பண்டிகை காலத்தில் மேலதிக ரயில்களை இயக்க முடியாத நிலை – ரயில்வே திணைக்களம் கவலை ! ரயில் ஓட்டுநர்கள் மற்றும் காவலர்கள் பற்றாக்குறையால் பண்டிகைக் காலத்துக்கு தேவையான கூடுதல் ரயில்களை இயக்க முடியாத நிலைமை காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னதாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், போக்குவரத்துப் பிரிவின் பிரதிப் பொதுமுகாமையாளருமான எம்.ஜே.இந்திபோலேஜ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,
பண்டிகைக் காலத்தில் கடந்த ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் நிலைமை இருந்தாலும் தற்போது அந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இரண்டு கூடுதல் ரயில்களை மட்டுமே இயக்கக்கூடிய நிலைமையே உள்ளது.
ரயில் ஓட்டுநர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் இந்த ஆண்டு போதுமான ரயில்களை இயக்க முடியாது போயுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இரு வழியில் இரண்டு சிறப்பு ரயில்கள் மட்டுமே கூடுதலாக இயக்கப்படுகின்றன. சாதாரண ரயில்களையும் சிரமங்களுடன் தான் இயக்குகிறோம்.
ரயில்வே திணைக்களத்துக்குள் நிலவும் பணியாளர் பற்றாக்குறை தான் இதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. 2017 முதல் ரயில் ஓட்டுநர்கள் மற்றும் காவலர்களுக்கான ஆட்சேர்ப்புகள் எதுவும் இல்லை. இந்தக் காலகட்டத்தில், பலர் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால், வழக்கமான ரயில் செயற்பாடுகளும் பாதிக்கப்படும். இருப்பினும், தற்போதைய அரசாங்கம் நிலைமையைப் புரிந்துகொண்டுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர்கள் சில நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்திற்கு முன்பு ஏதேனும் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்றார்.