மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் நத்தார் ! உலகம் முழுவதும் இன்று நத்தார் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர்.
வத்திகான் நகரில் உள்ள புகழ்பெற்ற சென் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் நத்தார் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள்.
இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார்.
ஒளி அல்லது பேரொளி என்பது இருளற்ற நிலையாகும். ஒளியற்ற நிலை என்பது பார்வையிழந்த நிலையாகும். பார்வையிழந்த நிலையில் ஒரு மனிதனோ மனித குலமோ பயணம் செய்ய முடியாது. எனவேதான் இறைவன் பாவ இருள் சூழ்ந்த உலகில் வாழும் மனிதருக்கு தன் மகனை ஒளியாக அனுப்பி வைக்கின்றார்.
பாலகன் இயேசுவே இந்த ஒளி. அவரின் பிறப்பே எமக்கான விடியல்.
அமைதியான விடியலை நோக்கி நாம் பயணம் செய்ய பாலகன் இயேசு என்னும் மாபெரும் ஒளி எம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டுகொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கும் என நாம் நம்புவோம்.