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள் குற்றவாளியைக் காட்டிலும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் வன்முறைக்கு ஆளாகியுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் மீது எந்தவிதமான தவறும் இல்லாத போதும்கூட அவரை இந்தச் சமூகம் தீண்டத்தகாதவராகப் பார்க்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது வீட்டு நபர்களே மீண்டும் ஏற்றுக் கொள்வதில்லை. உண்மையில், வீட்டின் ‘கௌரவத்தை’ காரணம் காட்டி பல பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார்கூடக் கொடுப்பதில்லை,” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், “பாதிக்கப்பட்ட நபர் நீதியை நாடி முதல்முறையாக வரும் அனுபவமே கசப்பான அனுபவமாக உள்ளது. அவர்கள் மீதுதான் தவறு என்று உணர வைப்பதைப் போன்று அந்தக் கசப்புணர்வு மாறுகிறது,” என்றும் கூறியுள்ளது.
‘நடவடிக்கை எடுக்க வேண்டும்’
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதை ஆனாலும், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டுகிறார் அஜிதா. இந்த ஆவணத்தை வெளியே கசியவிட்ட, விசாரணை அதிகாரிகள் மீதும், இந்த எஃப்.ஐ.ஆர். தொடர்பான தகவல்களை செய்தியாக்கிய ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட செய்தியாளர் மீதும் வழக்கு பதிய வேண்டும் என்றும் கூறுகிறார் அவர். சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, இத்தகைய குற்றங்கள் வருங்காலத்தில் குறையும் என்று கூறினார் அவர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான உ.வாசுகி, இந்த விவகாரம் குறித்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.
“விதிமுறைகள் தானாக வருவதில்லை. பல்வேறு காலகட்டங்களில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்களின் அடையாளங்கள் வெளியானதால் மோசமான அனுபவங்களைச் சந்தித்துள்ளனர். அந்த அனுபவத்தின் விளைவால்தான் அடையாளங்களை மறைப்பது குறித்த சட்டங்கள் உருவாயின.
நிர்பயா, அபயா என்று ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு பெயர் வைக்க காரணங்கள் உண்டு. இது காவல்துறைக்கும் நன்றாகவே தெரியும். இது போதிய விழிப்புணர்வின்றி கவனக் குறைவாக நடந்த செயல் என்று பொதுவாகக் கூறிவிட இயலாது,” என்கிறார் வாசுகி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.