கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்பு

by wp_fhdn

கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்பு கனடாவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றியும், மேற்படிப்பு படித்தும் வருகிறார்கள். அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை உள்ளது. இதில் அதிகளவில் இந்தியர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் கனடா குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் அவர்களது கல்வி, வேலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். கனடாவில் வேலை பார்ப்பதற்கான நிறுவனம் அளிக்கும் நியமன உத்தரவு கடிதத்துக்கு, 50 முதல் 200 புள்ளிகள் வரை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள், இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.போலி உத்தரவு கடி தங்கள் மூலம் பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்த உத்தரவால் கனடாவில் தற்போது தற்காலிகமாக பணியாற்றும் மற்றும் பணியாற்றுவதற்கான பணி உத்தரவு பெற்றுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

இதுகுறித்து கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, `நமது பொருளாதாரத்திற்குத் தேவையான திறமையாளர்களை ஈர்க்கும் அதே வேளையில், மோசடியைக் குறைப்பதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.கனடாவின் வெற்றிக்கு குடியேற்றம் எப்போதுமே ஒரு மூலக்கல்லாக இருந்து வருகிறது. கனடாவிற்கு சிறந்த மற்றும் பிரகாசமானவற்றை வரவேற்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், இதன் மூலம் அனைவருக்கும் தரமான வேலைகள், வீடுகள் மற்றும் அவர்கள் செழிக்கத் தேவையான ஆதரவைப் பெறலாம்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்