செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள செம்பாக்கம், மடையத்தூர், இள்ளலூர், கொட்டமேடு, மாம்பாக்கம், காயார் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 13 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி பல்வேறு கிராமங்கள் உள்ளன.
அதேபோல், திருப்போரூர் ஒன்றியம், இள்ளலூர் ஊராட்சியில் செங்காடு, பெரியார் நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த 2 கிராமங்களுக்கும் செல்வதற்கு வனப்பகுதியை கடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மண் மற்றும் ஜல்லி கலந்து போடப்பட்டுள்ள சாலை தற்போது புழக்கத்தில் இருந்தாலும், புதிய சாலை அமைக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக புதிய சாலை அமைக்க முடியாத நிலை உள்ளது. செங்காடு கிராமத்தில் ஏராளமானோர்விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கத்தரி, வெண்டை, பூசணி, சுரைக்காய், அவரை போன்றவற்றை பயிரிட்டு, அவற்றை திருப்போரூர், செங்கல்பட்டு, தாம்பரம், கோயம்பேடு ஆகிய இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
திருப்போரூர் – இள்ளலுார் சாலையில் இருந்து செல்லும் செங்காடு சாலை 3 கி.மீ. தூரம் உடையது. இதில், 2 கி.மீ. சாலை மேம்படுத்தப்பட்டது. 1 கி.மீ. சாலை மேம்படுத்தப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரத்தில் இச்சாலையில் குளம்போல் நீர் தேங்குகிறது. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதனால், மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்வோர், கோமா நகர், தையூர், காயார் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அமைச்சர், ஆட்சியர், எம்.பி.,எம்எல்ஏ, உள்ளாட்சி பிரதிநிதி என அனைவரும் இதற்கு போராடிவிட்டனர்; தீர்வு தான் கிடைக்கவில்லை. எனவே, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இதுவரை ஆட்சேபனையில்லா சான்று வழங்க வனத்துறை முன் வரவில்லை. இதனால், 1 கி.மீ. துார சாலை அமைக்க இயலவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தவம் இருக்கிறோம்; ஆனால் தீர்வுதான் கிடைக்கவில்லை. அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை மனு கொடுத்து தீர்வு ஜீரோ தான்.
வனத்துறையின் இந்த கால தாமதமான நடவடிக்கையால் சாலைப் பணிகள் நடைபெறவில்லை. சில இடங்களில் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும் சாலைப்பணி என்றால் ஒப்பந்தம் எடுக்கவே ஆட்கள் வருவதில்லை. இதன் காரணமாக கிராம வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், அவசரத்துக்கு நகரப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே, மக்களின் பயன்பாட்டில் உள்ள சாலைகளை அவற்றின் தேவை மற்றும், முக்கியத்துவம் கருதி விதிவிலக்கு அளித்து, சாலை அமைக்க ஆட்சேபனையில்லா சான்றை வனத்துறை அளிக்க வேண்டும் திருப்போரூர் தொகுதியில் பின்தங்கியுள்ள கிராமங்களை இணைக்கும் பல சாலைகளில் ஒரு சில பகுதிகள், காப்புக்காடு பகுதிகளாக உள்ளன.
இதனால், அந்த கிராமச் சாலைகளை பராமரிக்கவோ, செப்பனிடவோ அல்லது சீரமைக்கவோ, வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் வனத்துறையினரிடம் எளிதாக அனுமதி கிடைக்காத காரணத்தால், அந்த சாலைகள் சீரழிந்து, பெரும் பள்ளத்தாக்குகளாக மாறி உள்ளன. இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பல சாலைகள் உள்ளன. எனவே, தமிழக அரசு இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.