பிரதமராக இருந்த சரண்சிங் அவமதித்த ஆறே மாதங்களில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானது எப்படி?
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி இந்தி
-
கடந்த 1977 பொதுத் தேர்தலில் தோற்ற பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து கர்நாடகாவின் சிக்கமகளூரு தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டார். வாக்குப்பதிவு நாளன்று அப்பகுதி முழுவதும் பெருமழை பெய்தது.
அந்த நிலையிலும் நான்கில் மூன்று பங்கு வாக்காளர்கள் வாக்கு செலுத்தினர். அன்றைய தினமே இந்திரா காந்தி டெல்லி திரும்பினார்.
இரண்டு தினங்கள் கழித்து, எதிர்க்கட்சித் தலைவராக சோவியத் ஒன்றியத்தின் தேசிய தின விழாவில் கலந்துகொள்ள சோவியத் தூதரகம் சென்று கொண்டிருந்தபோது, இடைத்தேர்தலில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அவருக்குத் தகவல் கிடைத்தது.
நான்கு நாட்கள் கழித்து, இந்திரா காந்தி லண்டன் செல்ல வேண்டியிருந்தது. சோனியா காந்தியும் அவருடன் லண்டன் சென்றார். டெல்லி திரும்புவதற்கு முன்பு இருவரும் லண்டனின் பிரபலமான ஆக்ஸ்ஃபோர்டு தெருவில் ராகுல் மற்றும் பிரியங்காவுக்காக ஷாப்பிங் சென்றனர்.
அந்த சமயத்தில், நாடாளுமன்றத்திலிருந்து தன்னை நீக்கி, கைது செய்வதற்கான வேலைகள் டெல்லியில் தொடங்கியிருந்ததை அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, மாருதி வழக்கு குறித்து விசாரித்த தொழில்துறை அமைச்சகத்தை சேர்ந்த நான்கு அதிகாரிகளை அவர் தொந்தரவு செய்து தவறிழைத்ததாக நாடாளுமன்ற சிறப்புரிமை குழு கூறியது.
அக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே, ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு இந்திரா காந்தியை தண்டிக்க வேண்டும் என முடிவெடுத்தது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் எந்தவொரு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படுவதற்கு முன்பாகவே, ஜனதா கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பயன்படுத்தி, இந்திரா காந்தியை நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை சிறைக்கு அனுப்ப வேண்டும் எனவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முடிவெடுத்தனர்.
இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் புபுல் ஜெயாகர், “ஷா ஆணையத்தின் விசாரணை தோல்வியில் முடிந்த பிறகு, தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை சிதைக்க தனக்கு எதிராக கைது நடவடிக்கை, சிபிஐ விசாரணை, சிறப்புரிமை குழு விசாரணை ஆகியவை மேற்கொள்ளப்படும் என்பதை இந்திரா காந்தி அறிந்திருந்தார். எனவே, மக்களவை முன்பாக தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என அவர் முடிவெடுத்தார்” என எழுதுகிறார்.
மக்களவையில் இந்திரா காந்தியின் பேச்சு
இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பேசத் தொடங்கிய உடனேயே, ஜனதா கட்சி எம்.பிக்கள் அவரை அமைதியாக்குவதற்காக தொடர்ந்து கூச்சலிட்டனர்.
இந்திரா காந்தி தன்னுடைய உரையில், “ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு நான் தவறிழைத்ததாக ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. எனவே, என்னை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு எதையும் நான் கூறுவதற்கு அர்த்தமில்லை. ஆனால், நான் நாடாளுமன்றத்தின் எந்த சிறப்புரிமையையும் மீறவில்லை என்பதை தெளிவாக கூறுவதற்கான உரிமை எனக்கு உள்ளதா?” என பேசினார்.
“இந்த பிரச்னை தொடர்பாக நாடு முழுதும் பல நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், இந்த பிரச்னை தொடர்பாக முன்முடிவுடன் என்னை தண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.”
மேலும், “அரசின் பழிவாங்கும் நோக்கத்தை இது காட்டுகிறது. வரலாற்றில் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் எதிர்க்கட்சித் தலைவரை அவமதிக்க இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்லை,” என்றார்.
‘நான் மீண்டும் வருவேன்’
இந்திரா காந்தி கூறுகையில், “அவசர காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக பல தளங்களில் நான் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுள்ளேன். மீண்டும் இங்கே மன்னிப்பு கேட்கிறேன்.” என்றார்.
“நான் ஒரு எளிய நபர். ஆனால், சில விழுமியங்கள் மற்றும் குறிக்கோள்களுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருந்துள்ளேன். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு தண்டனையும் என்னை வலுப்படுத்தும். என்னுடைய பெட்டியை நான் ஏற்கெனவே தயார் செய்துவிட்டேன். கதகதப்பான உடைகளை மட்டுமே அதில் நான் வைக்க வேண்டும்.” என்றார்.
தன்னுடைய உரையை முடித்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்து வெளியேறினார்.
ஸ்பானிய எழுத்தாளர் ஜேவியர் மோரோ தன்னுடைய ‘தி ரெட் சாரி’ (The Red Sari) எனும் புத்தகத்தில், “வெளியேறும்போது மீண்டும் திரும்பி, நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்த்துவிட்டு, ‘நான் மீண்டும் வருவேன்’ என கூறினார்” என எழுதியுள்ளார்.
அன்றைய தினம் சோனியா காந்தி இரவு உணவாக பாஸ்தா தயார் செய்திருந்தார். இனிப்புக்காக கொய்யா க்ரீம் மற்றும் அலகாபாத்தின் பிரபலமான மாம்பழ இனிப்பு தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த மாங்காய் இனிப்பு எப்போதும் இந்திரா காந்திக்கு அவருடைய குழந்தைப் பருவத்தை ஞாபகப்படுத்தும். அதை சாப்பிட்ட பின்னர் பிரியங்காவை வார்த்தைப் புதிர் விளையாட அழைத்தார் இந்திரா.
இந்திராவின் கைதுக்கு எதிராகக் கடத்தப்பட்ட விமானம்
அதற்கடுத்த நாள் இந்திரா கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான, ‘இந்திரா, இந்தியாஸ் மோஸ்ட் பவர்ஃபுல் பிரைம் மினிஸ்டர்’ எனும் புத்தகத்தில் சாகரிகா கோஷ், “இந்திராவை சிறைக்கு அனுப்பியதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்” என எழுதியுள்ளார்.
“பொம்மைத் துப்பாக்கி மற்றும் கிரிக்கெட் பந்து ஆகியவற்றின் மூலம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்த தேவேந்திரா மற்றும் போலாநாத் பாண்டே ஆகிய இரு நபர்கள் முயற்சி செய்தனர். லக்னோவிலிருந்து டெல்லி சென்ற விமானத்தை அவர்கள் வலுக்கட்டாயமாக பனாரஸுக்குத் திருப்பிவிட்டனர்.”
அங்கு அவர்கள், இந்திரா காந்தியை உடனடியாக விடுவித்து, சஞ்சய் காந்திக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, அவர்கள் இருவருக்கும் உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்தேர்தலில் இருவரும் வென்றனர்.
ஜன்னல் கம்பிகளுக்குப் போர்வை
திகார் சிறையில் இந்திரா காந்தி, அவசர காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்த அறையிலேயே அடைக்கப்பட்டார். அங்கு தினமும் காலை 5 மணிக்கு அவருடைய நாள் தொடங்கும்.
புபுல் ஜெயார், “காலை எழுந்தவுடன் அவர் யோகா மற்றும் பிராணயாமா செய்வார். பின்னர், அதற்கு முந்தைய நாள் மாலை சோனியா கொண்டு வந்த குளிர்ந்த பாலை அருந்துவார். அதன்பின், அவர் மீண்டும் தூங்க செல்வார்.” என எழுதியுள்ளார்.
“பின்னர் எழுந்தவுடன் குளித்துவிட்டு, சிறிது நேரம் தியானம் செய்வார். பின்னர் புத்தகம் படிப்பார். சிறையில் ஆறு புத்தகங்களை தன்னுடன் வைத்திருக்க அவர் அனுமதிக்கப்பட்டார். வீட்டிலேயே சமைத்த உணவை அவர் சாப்பிடுவார். சோனியா காந்தி, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் உணவு கொண்டு வருவார்.”
இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் கேத்தரீன் ஃபிராங்க், “இந்திரா காந்தி உறங்குவதற்கு அவருக்கு மரக்கட்டில் வழங்கப்பட்டது. ஆனால், மெத்தை வழங்கப்படவில்லை. மேலும், ஜன்னலில் திரைச்சீலைகளோ அல்லது கண்ணாடியோ இல்லை. கம்பிகள் மட்டுமே இருந்தன” என எழுதியுள்ளார்.
“டிசம்பர் மாதத்தில் இரவு நேரத்தில் மிகவும் குளிராக இருக்கும். அதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள, போர்வைகளை ஜன்னல் கம்பிகளில் மாட்டிவிடுவார்.”
சரண் சிங்குக்கு பூங்கொத்து
அடுத்த நாள், அவரை பார்க்க ராஜீவ் காந்தி, சோனியா வந்திருப்பதாக சிறை வார்டன் இந்திராவிடம் கூறினார்.
இம்மாதிரியான சூழலில் இந்திரா காந்தி சிறையிலிருப்பதை பார்த்து அவர்கள் வருந்தினர்.
அவர்களிடம் பேரக்குழந்தைகள் குறித்துக் கேட்டார் இந்திரா.
ஜேவியர் மோரோ எழுதுகையில், “‘பிரியங்கா உங்களை இங்கு வந்து பார்க்க விரும்பினாள்,’ என ராஜீவ் இந்திராவிடம் கூறினார். பிரியங்காவின் பெயரைக் கேட்டதும் இந்திராவின் முகம் பிரகாசமானது.” என எழுதியுள்ளார்.
“அடுத்த முறை வரும்போது பிரியங்காவையும் அழைத்து வாருங்கள். சிறை எப்படி இருக்கும் என்பதை அவர் பார்ப்பது நல்லது. நேரு குடும்பத்தில் ஆரம்பம் முதலே சிறையில் உள்ள குடும்ப உறுப்பினர்களை வந்து சந்திப்பது வழக்கம்தான்,’ என இந்திரா காந்தி கூறியுள்ளார்.”
அடுத்த நாள், ராஜீவும் சோனியாவும் இந்திரா காந்தியை பார்க்க வந்தபோது பிரியங்காவையும் உடன் அழைத்து வந்தனர்.
அங்கிருந்து திரும்புவதற்கு முன்னர், தன் சார்பாக சரண் சிங்கின் பிறந்த நாளுக்காக அவருக்கு பூங்கொத்து மற்றும் வாழ்த்து செய்தி அனுப்புமாறு சோனியாவிடம் கேட்டுக்கொண்டார்.
சரண் சிங் வீட்டுக்கு சென்ற இந்திரா காந்தி
ஜனதா கட்சியின் ஆட்சி முடிவுக்கு வருவதற்கு இன்னும் மூன்றாண்டு காலம் இருந்தது. ஆனால், ஜனதா கட்சியில் தலைமைப் பதவிக்காக, முக்கிய தலைவர்களுக்குள் மோதல் போக்கு இருந்ததை இந்திரா காந்தி உணர்ந்தார்.
பிரதமர் மொரார்ஜி தேசாய் மீது சரண் சிங் மிகவும் கோபமாக இருந்தார். சரண் சிங்கை தான் ஆதரிப்பதன் மூலம், அவருக்கும் மொரார்ஜி தேசாய்க்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கும் என இந்திரா நினைத்தார்.
சரண் சிங்குக்கு பூங்கொத்து அனுப்பியதற்கு இது காரணமாக இருக்கலாம்.
சிறையிலிருந்து வெளிவந்த உடனேயே, சரண் சிங்கிடம் இருந்து இந்திரா காந்திக்குக் கடிதம் காத்திருந்தது. அதில், புதிதாகப் பிறந்த தன் பேரக்குழந்தையை காண வருமாறு இந்திராவுக்கு அழைப்பு விடுத்தார் சரண் சிங்.
புபுல் ஜெயாகர் எழுதுகையில், “இந்திரா காந்தி சரண் சிங்கின் வீட்டுக்கு சென்றபோது அவரும் அவருடைய மனைவியும் வரவேற்றனர். அந்த நிகழ்ச்சிக்கு மொரார்ஜி தேசாய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மொரார்ஜியும் இந்திராவும் ஒரே சோஃபாவில் அமர்ந்திருந்தனர்.”
“அந்த சமயத்தில் மொரார்ஜி மிகவும் அசௌகரியமாக தோன்றினார். இந்திராவிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சரண் சிங் மற்றும் அவருடைய மனைவியிடம் இந்திரா தன்மையாக பேசினார். இனிப்புகளை உண்டார். குழந்தையை மடியில் ஏந்தி, ஆசீர்வாதம் செய்தார்.”
சரண் சிங் மீதான இந்திரா காந்தியின் அதிருப்தி
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து, இந்திரா சிக்கமகளூரு சென்றார்.
அங்கு வாக்காளர்களை சந்தித்த அவர், “உங்களுடைய முடிவு சட்ட விரோதமாகவும் வேண்டுமென்றேவும் ஜனதா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதனிடையே, மொரார்ஜி தேசாய் அரசாங்கம் கவிழ சரண் சிங்குக்கு ஆதரவு வழங்கினார் இந்திரா. 28 ஜூலை 1979-ல் சரண் சிங் பிரதமராக பதவியேற்றார்.
பதவியேற்றவுடனேயே, இந்திரா காந்திக்கு அவர் நன்றி தெரிவித்தார். அவரை நேரில் சந்திப்பேன் என்றும் கூறினார்.
முதலில், வெல்லிங்டன் மருத்துவமனையில் பிஜு பட்நாயக்கை பார்த்துவிட்டு, திரும்பும்போது வழியில் வெல்லிங்டன் சாலை, எண். 12-ல் உள்ள இந்திரா காந்தியின் வீட்டுக்கு செல்வது என முடிவெடுத்தார்.
“ஆனால், கடைசி நேரத்தில் சரண் சிங்கின் உறவினர்கள் சிலர், அவருடைய காதில், ‘இப்போது நீங்கள் பிரதமர், ஏன் நீங்கள் அவருடைய இடத்திற்கு செல்கிறீர்கள், அவர்தான் உங்களை வந்து பார்க்க வேண்டும்,’ என கூறியுள்ளனர்” என நினைவுகூர்கிறார் முன்னாள் ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சத்யபால் மாலிக்.
நீரஜ் சௌத்ரி தன்னுடைய ‘ஹௌ பிரைம் மினிஸ்டர்ஸ் டிசைட்’, எனும் புத்தகத்தில், “தன்னுடைய வீட்டின் முகப்பிலேயே பூங்கொத்துடன் சரண் சிங்குக்காக காத்துக்கொண்டிருந்தார் இந்திரா காந்தி. அவருடன் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் 25 பேரும் உடனிருந்தனர்” என எழுதியுள்ளார்.
“சரண் சிங்கின் கார் அணிவகுப்பு, தன்னுடைய வீட்டின் முன்பாக கடந்து சென்றதையும், ஆனால் தன் வீட்டுக்குள் நுழையாததையும் இந்திரா பார்த்தார். பூங்கொத்தை தூக்கி வீசியெறிந்துவிட்டு வீட்டுக்குள் சென்றார் இந்திரா.”
அந்த தருணத்தில்தான் சரண் சிங்கின் அரசாங்கம் வெகுநாட்களுக்கு நீடிக்காது என்பதை தான் உணர்ந்ததாக சத்யபால் மாலிக் என்னிடம் கூறினார்.
பின்னர், இந்திரா காந்தியிடம் பேசுவதற்கு சரண் சிங் முயற்சியெடுத்தார். ஆனால், அதற்கு இந்திராவின் பதில், ‘இப்போது வேண்டாம்’ என்பதாகவே இருந்தது.
இந்திராவின் ஆக்ரோஷமான தேர்தல் பிரசாரம்
ஆகஸ்ட் 19 அன்று, சரண் சிங்குக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றார் இந்திரா காந்தி. இதனால், நாடாளுமன்றத்தை ஒருமுறை கூட எதிர்கொள்ளாமலேயே தன் பதவியிலிருந்து சரண் சிங் விலக நேர்ந்தது.
குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி மக்களவையை கலைத்து, தேர்தல்களை நடத்துமாறு அறிவித்தார்.
ஹவி மோரோ எழுதுகையில், “நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் இந்திரா காந்தி. பல காட்டன் புடவைகள், சுடுநீருக்கு ஒன்று, குளிர்ந்த பாலுக்காக ஒன்று என இரண்டு பிளாஸ்க்குகள், இரண்டு தலையணைகள், வேர்க்கடலைகள், கொஞ்சம் உலர் பழங்கள் மற்றும் ஒரு குடை ஆகியவை அடங்கிய இரு சூட்கேஸுகளுடன் நாடு முழுதும் பிரசாரம் மேற்கொண்டார்.” என எழுதியுள்ளார்.
“மொத்தமாக 70 ஆயிரம் கி.மீ பயணம் செய்தார். தினமும் சுமார் 20 தேர்தல் கூட்டங்களை அவர் நடத்தினார்.”
அந்த சமயத்தில் நான்கில் ஒரு வாக்காளர் இந்திராவை பார்த்திருக்கலாம் அல்லது அவருடைய பேச்சைக் கேட்டிருக்கலாம் என மோரோ மதிப்பிட்டுள்ளார்.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையை தேர்தல் பிரச்னையாக மாற்றினார் இந்திரா. ‘அரசாங்கத்தை நடத்த முடிபவர்களுக்கு வாக்களியுங்கள்,’ என்பதுதான் அவருடைய தேர்தல் பிரசாரம்.
பிரதமராக திரும்பிய இந்திரா
ஜனவரி 6 அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே, 33 மாதங்களுக்கு முன்பு தாங்கள் புறக்கணித்த ஒரு பெண்ணுக்கு மக்கள் வாக்கு செலுத்தியதற்கான சமிக்ஞைகள் தெரிந்தன.
இந்திரா காங்கிரஸ் மொத்தமாக 353 இடங்களை வென்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி, வெறும் 31 இடங்களை மட்டுமே பிடித்தது.
ஜனவரி 14, 1980 அன்று, இந்திரா காந்தி, குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா அரங்கில் நான்காவது முறையாக பதைவியேற்றார் இந்திரா.
மீண்டும் இந்தியாவின் தலைவரானது (பிரதமர்) குறித்து எப்படி உணருகிறீர்கள் என வெளிநாட்டு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, “நான் எப்போதும் இந்தியாவின் தலைவராகவே இருந்துள்ளேன்,” என பதிலளித்தார். (James Maynor, ‘Nehru to the Nineties, The Changing Office of Prime Minister in India,’ p. 8)
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு