சுனாமி ஆழிப் பேரலையில் சிக்கி உயிரிழந்த கள்ளப்பாடு பாடசாலை மாணவர்களுக்கு நினைவஞ்சலி கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும்போது ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்த 68 மாணவர்களுக்கு இன்று (26) கள்ளப்பாடு பாடசாலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமி கடல் அனர்த்தத்தில் உயீர்நீத்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பமானது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக கள்ளப்பாடு பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபிக்கு மலர் தூவி தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது ஆழிப்பேரலையில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக உதவும் கரங்கள் அமைப்பால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காணி உத்தியோகத்தர் சோதிநாதன் சேந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார், கள்ளப்பாடு அ.த.க பாடசாலை அதிபர் ம.சுரேஸ்தரன், பிரதி அதிபர் அகிலா விஜயரட்ணம், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.