இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.
உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் இன்று இரவு 10.30 மணியளவில் அறிவித்தது.
இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 26ஆம் தேதி சுயநினைவை இழந்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அவர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பல முயற்சிகள் செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவினை முதல் பிரதமர் வரை
கடந்த 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் கா எனும் கிராமத்தில் பிறந்தார் மன்மோகன் சிங்.
தற்பொழுது அந்த கிராமம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.
தேசப் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பல லட்சம் இந்து மற்றும் சீக்கிய குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.
அமிர்தசரஸில் உள்ள இந்து கல்லூரி, பஞ்சாப் பல்கலைக்கழகம், பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வி கற்ற மன்மோகன் சிங் 1962இல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது கௌரவம் மிக்க ஆடம் ஸ்மித் பரிசை வென்றவர் சிங்.
கடந்த 1971இல் வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகராக அரசுப் பணியில் சேர்ந்தார். ஒரே ஆண்டிலேயே அவருக்கு அடுத்த முக்கியப் பதவி கிடைத்தது. 1972இல் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் மன்மோகன் சிங்.
கடந்த 1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் 1985 முதல் 1987 வரை திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர்.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று நரசிம்மராவ் தலைமையில் 1991ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கப்பட்டபோது அந்நியச் செலாவணி பற்றாக்குறை போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்தியா இருந்தது.
அந்த காலகட்டத்தில் அரசியல் பதவி எதையும் வகிக்காத மன்மோகன்சிங் நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் மூளையாக கருதப்படும் மன்மோகன் சிங், 1991-1996 ஆட்சிக் காலத்தில் நரசிம்ம ராவ் உடன் இணைந்து இந்தியாவில் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றை அமலாக்கினார்.
சிறந்த நிதி அமைச்சருக்கான ‘ஆசியா மணி அவார்ட்’ (Asia Money Award for Finance Minister of the Year) விருதை 1993, 1994 ஆகிய ஆண்டுகளிலும், ‘யூரோ மணி அவார்ட்’ (Euro Money Award for Finance Minister of the Year) விருதை 1993ஆம் ஆண்டிலும் பெற்றார் மன்மோகன் சிங்.
கடந்த 1987இல் இந்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றவர் மன்மோகன் சிங்.
காங்கிரஸ் கட்சி 2004 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பொறுப்பேற்க மறுத்தபோது மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமர் மோதி, ராகுல் காந்தி இரங்கல்
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மன்மோகன் சிங் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
நான் ஒரு வழிகாட்டியை இழந்துவிட்டேன். அவரைப் போற்றிய கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது பதிவில், “புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், நாட்டின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு,” என்று தெரிவித்துள்ளது.
மேலும், “இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தாருக்கு இந்த துன்பத்தைத் தாங்கும் ஆற்றலையும் இறைவன் வழங்க வேண்டும். மன்மோகன் சிங் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆற்றிய பங்குக்கு காங்கிரஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது,” என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. தாழ்மையான நிலையில் இருந்து வளர்ந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். அவர் நிதியமைச்சர் உள்படப் பல்வேறு அரசுப் பதவிகளிலும் பணியாற்றினார்.
பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையைப் பதித்தார். நாடாளுமன்றத்தில் அவரின் தலையீடுகளும் புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்,” என்று தனது இரங்கலில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து நாட்டின் நிதி அமைச்சராகவும், பிரதமராகவும் உயர்ந்தவர். இந்தியாவின் ஆட்சியில் மன்மோகன் சிங் முக்கியப் பங்காற்றினார், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
மன்மோகன் சிங் மரணத்திற்குத் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள கௌதம் அதானி, “டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு வருத்தமளிக்கிறது. இந்தியாவை மறுவடிவமைப்பு செய்து அதன் கதவுகளை உலகுக்குத் திறந்துவிட்ட 1991 சீர்திருத்தங்களில் அவரது முக்கியப் பங்கை வரலாறு என்றென்றும் மதிக்கும்.
மென்மையாகப் பேசிய ஓர் அரிய தலைவர், ஆனால் சாதனை படைத்தவர். அவரது செயல்கள் மூலம் முன்னேறினார், அவரது தலைமை, பணிவு மற்றும் தேசத்திற்கான சேவை ஒரு தலைசிறந்த பாடமாக உள்ளது. அது வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது எக்ஸ் பதிவில், “டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருடைய ஞானம் மற்றும் எளிமைப் பண்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.
“பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, “முன்னாள் முதல்வர் கருணாநிதி டாக்டர் மன்மோகன் சிங்குடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின,” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்ததாகவும் தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப் பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார்.
அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார். பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார்,” என்றும் தனது இரங்கலில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அவரது நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன. அவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் மாதிரியிலான வளர்ச்சியானது நாட்டிற்கு ஒரு புதிய பாதையை உருவாக்கியது. அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு,” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“அவர் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார், அவர் குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாகச் செய்தார். இந்திய பொருளாதாரம் மற்றும் தேசத்திற்கான சேவைகளுக்கு அவர் ஆற்றிய இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும்,” என்று தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
– இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.